வியாழன், 20 நவம்பர், 2014

கலைஞானி கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்...!


 கடிதம் எழுதியது : ப.கவிதா குமார்                    

அன்பான கமல்ஹாசன் அவர்களுக்கு,                        

வணக்கம்....!
          
          தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அடுத்ததாக நடிப்பிற்கு இலக்கணம் என்றால் நீங்கள்தான் என தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே பேசி வருவதன் பின்னணியில் உங்கள் உழைப்பு இருக்கிறது. ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மாவில் துருதுருவெனத் துவங்கிய உங்கள் கலைப்பயணம், 60 வயது நிரம்பிய போதும் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியம். 1960-ஆம் ஆண்டு முதல் படத்திலேயே சிறந்த நட்சத்திரத்திற்கான தேசிய விருதை களத்தூர் கண்ணம்மா படத்தில் பெற்ற காரணத்தினாலோ என்னவோ, நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் இன்று வரை ப்ரியமிக்க ஒரு குட்டி நாயைப் போலஉங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறது.
           நடிகர், நடன அமைப்பாளர், கதாசிரியர், கவிஞர், பாடலாசிரியர், இயக்குநர் என அத்தனை அவதாரங்களையும் எடுத்துள்ள தாங்கள் பரமக்குடியைச் சேர்ந்த ஒரு சுதந்திரப்போராட்டவீரரின் மகன் என்ற பெருமிதத்துடனே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 
         1996ம் ஆண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்ததனம் என்ற சிறுமியை ஆசிரியர் அடித்ததில் ஒரு கண்ணை இழந்தார். அப்போது அச்சிறுமியின் கண் சிகிச்சைக்காக நிதியளித்ததுடன், உங்கள் உள்ளக் கிடக்கையை ஒரு கவிதையாக்கித் தந்தீர்கள்.
“தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாது இந்த சாதி சுரம்கேடிகள்
ஆயிரம் கூட்டணி சேர்ந்துகேட்டில் வந்து முடிந்தது காண் !
காவியும் நாமமும் குடுமியும் கோசமும்கண்டு
மயங்கும் மந்தைகளாய்ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண் !
ஓசையும் பூசையும் பார்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்ஆகமம் பழகிப் போனது காண் !
அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறிகருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !
சாதியும் சாமியும் சாராயம் போல்சந்தைக் கடையில் விற்குது காண் !
சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !
புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்பாதி மட்டுமே பிரபலம் காண் ! ’’
            சாதிவெறி குறித்து மிகச்சரியாகவே இந்தக்கவிதையில் பதிவு செய்தீர்கள். முற்போக்கு முகாமில் எப்போதும் இருப்பவர் எனக் கருதப்படும் நீங்கள், மதம்குறித்தும், சாதி குறித்தும் எந்த சமரசமின்றி கருத்தைப் பதிவுசெய்து வந்துள்ளீர்கள். சமீபத்தில் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள். நான் பேச வேண்டிய விஷயம் என்பது உங்களின் திரைவெளி குறித்ததல்ல. பொது வெளி குறித்து. அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ம் தேதி ‘தூய்மையான இந்தியா-2014’ என்ற திட்டத்தை தலைநகர் தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.
        அவர் அந்த நாளைத் தேர்ந்தெடுத்ததிலேயே ஒரு அரசியல் இருக்கிறது. ஒருவரின் பிறப்பு குறித்துப் பேசப்படும் போது, இறப்பு குறித்தும் பேசப்படவேண்டும். காந்தியின் பிறந்த நாள் அன்று இந்தியா முழுவதும் நாதுராம் விநாயக் கோட்சே என்ற மதவெறியனின் துப்பாக்கித் தோட்டாவால் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மக்களிடையே எடுத்துச் செல்வதை மடைமாற்றம் செய்ய பிரதமர் நரேந்திரமோடி மிகச் சாதுர்யமாக அதேதேதியில், “ஸ்வச் பாரத்” என்று `ஹிந்தியில் அழைக்கப்படும், “தூய்மையான இந்தியா” என்பதைத் துவக்கி வைத்தார். அந்த உண்மையை அறிவீர்களா கலைஞானி? இந்தத் திட்டம் குறித்து உங்களிடம் நான் கேள்வி எழுப்புவதற்குக் காரணமிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களான 9 பேருக்கு அழைப்பு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார்.
         அந்த 9 பேரில் நீங்களும் ஒருவர்! அவரின் அழைப்பை ஏற்று தங்கள் பிறந்த நாளையொட்டி தாம்பரம்- வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள ராஜ கீழ்ப்பாக்கம் சந்திப்பு மாடம்பாக்கம் ஏரி அருகில் தூய்மைப்பணி திட்டத்தைத் துவக்கி வைத்து நீங்கள் பேசிய பேச்சைக் குறிப்பிட வேண்டும் என விரும்புகிறேன். “வழக்கமாக எல்லாரும் பிறந்தநாள் விழாக்களை ‘கேக்’ வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். கேக் வெட்டி மகிழ்ச்சி அடைவதைவிட, குப்பையை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது ’’ என்று பேசினீர்கள். ஒரு நாள் குப்பை வெட்டியதை பெருமை பொங்க பேசுகிறீர்கள்.
        அவ்வளவு பெருமை வாய்ந்த பேச்சுகளை அனைத்து ஊடகங்களும் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டன. இந்தியாவில் மட்டும் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி விஷவாயுக்கள் தாக்கி இறப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 22 ஆயிரம் பேர் என்று புள்ளி விபரத்தை இந்த ஊடகங்கள் ஏன் வெளியிடுவதில்லை...? என்று என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா கமல்...? ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடாது’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும், தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இதனால் உயிரிழந்தோர் 800 பேர் என்றால், குப்பையை வெட்டி எப்படி பெருமையாகக் கொண்டாட முடியும்...? நாம் பெற்ற குழந்தையே மலங்கழித்தால் இரத்த சம்பந்தப்பட்ட உறவினர் ஒருவரே கூட அவற்றை அகற்ற முன் வரமாட் டார்கள்.
         ஆனால், செத்துப்போன எலிகள், பூனைகள், பிராணிகளின் தசைகள் மக்கிச் சிதைந்து அரைகுறையாக மிதந்து கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடையில், நகர மக்களின் மலமும் சிறுநீரும் அசுத்தங்களும் கரைந்து கூடியிருக்கும் பாதாளச் சாக்கடையில், அசுத்த நீரில் தலை நனைய உடல் நனைய, காது மூக்கு துவாரங்களிலும், வாயிலும் அசுத்த நீர் நுழைய, மூழ்கிச் சாகும் துப்புரவுத் தொழிலாளர்கள் அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கிறார்களே, இதுவரை அவர்கள் குறித்து நீங்கள் கொண்ட கருத்துதான் என்ன...? இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் 26 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. இவர்களை மீட்பதற்கான வழிவகைகளை பற்றி “ஸ்வச் பாரத்” பேர்வழி நரேந்திரமோடி இதுவரை வாய்திறக்கவில்லையே.... ஏன்...?
        தூய்மை என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல அகம் சார்ந்ததும்தான். இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு நடுவில் 32 குழந்தைகள் மட்டும் இறந்தே பிறக்கும் நிலை என்றால் எங்கே இருக்கிறது தூய்மை...? இந்தியாவில் ஆண்டுதோறும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரண்டு லட்சம் பேர் மடிகின்றனர். அசுத்தமான தண்ணீர், முறையான துப்புரவு வசதிகள் இல்லாமை ஆகிய காரணங்களால் உருவாகும் வயிற்றுப்போக்கு வியாதியால் தான் இந்த குழந்தைகள் மடிகின்றனர்.
            இவற்றில் பெரும்பாலும் தலித் மற்றும் பழங்குடி மக்களின் குழந்தைகளே அதிகம். அப்படியென்றால் மோடியின் தூய்மைத் திட்டம் யாருக்கானது...? கையால் மலம் அள்ளுதல் ஒரு தேசிய அவமானம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறோம். கையால் மலம் அள்ளுவதையே ஆதரித்துப் பேசிய மோடியின் அழைப்பை ஏற்றுள்ள உங்களிடம் நான் கேட்பது, காந்தி வலியுறுத்தியது தூய்மையை மட்டும்தானா...? “மதம் அரசியலில் ஊடுருவக்கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகவாழ்வின் விரிவான பகுதிகள், பண்பாடு ஆகியவற்றில் இருந்து மதம் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இந்திய மதச்சார்பின்மை என்ற பெயரில் இதை மறுப்பதானது. மதச்சார்பின்மையையே மறுப்பதாகும். மதச்சார்பற்ற அரசு என்றால், மதத்தை ஊக்குவிப்பதல்ல’’  என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்துக்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தானே அவரை ஆர்எஸ்எஸ் கூட்டம் பழிவாங்கியது. அப்படிப்பட்டவர்களின் தூய்மை செயல் திட்டத்தில் எப்படி சேர்ந்தீர்கள் கமல்....? “காவியும் நாமமும், குடுமியும் கோசமும் கண்டு மயங்கும் மந்தைகளாய்” நீங்கள் மாறமாட்டீர்கள் என்ற நட்புடனே இந்தக் கடிதம்.  நலமே விளையட்டும். 

என்றும் தங்களன்பான,

லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்.

நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை: