செவ்வாய், 3 டிசம்பர், 2013

காரைக்குடியில் நல்ல காரியங்கள் செய்யும் '‘நண்பர்கள் டிரஸ்ட்’' இளைஞர்கள்...!

  இந்தத் தலைமுறைக்கு குருதி...! அடுத்த தலைமுறைக்கு மரக்கன்று...!      

        ''வதனப்புத்தகத்தில் (ஃபேஸ் புக்) வம்பு வளர்த்தல்…அலைபேசியில் அர்த்தமற்ற கருத்துப் பரிமாற்றங்கள் - இன்றைய இளைஞர் சமுதாயம் இப்படித்தானே பொழுதைக் கழிக்கிறது'' என்று சொல்பவர்களை மாற்றி யோசிக்க வைக்கிறது காரைக்குடியில் உள்ள ‘நண்பர்கள் டிரஸ்ட்’!
          6 வருடங்களுக்கு முன்பு நான்கு இளைஞர்கள் சேர்ந்து விளையாட்டுப் போக்கில் உருவாக்கிய ‘நண்பர்கள் டிரஸ்ட்’ என்பது  இன்றைக்கு, ஆயிரக்கணக்கானவர்களின் அபிமானத்தைச் சம்பாதித்துப் போட்டிருக்கிறது.
          இவர்கள் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்கள்? டிரஸ்ட் பொருளாளர் ஜெகதீஸ்வரன் பேசுகிறார்,  “சமுதாயத்துல, வாலிப பசங்கன்னா இப்படித்தான் இருப்பாங்கன்னு ஒட்டுமொத்தமா ஒரு தப்பான கண்ணோட்டம் இருக்கு. பசங்க கெட்டுப்போறாங்கன்னா அதுக்கு நம்ம சுத்தி இருக்கிற சூழல் முக்கியக் காரணம். ’குடி குடியைக் கெடுக்கும்’னு விளம்பரப்படுத்திக்கிட்டே தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்துவிடுறாங்க. இன்னைக்கி, நாட்டுல நடக்கிற எல்லா குற்றங்களுக்கும் காரணமே குடிதான். அதுக்காக ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையே ‘மோசம்’னு முத்திரை குத்துறத நாங்க வன்மையா கண்டிக்கிறோம்''
           ''வருசா வருசம் சுதந்திர தினத்துக்கு, மாற்றுத்திறன் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு குடுத்து சந்தோஷப்பட்டுட்டு இருந்தோம். காலப்போக்கில் அந்த பள்ளியில குழந்தைகளோட எண்ணிக்கை குறைஞ்சிட்டதால, சாமானிய மக்களுக்கு பிரயோஜனப்படுறாப்புல என்னடா மாப்ள செய்யலாம்னு யோசிச்சப்பத்தான் ’ரத்த தான’ திட்டம் உதிச்சுது. உடனே களத்துல இறங்கிட்டோம்''
              ''அவசரமா ரத்தம் தேவைப்பட்டா எங்களைக் கூப்பிடுங்க''ன்னு நாங்களே போயி முக்கிய ஆஸ்பத்திரிகள்ல பெயர்களைக் குடுத்தோம். நிறைய போன்கால்கள் வர ஆரம்பிச்சுது. அப்புறம்தான், இத ஒரு இயக்கமா மாத்துனா என்னன்னு சொல்லி ‘நண்பர்கள் டிரஸ்டை’ ஆரம்பிச்சோம். சுதந்திரதினத்தன்று நாங்களே ரத்ததான முகாம்களை நடத்த ஆரம்பிச்சோம். முதல் வருசம் 45 பேர் வந்து ரத்தம் குடுத்தாங்க. இப்ப அந்த எண்ணிக்கை 330 ஆக உயர்ந்திருக்கு.
              ரத்த தானம் குடுக்க வர்றவங்களுக்கு, பிஸ்கட், பழங்களோட ஒரு மரக்கன்றையும் குடுத்து அனுப்புவோம். இப்ப இருக்கிற சந்ததியை காப்பாத்துறதுக்காக அவங்க ரத்தம் குடுக்குறாங்க. அடுத்து வரப்போற சந்ததியை காப்பாத்துறதுக்காக நாங்க அவங்களுக்கு மரக்கன்றுகளை தானம் குடுக்குறோம்’’ சிந்திக்க வைக்கிறார் ஜெகதீஸ்வரன்.
           ‘ஐ லவ் யூ.. யூ லவ் மீ..’ - இப்படித் தான் இந்தக் காலத்து யூத்களின் வாகனங்களில் வசன பிரவாகங்களை பார்க்க முடிகிறது. இந்த சிந்தனையையும் மாற்றி இருக்கிறார்கள் நண்பர்கள் டிரஸ்ட்டில் உள்ள இளைஞர்கள். இவர்கள் தங்களது வாகனங்களில் நம்பர் பிளேட்டுக்கு கீழே, இரவிலும் ஒளிரும் விதமாக ‘தேவைப்பட்டால் அழைக்கவும்’ என்று எழுதி, கூடவே ‘பிளட் குரூப்’பையும் அலைபேசி எண்ணையும் எழுதி வைத்திருக்கிறார்கள். "என்னுடைய பைக்கில் இப்படி எழுதி வைத்திருப்பதை ஃபேஸ் புக்கில் எடுத்துப் போட்டுருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இரண்டு பேர் எனக்கு போன் செய்து, ‘ரத்ததானம் கொடுக்க முடியுமா?’னு கேட்டார்களே’’ என்று பூரிக்கிறார் நண்பர்கள் டிரஸ்ட் உறுப்பினர் கணேசன்.
            “ரத்த தானத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், காரைக்குடி பகுதியில் 300 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். அடுத்த கட்டமா எங்களுடைய அமைப்பின் அங்கத்தினர்கள் கண் தானம் பண்ணுவதற்கு முடிவெடுத்திருக்கிறோம். கட்டுப்பாடுகளுடன் இருக்கணும்கிறதால ‘நண்பர்கள் டிரஸ்ட்’ உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்கிறோம்’’ என்கிறார் ஜெகதீஸ்வரன்.
        குருதிக் கொடையின் மகத்துவம் தெரிந்த இந்த டிரஸ்டின் உறுப்பினர்கள் யாரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இல்லை என்பது இளையோர் சிந்திக்க வேண்டிய இன்னொரு செய்தி!
நன்றி
Return to frontpage

2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

வருங்காலத் தூண்களுக்கு வாழ்த்துகள்

ராஜி சொன்னது…

வருங்காலத் தூண்களுக்கு வாழ்த்துகள்