செவ்வாய், 14 ஜூலை, 2015

இசை மேதை - மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி மறைந்தார்...!


  என் மனங்கவர்ந்த இசையமைப்பாளர் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார்... என்னை போன்ற அவரது இரசிகர்கள் மட்டுமன்றி இசை உலகமே  ஒரு மாபெரும் இசை மேதையை இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். சுமார் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்து இமயமாய் உயர்ந்து நிற்கும் அந்த மேதைக்கு இன்று வரையில் மத்திய அரசு விருது எதுவும் வழங்கப்படாதது அந்த விருதுகளுக்கு வழங்கப்பட்ட அவமரியாதை என்பது தான் உண்மை. அதுவும் இப்போது போல் கேட்டதைக்கொடுக்கும் கணினி இல்லாத காலத்தில் பாட்டுக்கு மெட்டமைத்து கடினமாக உழைத்து உருவாக்கிய அத்துனை பாடல்களும் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைப் போல இனிப்பானவை. அதுமட்டுமல்லாமல் புதிய இசையமைப்பாளர்களையும், இளைஞர்களையும் தான் என்ற அகம்பாவம் இல்லாமல் ஊக்கப்படுத்துபவர். ஈகோ பார்க்காமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடியவர்.   தன்னுடைய கடைசி காலம் வரையில் இசைக்காகவே வாழ்ந்து மறைந்துவிட்டார். 
             
             தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய பல்வேறு  கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்த அந்த மெல்லிசை மாமன்னரை மறக்கவே முடியாது. 

               மறைந்த அந்த இசை மேதைக்கு என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்....!

              1992-ஆம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சிக்காக புதுச்சேரி கம்பன் கலையரங்கம் வந்தபோது அவரை சந்தித்து கதராடை அணிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம்.

2 கருத்துகள்:

Muthu Nilavan சொன்னது…

ஆமாம் தோழரே அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டதும், அந்த இசைமேதை ஒரு குழந்தையைப் போல இடையிடையே பேசி-பாடியதையும் மறந்துவிட முடியாது.
அவர் உருவாக்கிய பலருக்கும் பத்மவிருதுகளை வழங்கிய இந்திய அரசு அவருக்கு அதைக் கொடுக்காமலே போனது பற்றி நான் தினமணியிில் எழுதிய ஒரு கட்டுரையில் நினைவு கூர்ந்ததைப் பார்த்துவிட்டு, திரைக்கலைஞர் டெல்லிகணேஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.. அந்தக் கட்டுரை இதுதான்-http://valarumkavithai.blogspot.com/2013/09/blog-post_4.html. தங்களின் உடனடிப் பதிவுக்கு என் பாராட்டுகளும் நன்றியும் தோழர். வணக்கம்.

வேகநரி சொன்னது…

பெரியவருக்கு அஞ்சலி.