திங்கள், 2 டிசம்பர், 2013

புதுச்சேரியில் ''இந்து குழுமத்தின்'' செய்தித்தாள்கள் புறக்கணிப்பு...!

          
          புதுச்சேரிப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழக்கமாக போடப்படும் The Hindu, தி இந்து (தமிழ்), Business Line போன்ற ''இந்து குழுமத்தின்'' செய்தித்தாள்கள் கடந்த ஒருவாரகாலமாக செய்தித்தாள் முகவர்களால்  விநியோக்கிப்படவில்லை. அதற்குப் பதிலாக மாற்று செய்தித்தாள்கள்  தான் விநியோகிக்கிறார்கள். புதுச்சேரியிலுள்ள வீடுவீடாக செய்தித்தாள் விநியோகிக்கும்  முகவர்கள் ''இந்து குழுமத்தின்'' செய்தித்தாள்களை மட்டும் விநியோகம் செய்யாமல் புறக்கணிப்புப் போராட்டம் செய்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இது இவர்களின் நியாயமான போராட்டமேயாகும். ஆனால் ''இந்து குழும'' நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. 
           நாம் தினந்தோறும் விடியற்காலையில் நம் வீட்டிற்கு வெளியில் இரண்டு பேர் தனித்தனியாக சைக்கிள்களில்  வேகமாக பரபரப்புடன் செல்வதை பார்க்கலாம். அவர்களில் ஒருவர் பால் பாக்கெட் போடுபவர். இன்னொருவர் பேப்பர் போடுபவர் என்பதை நாம் நன்கு அறிவோம்.  இவர்கள் சிரனப்பட்டு காலையில் எழுந்து வருமானத்திற்காகத் தானே இந்த வேலைகளை செய்கிறார்கள் என்று நாம் நினைக்கலாம். ஆனால் வருமானத்திற்காக என்று சொல்வதைவிட வயிற்றுப்பிழைப்பிற்காக தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். இவர்களில்  பெரும்பாலோர்  படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், படித்துக்கொண்டே வருமானம் தேடும் இளைஞர்கள், வேலைவாய்ப்பை இழந்த இளைஞர்கள் - இப்படியாக பல்வேறு தரப்பட்ட இளைஞர்கள் பிழைப்பிற்காக இதை ஒரு பகுதிநேர வேலையாக செய்து வருகிறார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணிநேரம் வேலை செய்கிறார்கள். 
             இந்த குறைந்த மணி நேர வேலையில் இவர்களுக்கு பல்வேறு ஆபத்துகளும், சிரமங்களும் இருக்கின்றன என்பது தான் உண்மை. முதலில் இவர்கள் எல்லோருக்கும் கிடைக்கும் ''விடியற்காலை தூக்கத்தை'' இழக்கிறார்கள். அடுத்து பரபரப்புடன் இயங்கும் இவர்களுக்கு ''சாலை விபத்து'' என்பது சர்வசாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனால் ஏற்படும் மருத்துவ செலவு என்பது இவர்களால் தாங்கக்கூடியது அல்ல. அதேப்போல் இவர்கள் சந்திக்கும் இன்னொரு ஆபத்து ''வெறிநாய் கடி'' மற்றும் ''பாம்பு கடி'' போன்றவைகள்.  இவர்கள் விடியற்காலையில் இருட்டில் பேப்பர் போடும்போது வீட்டு நாய் மற்றும் தெருநாய்களின் தொல்லைகளும், பாம்புகளின் தொல்லைகளும் அதிகம் சந்திக்கிறார்கள். அவைகள் கடித்துவிட்டால் அவற்றுக்கான மருத்துவ செலவுகளும் இவர்கள் தாங்கக்கூடியான அல்ல. மழைக்காலங்களில் இவர்கள் சந்திக்கும் மற்றொரு பயங்கரம் என்பது,  சாலைகளில்  அறுந்துகிடக்கும் மின்கம்பிகளினால் ''மின்சாரம் தாக்கி'' சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படியாக பல்வேறு ஆபத்துகளையும் கடந்து தான் அவைகளை பொருட்படுத்தானால் செய்துவருகிறார்கள்.
            ஆனால் மேலே சொன்ன ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கி மருத்துவ செலவுகளுக்காக தவிக்கும் போது ''இந்து குழும நிர்வாகம்'' கண்டுகொள்வதே இல்லை என்பது தான் இவர்களின் இந்த புறக்கணிப்புக்கு காரணம். புதுச்சேரியில் எல்லாச் செய்தித்தாள்களையும் விட மிக அதிகமாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் செய்தித்தாள்கள் என்பது ''இந்து குழுமத்து'' செய்தித்தாள்களாக தான் இருக்கும். இந்த அளவிற்கு விநியோகத்தை உயர்த்தியிருக்கும் முகவர்களுக்கு குறைந்தது ஆயுள் காப்பீடு (குறைந்தது குழுக்காப்பீடாவது), மருத்துவக் காப்பீடு, மழைக்காலங்களில் பயன்படுத்த மழைக்கோட்டு போன்றவைகளை அளிக்கும்படி ''இந்து குழும நிர்வாகத்தை'' வலியுறுத்தி தான் இந்த புறக்கணிப்புப் போராட்டம் நடத்துகிறார்கள்.
           தங்கள் குழுமத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது அக்கறை காட்டும்  ''இந்து நிர்வாகம்'' தங்கள் செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் முகவர்கள் மீதும் இதுவரை  அக்கறை காட்டாமல் காலம் தாழ்த்துவது என்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. முகவர்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் அவர்களது இந்த கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, எப்போதும் போல் இந்து குழும செய்தித்தாள் விநியோகத்தையும் தொடரவேண்டும் என்பது தான் புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்பு ஆகும்.

கருத்துகள் இல்லை: