செவ்வாய், 20 மார்ச், 2012

காக்கை குருவி எங்கள் ஜாதி - சிட்டுக்குருவிக்கு அடைக்கலம் கொடுப்போம்

                இயற்கையின் படைப்புகளில் வண்ணமிகு படைப்புகளில் பூக்களுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவை பறவை இனங்கள் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. அவற்றில் மனிதனோடு இணைந்து வாழ்ந்த பறவைகள் பலவற்றை இன்று காண முடியவில்லை. அவற்றில் சிட்டுக்குருவியும் ஒன்று. இன்று அவை அருகி வருகின்றன என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். இன்றைய அவசர உலகில் இயற்கையைப் போற்றுவோர் எண்ணிக்கை குறைந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
              பணம் சேர்ப்பது, வசதிகளைப் பெருக்குவது என்று உலகம் இயந்திரமயமாகி வருகிறது. நுகர்வோரியத்தை வளர்த்துவரும் பெரும் நிறுவனங்கள் தொடுக்கும் விளம்பரப் போரில் மதிமயங்கி நிற்கும் மக்கள் இயற்கை அழிக்கப்படுவதை அறியவில்லை என்று கூடக் கூறமுடியாது. அறிய மறுக்கிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை. .புலிகளும் யானைகளும் காண்டாமிருகங்களும் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பற்றி கவலைப்படும் அரசு கூட , சிட்டுக் குருவிகள் மறைந்து வருவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
          இவை குறைவதற்கான காரணங்களைத் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. யுனைடெட் கிங்டமைச் (பிரிட்டன் அயர்லாந்து ஸ்காட்லாந்து உள்ளிட்டவை) சேர்ந்த முன்னணி நாளிதழ் ஒன்று, சிட்டுக்குருவிகள் அழிந்து  வரும் மர்மத்தைக் கூறுவோருக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்தது. 

காரணங்கள் பல 

     சிட்டுக்குருவிகள் சிறிய புழுக்களையும், பூச்சிகளையும் உண்டு வாழ்பவை. இன்று இவைகளும் அருகி வருகின்றன. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்துகளும் உரங்களும் புழுக்களையும் பூச்சிகளையும் அழித்துவிடுகின்றன. நீரைத் தூய்மைப்படுத்தும் குளோரினும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டும் சிறு உயிர்களுக்கு எதிரிகளாகும். பெட்ரோல் பயன்பாட்டால் உருவாகும் புகை வாயு மண்டலத்தை மாசுபடுத்துவதை அறிவோம். அதைத் தவிர்க்க துத்தநாகம் இல்லாத பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்தது.
இவ்வகை பெட்ரோல் உருவாக்கும் புகையில் உற்பத்தியாகும் மெத்தைல் நைட்ரேட் சிட்டுக்குருவியின் உணவுகளான புழு பூச்சிகளை அழித்து விடுகின்றன.  பெருகிவரும் நவீன அங்காடிகளின் பெருக்கமும் சிட்டுக்குருவிகள் நகர்ப்புறத்தை விட்டு விலகியதற்குக் காரணமாகும். நம்ம ஊரு பலசரக்குக் கடைகளில் வெளியில் சாக்குகளில் திறந்தபடி வைக்கப்பட்டிருக்கும் தானியங்களும், கடைக் குப்பைகளில் கிடக்கும் தானியங்களும் அவற்றுக்கு உணவாக இருந்தன. இன்று பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்படும் பொருட்கள் சிந்துவதில்லை. அங்காடிகளுக்குள் குருவிகள் செல்ல முடிவதில்லை. அன்றைய ஓட்டு வீடுகளிலும், கூரை வீடுகளில் காணப்பட்ட ஓட்டைகளும் பொந்துகளும் இன்றைய கான்கிரீட் வீடுகளில் கிடைப்பதில்லை. சாய்வாக மாட்டப் பட்ட புகைப்படங்களின் பின்புறமும் இன்று கிடைப்பதில்லை. விரிவாக்கத்துக்கும் வசதிப் பெருக்கத்துக்கும், மின்சாரம் மற்றும் தொலைபேசி வசதிக்காகவும், மரங்களும் வெட்டப்படுவதால் அவற்றின் குடியிருப்புகள் உருவாக வெளிகள் இல்லை.
            வீட்டுத் தோட்டங்களும் மறைந்துவிட்டன. அலைபேசியும் இவற்றுக்கு எதிரியாகிவிட்டன. அலைபேசி கோபுரங்கள்  உருவாக்கும் மின்காந்தக் கதிர்கள் சிட்டுக்குருவி முட்டைகளின் உயிர்ச்சத்தை அழித்து விடுகின்றன. எனவே அவை மனித நடமாட்டமுள்ள பகுதிகளை விட்டு விலகிச் செல்கின்றன. 

நாம் செய்ய வேண்டியது என்ன?                                                                                                          

        நிலைமை இப்படியே சென்றால் எதிர்காலச் சந்ததிகளுக்கு சிட்டுக்குருவிகளை புகைப்படங்களில் மட்டுமே காட்டமுடியும். அந்த சங்கடத்தைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதன் உள்ளிட்ட எந்தவொரு இனமும் உயிர் வாழ்வதற்கு பல காரணிகள் உண்டு. அவற்றில் உணவு, இருப்பிடம், மறுஉற்பத்தி, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை முக்கியமானவையாகும். இவை குறைந்து வருவதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.பறவை ஆர்வலர்களும், பறவை இயல் நிபுணர்களும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் இயக்கத்தைக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள்.
         ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் நாளை உலக சிட்டுக்குருவி தினமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டின் கதவுகளும் சிட்டுக்குருவிகளின் வருகைக்காகத் திறந்துவிடப்படவேண்டும். அன்றாட வாழ்வில் அவை சந்தித்து வரும் தடைகளைப் பற்றி மக்கள் உணர வேண்டும். அவற்றைக் களைய எடுக்க வேண்டிய திட்டமான நடவடிக்கைகளை நாம் தீர்மானிக்க வேண்டும். உணவும் இருப்பிடமும் அவற்றின் இன்றியமையாத் தேவைகளாகும். அவற்றை அளிக்க வேண்டும். மொட்டை மாடிகளில் அரிசிக் குருணை, கேழ்வரகு போன்ற தானியங்களைச் சிதறி விட வேண்டும். தானியங்களை அகன்றவாயுள்ள தகர டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும். மதுரையில் ஒரு வீட்டில் வெளிச்சுவரில் இரண்டு கல்சட்டிகளை பதித்து வைத்துள்ளார்கள். ஒன்றில் வீட்டில் மிச்சம் விழும் உணவும் தானியங்களும் போடப்படும். மற்றொன்றில் தண்ணீர் நிரப்பப்படும். அங்கு பல பறவைகள் உண்டு தாகம் தணித்து இளைப்பாறிச் செல்வதைக்கண்டு அவ்வீட்டார் மன நிறைவடைகிறார்கள்.
       அதேபோல் இருப்பிடமும் ஏற்பாடு செய்ய வேண்டிய அதற்கெனத் தயாரிக்கப்படும் கூண்டுகளை வீட்டில் உள்ள மரங்களில், வெயிலும், மழையும் பாதிக்காத சுவர்களில் பதித்து வைக்க வேண்டும். வீடுகளின் ஜன்னல்களில் கூட அவற்றை கட்டிவிட முடியும். ஆனால் பூனைகள் அவற்றைத் தாக்கி அழிக்காதபடி கூண்டுகளைப் பொருத்தவேண்டும்.வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழும் இயற்கைக் குப்பைகளை மண்குழிகளில் கொட்டி மக்கும் படி விட வேண்டும். அப்போது அதில் உருவாகும் புழுக்கள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும். சிட்டுக்குருவிகள் பெருகுவதால் பலன் தரும் மரங்களில் செடிகளில் உண்டாகும் புழுக்கள் தொந்தரவு இருக்காது. மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவி தினத்தில் இயற்கையாய் வாழ்வோம், இயற்கையோடு வாழ்வோம், இயற்கையை வாழ வைப்போம் என்ற உறுதியை மனமுவந்து ஏற்போம்.

கருத்துகள் இல்லை: