வெள்ளி, 27 டிசம்பர், 2013

தேசத்தைக் காக்கும் எல். ஐ. சி - யை பாதுகாப்போம்...!

           






             நாடு முழுதும் உள்ள எல்.ஐ.சி கிளைகளில் கடந்த ஒரு மாத காலமாகவே ஒரே பரபரப்பாக இருப்பதை காணலாம். முகவர்கள் எல்லோரும் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாய் - பம்பரமாய் சுழன்று வேலை செய்கிறார்கள். ஏனென்றால் எல்.ஐ.சி -யின் பிரபலமான 50 வகையான திட்டங்களை எல்லாம் வரும் டிசம்பர் மாதம் 31 - ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள். காலகாலமாக பல ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு வகையான பலன்களை அள்ளித்தந்துகொண்டிருந்த அத்தனை திட்டங்களையும் ஒழித்துக்கட்டிவிட்டு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை வாழவைப்பதற்காக மத்திய அரசு போடும் சதி திட்டமாகும். மத்திய அரசின் இந்த மோசடியான நடவடிக்கையை கண்டித்தும், 
                  இன்சூரன்ஸ் துறையில் தற்போது அனுமதிக்கப்படும் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும், 
               எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 என்ற திருத்த மசோதாவை கடந்த ஆண்டு நிறைவேற்றியதன் மூலம், ஆண்டு உபரித்தொகையில் 90 சதவீதமாக பாலிசிதாரர்களுக்கு போனசாக கொடுக்கப்பட்டதை 85 சதவீதமாக குறைத்ததை கண்டித்தும், 
            01.04.2012 முதல் பிரிமியம் என்பது காப்புத்தொகையில் 10 சதவீதம் மேல் இருத்தல் கூடாது என்றும், அப்படி அதிகமானால் அவர் வாங்கும் பலன்களுக்கு வருமான வரி வசூல் செய்யப்படுவதை கண்டித்து, 
             எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்வரும் 2014 ஜனவரி 1 - லிலிருந்து மக்கள் சேமிப்பான பிரிமியத்திற்கு சேவை வரி வசூலிப்பதை கண்டித்தும், 
             இன்று மாலை புதுச்சேரி அண்ணா சாலையில் LICAOI - எல்.ஐ.சி முகவர்கள் சங்கம்       சார்பில் ''எல்.ஐ.சி-யை பாதுகாப்போம்'' என்ற முழக்கத்துடன் சுமார் 750 மீட்டர் நீள ''மனித சங்கிலி போராட்டம்'' நடத்தப்பட்டது. 
           போராட்டத்தை  சாகத்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் - பெரியவர் திருமிகு.ம.இலெ.தங்கப்பா அவர்கள் தொடங்கிவைத்தார்.
          நாளை சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது தமிழ் மாநில மாநாட்டில் சேர்ப்பிக்கவிருக்கும் ''ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜோதியை'' புதுச்சேரியின் மூத்த தொழிற்சங்கத்தலைவர் தோழர்.சி.எச்.பாலமோகனன் எடுத்துக் கொடுத்தார். முடிவில் மெழுகுவத்தி ஏந்தி ''எல்.ஐ.சி-யை பாதுகாப்போம்'' என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
              இந்தப் போராட்டத்தில் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், சி.ஐ.டி யு. தோழர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், மாதர் சங்க- வாலிபர் சங்க- மாணர்வர்கள் சங்க தோழர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை: