வெள்ளி, 9 மார்ச், 2012

தனியார் மருத்துவமனைகளின் செவிலியர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் - வேடிக்கைப் பார்த்த தமிழக அரசு...!

               தமிழ்நாடு குறிப்பாக சென்னை, மருத்துவ உலகின் மாநகராய்  திகழ்கிறது என்று பலரும்   பெருமையாக கூறுவதுண்டு.  அந்த அளவிற்கு சென்னை மாநகர் மற்றும் சென்னையை  சுற்றிலும்  மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும், மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகளும் ஏராளம்...ஏராளம்.... சிகிச்சைக்கான கட்டணமோ தாராளம்... தாராளம்...
            காரணம் இந்த மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளே. சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் அப்பல்லோ, விஜயா, இசபெல் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய தனியார் மருத்துவமனைகளே இருந்து வந்தன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமலுக்கு வந்தபின்னர் மருத்துவத்துறையிலும் தனியார் முதலீடுகள் பெருமளவு நுழைந்து விட்டன. அந்த அளவிற்கு மருத்துவத்துறை என்பது இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகத் துறையாக மாறிவிட்டது. 
        சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை மட்டுமே  பல இடங்களில் கிளைகளை திறந்திருக்கின்றன.  சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுதுமே பல இடங்களில் இதன் கிளைகள் மற்றும் தகவல் மையங்கள் இயங்குகின்றன. இது மட்டுமல்லாமல், மியாட், டிரிப்பிள் எம், வாசன், குளோபல், ஸ்ரீராமச்சந்திரா போன்ற  பெரிய மருத்துவமனைகளும்  பெருமளவு தோன்றி இருக்கின்றன. இந்த அனைத்து மருத்துவமனைகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு கொடுக்கப்படும் நவீனமயமான மருத்துவசேவை என்பதால்    அவை அனைத்தும் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாகும். என்றாலும்  இலவச படுக்கைகள் பெயரளவுக்கே  அந்த மருத்துவமனைகள் வைத்துள்ளன. எனவே இந்த மருத்துவமனைகளில்  வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் மருத்துவத்திற்காக  வருகிறார்கள் அல்லது மருத்துவக் காப்பீடு செய்துள்ளவர்கள் வருகிறார்கள்.
                  இப்படிப்பட்ட இந்த மருத்துவமனைகளுக்குத் தான் மத்திய - மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு சலுகைகளை வருகின்றன. மத்திய அரசு TAX - HOLIDAY என்ற பெயரில் வருமான வரி விலக்கு அளிக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மருந்து மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை இந்த மருத்துவமனைகள் காற்றில் பறக்கவிடுவதை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. மாநில அரசோ மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தாராளமாக விநியோகம் செய்கிறது. பல சமயங்களில் இவைகளுக்கான கட்டணத்திற்கு விலக்கு அளிப்பதும் அல்லது கட்டவேண்டிய கட்டண பாக்கிகளை வசூல் செய்யாமல் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அல்லது தள்ளுபடி செய்வதுமான வேலைகளை மாநில அரசாங்கமோ மனதார செய்கின்றது. நகராட்சி அல்லது மாநகராட்சிகளுக்கு கட்டவேண்டிய வரிகளுக்குக்கூட விலக்கு அளிக்கப்படுகிறது.
             இப்படியாக பல்வேறு வழிகளில்  பல்கிப் பெருகி நாள்தோறும் பல ஆயிரம் கோடிகளை  வருவாயாக  ஈட்டும் இந்த தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை. கேள்வி கேட்டால் பணிநீக்கம். விலைவாசிக்கேற்ப ஊதிய உயரவு என்ற பழக்கமே இல்லை.  அதனால் அரசின் குறைந்தபட்ச சம்பளமும் அமல்படுத்தப்படமாட்டாது. தொழில் மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட எந்த சட்டப் பாதுகாப்பும் இந்த மருத்துவமனைகளில் கிடையாது.   இப்படியான  நவீன சுரண்டல்களில்  சிக்கித்தவிக்கும் இந்த மருத்துவமனை ஊழியர்கள், குறிப்பாக செவிலியர்கள் கடந்த சில நாட்களாக பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டனர். சென்னையில் கடந்த சில நாட்களாக நடை பெற்ற போராட்டங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது  அப்பல்லோ, போர்டீஸ் மலர் மற்றும் டிரிப்பிள் எம் எனப்படும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஆகிய மருத்துவமனைகளில்  பணிபுரியும் செவிலியர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம்தான்.
           இவர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்து போன  டிரிப்பிள் எம் மருத்துவமனை தனது மருத்துவமனை செவிலியர்களை அழைத்துப்பேசி சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. அதனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் மிகப்பெரிய மருத்துவமனையான அப்பல்லோ தொடர்ந்து செவிலியர்களை பழிவாங்கி வருகியது. பணிக்கு உடனடியாக திரும்பாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டியும் பார்த்தது.  புதிய செவிலியர்களை தேர்வு செய்ய முன்னணி ஆங்கில நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டு மிரட்டியது. இவை எதற்கும் அஞ்சாமல் செவிலியர்கள் நேற்றுவரை போராடினர். ஆனால்   இதுபோன்ற பிரச்சனைகளில் உடனடியாகத் தலையிடாமல் தமிழக அரசு மவுனம் சாதிப்பது என்பதும், வேடிக்கைப் பார்ப்பது என்பதும்  எந்த வகையிலும் சரியானதுமல்ல....முறையானதுமல்ல... இது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல.
         பல்வேறு சூழ்நிலைகளில்  கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று, கவுரவமான வேலையும், நியாயமான வருமானமும்  கிடைக்கும் என்று நம்பி தனியார் துறையில் நுழைந்துள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் - இளைஞர்களின் எதிர்காலம் குறித்த பிரச்சனை என்பதை தமிழக அரசு மறந்துவிட்டது.  போராடும் செவிலியர்களை அழைத்துப் பேச மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டிய தமிழக அரசு பாராமுகமாய் இருந்தது என்பது கண்டிக்கத்தக்கது.  
          இனியாவது பணி நிரந்தரம், நியாயமான சம்பளம், தொழிலாளர் நலச்சட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்த கறாராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால்   மனிதவள மேம்பாட்டில் தமிழகம் நாட்டில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று பெருமை பேசி பயனில்லாமல் போய்விடும்.

கருத்துகள் இல்லை: