வியாழன், 22 மார்ச், 2012

இன்சூரன்ஸ் மீது சத்தம் போடாமல் குறி வைத்த மத்திய பட்ஜெட்...!

சேமிப்பை ஒழித்துக் காட்டும் மத்திய அரசின் முயற்சி...!

           இதுவரை இந்திய மக்களின் சேமிப்பு நிதியின் மீதான மத்திய அரசின்   கொள்கை என்பது ''வரி விலக்கு - வரி விலக்கு - வரி விலக்கு'' ( EXEMPT -  EXEMPT - EXEMPT ) என்பதாகும். ஆனால் அமெரிக்காவின் கட்டளைப்படி  ''வரி விலக்கு - வரி விலக்கு - வரி விதிப்பு'' ( EXEMPT -  EXEMPT -TAX )என்ற கொள்கை மாற்றத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க விசுவாசிகளான மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வந்தனர். இதை 2004 - ஆம் ஆண்டிலேயே அன்றைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தன்னுடைய பட்ஜெட் உரையில் கோடிட்டுக் காட்டினார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. 
             அதன் பொருள் என்னவென்றால், இதுவரையில் மக்கள் சேமிப்புக்காக தாங்கள் சேருகிற இன்சூரன்ஸ், பி. எப்., தேசிய சேமிப்பு பத்திரம், வங்கி சேமிப்பு போன்ற சேமிப்புகளுக்கு அந்தந்த ஆண்டுகளுக்கும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். அதேப்போல் அந்த சேமிப்புகளுக்கு ஆண்டுதோறும் கொடுக்கப்படும் வட்டி மற்றும் போனஸ் ஆகிய வருமானத்திற்கும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். அதேப்போல் இறுதியில் முதிர்வுத் தொகைகளை திரும்பப்பெறும் போதும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். இது மக்களிடம் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக கொடுக்கப்பட்ட வரிச்சலுகை ஆகும்.
        ஆனால்,  இப்போதோ... முதிர்வுத்தொகைக்கு ''வரி விதிப்பு'' என்ற கொள்கை மாற்றத்திற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான அறிகுறிகள் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
              அண்மையில் சென்ற 16 - ஆம் தேதி  பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியினால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது சாதாரண மக்களுக்கு எதிரான பல்வேறு முன்மொழிவுகளை கொண்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளும், பல்வேறு எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியும், குட்டிக்காட்டியும் வருகின்றன. 
               அப்படிப்பட்ட இந்த பட்ஜெட்டில் இன்சூரன்ஸ் சேமிப்பில் இதுவரை வழக்கமாக கொடுக்கப்பட்ட வருமானவரிச் சலுகை என்பது   இந்த முறை கடுமையாக ''இறுக்கப்''பட்டுள்ளது. 
            அதாவது இன்சூரன்ஸ் சேமிப்பில் இதுவரை.... வருமானவரிச் சட்டம் - பிரிவு - 80 C  அடிப்படையில் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரிமியம் என்பது அந்த பாலிசியின் காப்புத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் ரூ.1,00,000 காப்புத்தொகைக்கு இன்சூரன்ஸ் எடுக்கிறார் என்றால் அவர் கட்டவேண்டிய பிரிமியம் என்பது  ரூ. 20,000 - மாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கவேண்டும்.   இருபது சதவீதத்திற்கு மேல் பிரிமியம் இருந்தால், வருமானவரிச் சலுகைக்கு இருபது சதவீதம் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். அதேப்போல் மக்கள் கட்டக்கூடிய பிரிமியம் இருபது சதவீதத்திற்கும் அதிகமாக   இருந்தாலும், திரும்பப்பெறும் முதிர்வு பலன் மற்றும் இறப்பு ஈடு தொகை எவ்வளவு இலட்சமாக இருந்தாலும், கோடியாக இருந்தாலும் இவைகளுக்கும் வருமானவரிச் சட்டம் - பிரிவு - 10 (10 D ) அடிப்படையில்  வருமானவரிச் சலுகை உண்டு. அதன் மூலம் ஒரு பைசா கூட வரி பிடித்தம் செய்யாமல் முழு தொகையும் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
              ஆனால், 2012  - 2013 மத்திய பட்ஜெட்டில் மக்களின் எதிர்கால சேமிப்பான இன்சூரன்சில் மத்திய அரசு கடுமையை காட்டியுள்ளது. அது என்னவென்றால்...
            காப்புத்தொகையில் 20 சதவீதமாக அனுமதிக்கப்பட்ட பிரிமியத்தொகை என்பது   இனி வருங்காலத்தில்  10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு....  ரூ.1,00,000 காப்புத்தொகை என்றால், பிரிமியம் என்பது  ரூ. 10,000 - மாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கவேண்டும். பத்து சதவீதத்திற்கு மேல் பிரிமியம் இருந்தால் பத்து சதவீதம் மட்டுமே வரிச் சலுகைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுமட்டுமல்ல, பத்து சதவீதத்திற்கும் மேல் பிரிமியம் கட்டக்கூடிய அந்த பாலிசியின் முதிர்வு பயன் அல்லது இறப்பு ஈடு பெறும் போது வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டு பாலிசிதாரருக்கு தரப்படும். 
              இந்த மாற்றம் என்பது 01 - 04 - 2012 தேதிக்கு பிறகு எடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும். 
            இன்று இதை மக்கள் அனுமதித்தால் நாளை அனைத்துப் பாலிசிகளுக்கும் வருமானவரி பிடித்தம் செய்ய  மத்திய அரசு தயங்காமல் முயற்சி மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. 
          இது உழைப்பால் சேர்த்த மக்களின் சேமிப்புகள் அனைத்திற்கும்  படிப்படியாக வரிவிதிப்பதற்கான முன்னோட்டமாகும். ஏற்கனவே வங்கிகளில் ''FIXED DEPOSIT '' என்று சொல்லக்கூடிய ''நிரந்தர வைப்புநிதியின்'' முதிர்வுத்தொகைக்கு வருமானவரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதையும் மத்திய அரசு சத்தமில்லாமல் புகுத்தியது. இதை அறியாத மக்கள் - குறிப்பாக பணி ஓய்வு பெற்றவர்கள்  தங்கள் பணத்தை பத்திரமாக இருக்கும் என்றும், பலமடங்கு பெருகும் என்றும் இந்த வைப்புநிதியில் தான் போட்டுவைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. PAN CARD வைத்திருப்பவர்களிடம் 10 சதவீதமும், PAN CARD இல்லாத ''பஞ்சப்பரதேசிகளிடம்'' 20 சதவீதமும் வருமானவரியாக பிடித்தம் செய்யப்படுகிறது என்கிற உண்மையை மக்களிடம் சொல்லவேண்டும்.
            இப்படியே மக்கள் வங்கி சேமிப்பு, இன்சூரன்ஸ் சேமிப்பு போன்றவற்றிற்கு வருமானவரி விதிக்கும் அரசின் போக்கை அனுமதித்தால் அடுத்து PROVIDENT FUND ,  தபால் அலுவலக சேமிப்பான NSC பத்திரம் போன்ற  அனைத்து சேமிப்பிற்கும்  வருமான வரி விதிக்கும் தைரியம் மத்திய அரசுக்கு வந்துவிடும்.
               இரயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக இரயிவே அமைச்சரை பதவி விலகச் செய்த மம்தா, சாதாரண மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் பொது பட்ஜெட்டைக் கொடுத்த மத்திய நிதியமைச்சரை பதவி விலக சொல்வாரா..?

1 கருத்து:

neela சொன்னது…

Thank you for your information
etai makkalidam eppati eduthu selvathu