ஞாயிறு, 19 ஜூலை, 2015

வரவேற்போம்...! பலப்படுத்துவோம்...!            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு பல்வேறு காரணங்களுக்காக கடந்த காலங்களில் விலகியிருக்கும் அல்லது விலக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் மீண்டும் கட்சிக்குள் இணைவது என்ற முடிவுக்கு வந்திருப்பது என்பது வரவேற்கத்தக்கது.   இன்றைக்கு இந்த தேசம் இருண்ட தேசமாக மதவெறிக்கூட்டத்தின் சூதுகளாலும், சூழ்ச்சிகளாலும் சூழப்பட்டு, விழுங்கப்பட்டு வரும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கையில் அதை மீட்டெடுக்க - இந்த தேசத்து மக்களை காப்பாற்ற  இடதுசாரிக்கட்சிகளை பலப்படுத்தவேண்டியது என்பது ஒரு அத்தியாவசிய - அவசிய தேவையாகும். அப்படி செய்யவில்லை என்றால் நாசமாய் போய்கொண்டிருக்கும் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். 
             இந்த நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சத்தில் தான் நாம் நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறோம். நரேந்திரமோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் கையில் இன்னும் நான்கு ஆண்டுகள் சிக்கியுள்ளன. அவர்கள் இந்த காலக்கட்டத்தில் நிகழ்த்துவதற்கு ஏகப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் 2019 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ''வேலைகளை'' இப்போதே தொடங்கி திறமையாக செய்து வருகின்றார்கள்  என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் பாரதீய ஜனதக்கட்சியும், அதனை வழிகாட்டி அழைத்துச்செல்லும் ஆர்.எஸ்.எஸ் வும், விஷ்வ இந்து பரிட்சத்தும் 2020-ஆம் ஆண்டில் பல்வேறு மதங்களையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சார்ந்தவர்கள் காலகாலமாய் வாழும் இந்த நாட்டை - இந்திய தேசத்தை ''இந்து தேசமாக'' அறிவிப்பதற்கான தயாரிப்பு வேலைகளில் இப்போதே இறங்கியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. காலகாலமாக கட்டிக்காத்துவந்த இந்த நாட்டின்  ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி   இவர்களின் நிகழ்ச்சி நிரல்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி இறுதியில் ''இந்து தேசத்தை'' உருவாக்குவது என்ற இவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளை பலமிக்க கட்சிகளாக மாற்றிடவேண்டும்.  
          ஒரு பக்கம் போதை, சினிமா, நவீன கலாச்சாரம் என தடுமாறி தடம் மாறி தவறான பாதைகளில் சென்றுகொண்டிருக்கிற இளைஞர்களுக்கு அவர்களுக்கான மாற்று உலகத்தை காண்பித்து   இடதுசாரிக்கட்சிகள் பக்கம்   ஈர்க்கவேண்டும். இன்னொரு பக்கம்  முன்னொரு காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகியிருந்தாலும்   அல்லது விலக்கப்பட்டிருந்தாலும், கட்சியை விட்டு   வெளியே  இன்றும்  அதே கொள்கைகளோடு மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல மூத்தத்தலைவர்களை  மீண்டும் கட்சிக்குள் இணைப்பது என்பதும் கட்சியை பலப்படுத்தும் மற்றொரு வேலையாகும். 
           அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியிருக்கும் பாராளுமன்ற முன்னாள் மக்களவைத்தலைவர் தோழர்.சோம்நாத் சாட்டர்ஜி அவர்களும், கேரள மாநிலத்தில் கட்சியிலிருந்து  விலகி தன் தோழர்களோடு தன் கட்சியொன்றை நடத்திவரும் மூத்தத்தோழர் கவுரி அம்மா அவர்களும் மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைவது என்பது வரவேற்கத்தக்கது. இவர்கள் கட்சியில் இணைவதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகள் பலப்படும் என்ற நம்பிக்கை துளிர்கிறது. இன்னும் வெளியே இருக்கும்  இவர்களைப் போன்ற மூத்தத்தோழர்களை வரவேற்போம்... கட்சியை பலப்படுத்துவோம்... தேசத்தை வீழ்ச்சியிலிருந்து காப்போம்...!

கருத்துகள் இல்லை: