புதன், 20 நவம்பர், 2013

கழிப்பறை வசதியும் மனித உரிமையே - அதை கொடுக்கவேண்டியது அரசின் கடமையே...!

             

            நேற்றைய தினம் நவம்பர் 19 ''உலக கழிப்பறை தினமாக'' அனுசரிக்கப்பட்டது. இந்த நாளை ஐக்கிய நாடுகள் சபையினால் ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறையின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தவே பிரத்தியேகமாக நவம்பர் 19 - ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டு நடத்தப்பட்டது. திறந்தவெளிக் கழிப்பிடங்களினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும், கழிப்பறையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்துவதற்கான ஒரு ஏற்பாடு தான் இந்த நாள். நம் நாட்டைப் பொருத்தவரை கழிப்பறை பிரச்சனை என்பது ஒரு ''தேசியப் பிரச்சனையாக'' இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்தும்,  பல்வேறு பெருமைமிக்க அறிவியல் வளர்ச்சிகளை கண்டும்,  உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நம் தேசத்தில் ''திறந்தவெளிக் கழிப்பிடம்''  என்பது ஒரு ''தேசிய அவமானம்'' தான் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இன்றைக்கு இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சுமார் 62 கோடி பேர் கழிப்பறை வசதியில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்பது நாமெல்லாம் வெட்கப்படவேண்டிய விஷயமாகும். இதில் பெண்கள் சாலையோரங்களிலும், ரயில் பாதையோரங்களிலும், புதர்களின் மறைவிடங்களிலும் இருள் சூழ்ந்த நேரங்களில் அன்றாடம் மிகுந்த சிரமங்களுக்கிடையில் திறந்தவெளிக் கழிப்பிடங்களை பயன்படுத்தி கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்பதை நினைக்கும் போது நமெக்கெல்லாம் தலைக்குனிவாய் இருக்கிறது. ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை எத்தனையோ ஆட்சியாளர்களை நாம் பார்த்துவிட்டோம். அவர்கள் எல்லோரும் வந்தார்கள்... ஆண்டார்கள்... சென்றார்கள். ஆனால் ஒருவரும் இந்த கழிப்பறை பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எந்த திட்டமும் தீட்டவில்லை. சென்ற ஆண்டு மன்மோகன் சிங் அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு 5இலட்சம் கோடி அளவிற்கு வரிச்சலுகைகளையும், மானியங்களையும் அளித்தார். அதில் ஒரு சிறு பகுதியை இந்த இல்லாதப்பட்ட ஜெனங்களுக்கு கழிப்பறைக் கட்ட செலவு செய்திருந்தால் நாட்டிலுள்ள அத்தனை வசதியற்ற மக்களும் கழிப்பறை பெற்றிருப்பார்கள். திறந்தவெளிக் கழிப்பிட கொடுமைகளிலிருந்து விடுபட்டிருப்பார்கள்.

கடந்த 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று ஐக்கிய நாடுகள் சபை ''மனித உரிமை பிரகடனம்'' ஒன்றை வெளியிட்டது. அதில் 30 ஷரத்துகள் உள்ளன. அவை அத்துனையும் என்ன சொல்கிறது என்றால், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு - இவை அத்தனையும் உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். இந்த உரிமைகள் அத்தனையையும் உலகத்திலுள்ள  நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு கட்டாயமாக அமைத்துத் தரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. அதனால் தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 - ஆம் தேதி ''மனித உரிமை தினம்'' கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவிலும் அந்த நாளை கடைபிடிப்பதோடு சரி... அடிப்படை உரிமைகளை மக்களுக்கு அளித்து நடைமுறைப்படுத்தும் எண்ணம் எந்த அரசுக்கும் இல்லை என்பது தான் உண்மை. அதிலும் குறிப்பாக கழிப்பறை என்பது மனித உரிமை என்பதையும், அதை கட்டாயமாக அனைத்து மக்களுக்கும் அளிக்கவேண்டியது அரசின் கடமை என்பதையும் அரசும் மக்களும் உணரவேண்டும். அதுவரையில் திறந்தவெளிக் கழிப்பிட பழக்கத்தை - கொடுமையை ஒழிக்கமுடியாது. 
           

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நிச்சயம் இருக்களை வசதிகள் மிக முக்கியமானதாகவும். ஒரு தேசமும் அதன் மக்களும் இவற்றை முழுமையாக பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். இது குறித்து விரிவாக நானும் எழுதியுள்ளனே வாசித்துப் பார்க்கலாமே..

வெளியே போய் குந்தினால் இனி கலியாணம் கிடையாது - இந்தியாவின் டாய்லட் புரட்சி