செவ்வாய், 25 நவம்பர், 2014

மனைவிக்கு பாதுகாப்பு அளித்த பாசக்கார கணவர் மோடி...!


                        சென்ற பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது பிரதமர் நரேந்திரமோடி முதல்முறையாக தான் ''திருமணமானவர்'' என்றும், மனைவியின் பெயர் ''யசோதா பென்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு குஜராத் சட்டமன்றதேர்தல்களில் போட்டியிட்டபோது அப்போதைய வேட்மனுக்களில் தான் ''திருமணமாகாதவர்'' என்றே குறிப்பிட்டிருக்கிறார் என்பது தான் உண்மை.. கடந்த  பாராளுமன்றத்தேர்தலுக்கு முன்பு தான் மோடியின் குட்டு வெளியானது. மோடி ஏற்கனவே திருமணமானவர் என்றும், மனைவியின் பெயர் யசோதா பென் என்றும், 64 வயதான ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் என்றும், 1968-ஆம் ஆண்டில் மோடியுடன் திருமணம் முடிந்து பின்னர், கணவரால் கைவிடப்பட்டு குஜராத்தில் உன்ஜ மேஹ்சனா மாவட்டத்தில் பிரம்மன்வாடா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் என்றும் புகைப்படத்துடன் இந்திய பத்திரிக்கைகளில் பல மொழிகளில் வெளியானவுடன்  மோடி வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல்,   ஏற்கனவே தனக்கு மனைவி இருக்கிறார் என்ற தகவலை மறைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும் இல்லாமல்  தன்னுடைய மனைவி பற்றிய தகவல்களை பாராளுமன்றத்தேர்தல் வேட்புமனுவில் மட்டும் வேறு வழியில்லாமல் குறிப்பிடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
                 அவர் அத்தோடு நிற்கவில்லை. பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் தன்னுடைய மனைவி நெருங்கி அவரது மனதில் மறைந்திருக்கும் உண்மைகளை கிளறி வெளியுலகிற்கு காட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் தன்னுடைய ஆட்களை யசோதா பென்னை சுற்றி யாரும் அவரை நெருங்கமுடியாத வண்ணம் அவருக்கே தெரியாமல் பாதுகாப்பு வளையம் அமைத்தார். பிரதமாராக பதவியேற்ற பிறகு  இந்த ''பாசக்கார கணவர்'' அரசின் செலவிலேயே தன்னுடைய மனைவிக்கு அவருக்கே தெரியாமல் 10 கமேண்டோக்கள் அடங்கிய பூனைப்படை பாதுகாப்பை கடந்த மே 30 முதல் அளித்திருக்கிறார். இப்படிப்பட்ட பாதுகாப்பை அவருக்கு அளித்திருப்பது பற்றிய தகவலும் யசோதா பென்னுக்கு சொல்லப்படவில்லை. அதற்கான ஒப்புதலும் அவரிடம் பெறப்படவில்லை.
               இந்த பூனைப்படையோ யசோதா பென்னின்  வீட்டிற்கு வெளியே 24 மணிநேரமும் காவலில் இருப்பதும், அவரது வீட்டிற்கு வருவோரை விசாரணை செய்து அனுப்புவதுமான வேலைகளை செய்வது என்பதும், தான் வெளியே எங்கு சென்றாலும் தான் அழைக்காமலேயே என்னை பின்தொடர்வதுமான வேலைகளை செய்வது என்பதும் தன்னுடைய தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கருதுகிறார்.  அதுமட்டுமல்லாமல் தன்னை பின் தொடர்பவர்கள் உண்மையிலேயே காவல் துறையை சேர்ந்தவர்கள் தானா என்ற அச்சப்படுகிறார்.
                 இந்த சூழ்நிலையில் தான் யசோதா பென்  தனது பாதுகாப்பு சம்பந்தமான முழுவிபரம் தனக்கு அளிக்கப்படவேண்டும் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மூன்று பக்க கடிதம் ஒன்றை மாவட்ட காவல் துறை உயரதிகாரியிடம் நேரில் சென்று அளித்திருக்கிறார்.
            முன்பு ஒரு முறை பிரதமர் நரேந்திரமோடி தன்னை அழைத்து சேர்த்துக்கொண்டால், அவருடன் சேர்ந்துவாழ ஆசைப்படுகிறேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் நரேந்திரமோடி இதுவரை தனது மனைவியின் ஆசையை கண்டுகொள்ளவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: