திங்கள், 12 மார்ச், 2012

அமெரிக்காவைப் போலவே பயங்கரவாத எதிர்ப்பு மையம் இங்கெதற்கு...?

             ஐ.மு.கூட்டணி-2 அரசு தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் ( National Counter Terrorism Centre   ) அமைப்பது குறித்து தன்னிச்சையாக அறிவித்திருக்கும் முடிவை,  ஐக்கிய முற்போக்கு  கூட்டணியில் உள்ள சில கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், ‘மாநிலங்களின் உரிமைகளில் கை வைத்திடும் மற்றோர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இது’ என்று மிகவும் சரியாகவே சீற்றத்துடன் எதிர்த்திருக்கின்றன.
              இது மத்திய - மாநில உறவுகள் மீது புதியதொரு விவாதத்தை முடுக்கி விட்டிருக்கிறது. நம் அரசமைப்புச் சட்டத்தின் முதல் வாக்கியமே ‘‘பாரதம் எனப்படும் இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும்’’ என்றுதான் தொடங்குகிறது என்பதைத் துரதிர்ஷ்டவசமாக  ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 2 அரசுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்த வரையறையிலிருந்து தான் நம் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு தொடங்குகிறது. நம் நாட்டின் உச்சநீதிமன்றத்தாலும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாக இது உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கிறது.
         கடந்த சில ஆண்டுகளாகவே மாநிலங்களின் உரிமைகளும், நம் அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவமும் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக அரிக்கப்பட்டு, அதனை ஒரேகுடையின் கீழான அமைப்பாக மாற்றுவதற்கான வேலை துவங்கிவிட்டது. 1977 - லேயே, தோழர் ஜோதிபாசுவை முதல்வராகக் கொண்டு மேற்கு வங்கத்தில் முதல் இடது முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதே, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கேற்ப மத்திய- மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் ஒரு 15 அம்சக் கோரிக்கை சாசனத்தை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து 1983 - இல் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களின் முன் முயற்சிகளின் காரணமாக பல சிறப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
         இவற்றில் முதல் சிறப்பு மாநாடு அப்போது ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா அவர்களால் நடத்தப்பட்டது. இவ்வாறு மாநாடுகள் நடைபெற்றதன் விளைவாகவே மத்திய-மாநில உறவுகள் மீதான சர்க்காரியா ஆணையம் 1983 - இல் அமைக்கப்பட்டது. ஆணையம் தன் அறிக்கையை 1988  இல் சமர்ப்பித்தது. அது அளித்திட்ட பரிந்துரைகளில் பல மத்திய அரசின் கோப்புகளில் தூசி படிந்து கிடப்பது தொடர்கின்றன. இடது சாரிக் கட்சிகள் வெளியில் இருந்து அளித்த ஆதரவின் துணை கொண்டு ஆட்சியில் நீடித்து வந்த ஐ.மு. கூட்டணி-1 அரசு, இப்பிரச்சனை மீது 2007 ஏப்ரலில் எம்.எம்.புஞ்சி  தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. அது தன் அறிக்கையை 2010இல் சமர்ப்பித்தது. ஆனால் அதன் பரிந்துரைகள் மீதும் எவ்விதமான விவாதமும் இதுவரை நடைபெறவில்லை, உருப்படியான காரியம் எதுவும் அமல்படுத்தப்படவும் இல்லை.
         அறிவித்திருக்கும் தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் தொடர்பாக எழுந்துள்ள நியாயமான கவலைகளைப் போக்கும் விதத்தில் பிரதமர், இந்த அமைப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்காது என்று உறுதி அளிக்க முயற்சித்திருக்கிறார். ஏழு மாநில முதலமைச்சர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ‘‘இவ்வாறு அரசாங்கம் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைத்ததன் மூலம், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயுள்ள அதிகார ஒதுக்கீடுகள் மற்றும் அரசமைப்புச் சட்ட விதிகளைப் பாதிக்கும் எதையும் அரசு செய்யாது’’ என்று எழுதியிருக்கிறார். நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியதன் தேவையை விளக்கி, பிரதமர் மேலும், ‘‘இதன் காரணமாகத்தான் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தனியொரு அமைப்பாக உருவாக்கப்படாமல் புலனாய்வு பீரோவின் ஒரு பிரிவாக அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றும் கூறியிருக்கிறார்.
           பிரதமர் இவ்வாறு இந்த அமைப்பை அமைப்பது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்திலேயே முன்னுக்குப் பின் முரண்படுகிறார். புலனாய்வு பீரோ இந்த வேலையை ஏற்கனவே செய்து கொண் டிருக்கும்போது, பின் எதற்குப் புதிதாக ஓர் அமைப்பு? மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, இதே ஐ.மு.கூட்டணி அரசாங்கம், தேசியப் புலனாய்வு ஏஜென்சி - யை அமைத்தது. அந்த அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? நாடாளுமன்றத்தில் தேசியப் புலனாய்வு ஏஜென்சி அமைப்பது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்ற சமயத்தில், இடதுசாரிக் கட்சிகள் மாநிலங்களின் உரிமைகள் தொடர்பாக தங்கள் நியாயமான கவலைகளைத் தெரிவித்தன.
              அதாவது ‘சட்டம் - ஒழுங்கு’, குற்றவியல் புலனாய்வு மற்றும் குற்றவியல் வழக்குகளில் நீதிவழங்குதல் ஆகிய அனைத்தும் மாநிலங்களின் பட்டியலில் உள்ள உரிமைகளாகும். இவ்வாறு ஓர் அமைப்பு மத்திய அரசால் அமைக்கப்படும்போது, அது மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதாகாதா என்று தங்கள் கவலைகளைத் தெரிவித்தன. இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இந்த அமைப்பு அமைக்கப்பட்டபின் அதன் முதல் ஆறு மாத கால அனுபவங்களின் அடிப்படையில் , இப்பிரச்சனை மீண்டும் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடலாம் என்று உறுதி அளித்தார். ஆயினும் இது நடைபெறவே இல்லை. இந்தப் பின்னணியில்தான் தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப்படுதல் என்பதும் அதன் உண்மையான குறிக்கோள்கள் குறித்து நியாயமான சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பி இருக்கிறது. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்திற்கு சோதனைகள் செய்வதற்கும், கைது செய்வதற்கும் அதிகாரம் அளிக்கப்படுதல் என்பது அவற்றை இந்த அமைப்பு துஷ்பிரயோகம் செய்வதற்கு ஏராளமான வாய்ப்பு வசதிகளைச் செய்து தந்திருக்கிறது.
           அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ. உட்பட அனைத்து நவீன ஜனநாயக நாடுகளின் அனுபவமும் இதுதான். இந்தியாவில் உள்ள சூழ்நிலையின் பின்னணியில், அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பும் மாநிலங்களின் உரிமைகளும் பறிக்கப்பட இது இட்டுச் செல்லக்கூடும். மேலும் இந்தியாவில் இதுவரை புலனாய்வு பீரோ என்பது மத்திய ஆட்சியாளர்களின் எடுபிடியாகவே இருந்து வந்திருக்கின்றன. எனவேதான் எதிர்க் கட்சிகளின் தலைமையில் இயங்கும் மாநில அரசாங்கங்கள் இவ்வாறு நியாயமான சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றன. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப்படுவது தொடர்பாக அவசர அவசரமாக ஐமுகூ அரசு அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதைவிட, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்துதான் அவ்வாறு அது செய்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. அவ்வாறிருப்பின் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
          மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘அமெரிக்காவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் குறித்து புரிந்துகொள்வதற்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக’’ கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு களில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரிகளை அவர் சந்தித்தார். பின்னர் 2010 ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஒரு பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்கள். இதனைத் தொடர்ந்து 2010 நவம்பரில் புதியதொரு உள்நாட்டு பாதுகாப்பு பேச்சுவார்த்தை  அறிவிக்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சரும் அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளரும்  கலந்து கொண் டார்கள்.
           இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் அமெரிக்க அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட போர்த்தந்திர உடன்படிக்கையின் ஒரு பகுதியேயாகும். இதனை ஐ.மு.கூட்டணி அரசும் மிகவும் தீவிரத்துடன் முன்னெடுத்துச் சென்றது. இதன் காரணமாகத்தான் அமெரிக்க அரசின் பயங்கரவாத எதிர்ப்புக்கான உதவி அமைப்பு  நமது நாட்டில் 79 காவல்துறை பயிற்சி வகுப்புகளை நடத்தி, 1500  - க்கும் மேற்பட்ட இந்திய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறது. இதனை புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
          தேச விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கிட நாட்டு மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் இந்திய நாடாளுமன்றம் எப்போதும் அரசின் நடவடிக்கைகளுக்கு எவ்விதக் கட்சி வித்தியாசமுமின்றி ஒரே மனிதனாக நின்று உறுதுணையாக இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் தேசியப் புலனாய்வு ஏஜென்சிக்கான சட்டமுன்வடிவும் மற்றும் பல்வேறு சட்டங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஆயினும் இதனை நம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளில் அமெரிக்க அரசின் ஏஜென்சிகள் ஊடுருவ அளித்திட்ட அனுமதியாக அரசு கருதிவிடக்கூடாது. அமெரிக்க அரசின் நிறுவனக் கட்டமைப்பை இந்தியாவில் அமைத்திட அளிக்கப்பட்ட உரிமமாக இதனை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கருதிடக்கூடாது. பயங்கர வாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ளது போன்ற கட்டமைப்புகளை இந்தியாவில் கொண்டுவர முயற்சிப்பது என்பது நாட்டிற்கும், நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கும் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் பேரழிவினை உருவாக்கிடும். அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறையில் கைதிகள் அனுபவித்த மனிதாபிமானமற்ற காட்டு மிராண்டித்தனமான அடக்குமுறைக் கொடுமைகளே இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
               எந்த விதத்தில் பார்த்தாலும், ஐ.மு. கூட்டணி-2 அரசானது தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது தொடர்பாக தற்போது செயலற்று உறக்க நிலையில் இருந்திடும் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின்  சிறப்பு அமர்வைக் கூட்டி, இது தொடர்பாக விவாதத்தை நடத்த வேண்டும். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் முழுமையான விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை: