புதன், 14 டிசம்பர், 2011

தேசபக்தியை ஒழித்துக்கட்டும் வேலையில் தனியார் தொலைக்காட்சிகள்...!

                       நேற்று டிசம்பர் - 11 ,   ஒரு மாமனிதனின் பிறந்தநாள்.... அந்த மாமனிதன் வேறு யாரும் அல்ல.... இந்த தேசத்தின் விடுதலைக்கு தன்னையே அர்ப்பணித்துப் போராடிய மகாகவி பாரதி தான் அவர். இந்தத் தகவல் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும்...? தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், பாரதி முன்னெப்போதும் சினிமாவில் நடித்ததில்லையே. ஆனால் சினிமாவில் அவர் பாடல்கள் வந்திருக்கின்றன.
               அதே சமயத்தில் டிசம்பர் - 12 ,  ஒரு நடிகரின் பிறந்தநாள்.... நாடே கொண்டாடுகிறது. அவர் நாட்டிற்காக என்ன செய்தார்...?  ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது - மது அருந்துவது என திரைப்படத்தில் விதவிதமாய் நடித்து பணம் சம்பாதித்தவர்  என்பதை தவிர அவரைப்ப் பற்றி சிறப்பாக சொல்ல வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட இவரது பிறந்தநாளுக்காக தான், தனியார் தொலைக்காட்சிகள் - எப் . எம் ரேடியோக்கள் என இவர்களின் இரண்டு நாட்களுக்கு கொண்டாட்டங்கள்  சொல்லி மாளாது. அந்த இரண்டு நாட்களாக அந்த நடிகரின் பாடல்கள், ஆடல்கள், வசனங்கள், நகைச்சுவைகள், திரைப்படங்கள் என தூள் பரப்பின. குழந்தைகளுக்கும்   இளைஞர்களுக்கும்  ஒரே உற்சாகம் தான். தங்களை மறந்து, தங்கள் குடும்பத்தை மறந்து, தங்கள் சூழ்நிலைகளை மறந்து, தங்கள் கவலைகளை மறந்து குழந்தைகளும், இளைஞர்களும் உற்சாகத்தில் பறந்தனர்.   
              இதை தனியார் தொலைக்காட்சிகள் திட்டமிட்டே செய்கின்றன. இது உலகமயத்தின் கோரவெளிப்பாடு. இதில் இருக்கும் உண்மையான சூழ்ச்சி என்னவென்றால், குழந்தைகளின்  மனதிலும் இளைஞர்களின் மனதிலும் தேசபக்தி என்பது வளராமல் பார்த்துக்கொள்வது  மட்டுமல்ல, அவர்களின் மனதில் இருக்கும் ஒரு சிறு துளி தேசபக்தியையும் கிள்ளி எறியும் வேலையாகும். இதை ஆட்சியாளர்களும், முதலாளிகளும் திட்டமிட்டே செய்கிறார்கள். வன்முறையையும், ஆபாசத்தையுமே தங்கள் தொலைக்காட்சிகளில் காண்பித்து, நஞ்சை பாய்ச்சி அவர்களை திசைத் திருப்பும் வேலையாகும்.
              அதனால் தான், இந்த தனியார் தொலைக்காட்சிகள் சுதந்திரதினம்...  குடியரசு தினம்... காந்தி ஜெயந்தி... மே தினம்... மகளிர் தினம்... பாரதி போன்ற தேசத்தலைவர்களின் பிறந்தநாள்.... இப்படி எந்த தினங்களிலும் சுதந்திரத்தைப் பற்றியோ... விடுதலைப் போராட்ட வரலாற்றைப்பற்றியோ,    அதில் ஈடுபட்ட தலைவர்களை பற்றியோ, அவர்களின் தியாகங்களைப் பற்றியோ,  மே தின வரலாற்றைப் பற்றியோ, உரிமைகளுக்காக உயிர்த்தியாகம் செய்த தோழர்களைப் பற்றியோ அதேப்போல் மகளிர் தின வரலாற்றைப்பற்றியோ, மகளிர் உரிமைகளுக்காக  தியாகம் செய்த பெண்களைப் பற்றியோ சொல்கிறார்களா.... அல்லது காட்டுகிறார்களா...? துளிக்கூட காட்டமாட்டார்கள். மாறாக ''இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக'' என்று சொல்லி நான்கு புதுப்படம் போடுவார்கள். ''இந்த நடிகையுடன் ஒரு நாள்''.... திரைப்படக்கலைஞர்களுடன் ''நேர்காணல்''... ''மானாட மயிலாட''... ''சிறந்த ஜோடி யார்...?''... இப்படியாக  நம் பகுத்தறிவை வளர்க்கக்கூடிய நிகழ்ச்சிகளைத் தான் ஒளிபரப்புகிறார்கள். மக்களும் இவைகளைப் பார்த்து சந்தோசமா இருக்காங்க.... எண்டா... இப்படியெல்லாம் காட்டுகிறாய் என்று கேட்பதில்லை என்பது தான் இங்கே வருத்தமளிக்கும் விஷயமாகும்.
               இப்படி காட்டுவதால் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தேசபக்தி என்பது நீர்த்துப் போய்விடும் - மழுங்கிப் போய்விடும்.  இவர்களுக்கு தேசபக்தி என்பதே துளிக் கூட இல்லாமல் போய்விடும் என்பது தான் இதிலுள்ள மிகப்பெரிய பயங்கரமாகும். இதைத் தான் ஆட்சியாளர்களும், முதலாளிகளும் எதிர்ப்பார்க்கின்றனர். குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தேசபக்தி இல்லாமல் இருந்தால் தான், ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக எதைவேண்டுமானாலும் செய்யலாம். ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இவர்களுக்கு தேசபக்தி வளர்ந்துவிட்டால், ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்பது மட்டுமல்லாது, இந்தியாவிற்குள் ஆட்சியாளர்கள் அனுமதிக்கும் அந்நிய நிறுவனங்களை இளைஞர்கள் தேசபக்தியோடு துரத்தியடிப்பார்கள். இது நடக்கக்கூடாது என்றால், இளைஞர்களுக்கு தேசபக்தி வளரக்கூடாது. தேசபக்தி வளரக்கூடாது என்றால், கண்டிப்பாக மேலே சொன்ன தேசிய தினங்களில் தேசத்தைப்பற்றியோ... தலைவர்களைப் பற்றியோ... அவர்களின் தியாகங்களைப் பற்றியோ... கட்டாமல் நிறுத்துவது மட்டுமல்லாது, அவர்களின் எண்ணங்களைத் திசைத்திருப்புவதற்கு நடிகர்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடுவது.... இறந்துபோய்விட்டால் அவர்களைப் பற்றியே காட்டுவது.... பண்டிகை காலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை காண்பிப்பது, புதியத் திரைப்படங்களை காண்பிப்பது... நண்பர்கள் தினம் போன்ற புதிய தினங்களில் இளைஞர்களின் கவனத்தை திருப்புவது போன்ற வேலைகளில் இந்த தனியார் தொலைக்காட்சிகள் சிறப்பாக செய்கின்றன.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

arumayana padhivu vaazhththukkal ungalukku oru vishayaththai munbe koorugiren thamizhaga muttalgalai poruththavarai rajini aduththa kadavul avadharam kalikalam

ஈ வெ இராமசாமி சொன்னது…

எப்படியோ இந்தியா ஒழிந்தால் சரிதான்

ஈ வெ இராமசாமி சொன்னது…

எப்படியோ இந்திய தேச பக்தி ஒழிந்து இந்தியா ஒழிந்து , தமிழ் தேசம் மலர்ந்தால் சரி தான்
அந்த வகையில் தேசபக்தியை ஒழிக்கும் தொலைக் காட்சிகளுக்கு நன்றி

Unknown சொன்னது…

ஈ வெ இராமசாமி//


பிறகு தமிழ்தேசியமும் அழியும்!

வெங்கடேசன் சொன்னது…

பாரதி பற்றிய நிகழ்ச்சிகளுக்கு sponsor கிடைக்க மாட்டர்களே