சனி, 22 நவம்பர், 2014

வெளியே தலைக்காட்டும் மோடியின் அமெரிக்க விசுவாசம்...!

         
         இதுவரையில் புற்றில் மறைந்திருந்த பாம்பு அச்சமில்லாமல் வெளியே தலைக்காட்டிவிட்டது. இன்று வரையில் நரேந்திரமோடியின் மனதுக்குள்ளேயும் மூளைக்குள்ளேயும் உள்ளுக்குள்ளேயே மறைமுகமாக புகைந்துகொண்டிருந்த அமெரிக்க விசுவாசமும், பாசமும் இப்போது முழுதும் வெளியே வந்துவிட்டது. வருகிற 2015 - ஆம் ஆண்டில் ஜனவரி 26 அன்று நம் நாட்டின் தலைநகரில் இந்திய குடியரசு தலைவர் நம் தேசக்கொடியை ஏற்றி, இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் ''சிறப்பு விருந்தினராக'' கலந்துகொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவை விசுவாசத்துடனும், பாசத்துடனும் அழைத்திருக்கிறார். அதற்கு ஒபாமாவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒரு அமெரிக்க அதிபர் இந்திய குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும், கலந்துகொள்வதும் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாகும். 
                அதுமட்டுமல்ல நம் நாடு இதுவரையில் அணிசேரா கொள்கையை பின்பற்றிவரும் வெளியுறவு கொள்கையை கொண்ட நாடு. அதனால் தான் இதுநாள் வரையில் நம் நாட்டின் குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினாராக அணிசேரா நாடுகளை சேர்ந்த அதிபர்  அல்லது பிரதமரை மத்திய அரசு அழைத்து விழாவினை சிறப்பு செய்வார்கள். ஆனால் இம்முறை மோடி தான் பிரதமாராக பதவியேற்று நடைபெறும் முதல் குடியரசு தினவிழாவை நம்முடைய வழக்கத்திற்கு மாறாக அமெரிக்க அதிபரோடு கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். மோடி தன்னுடைய ''முதல் மரியாதையை'' ஒபாமாவுக்கு காட்டி தனது அமெரிக்க விசுவாசத்தையும், பாசத்தையும் வெளிகாட்டியிருக்கிறார். ஐ.எம்.எப். என்று சொல்லக்கூடிய அமெரிக்க சர்வதேச நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு, கடந்த பத்து ஆண்டு காலமாக  இந்தியாவின் பிரதமராக ''குப்பைக்கொட்டிய'' மன்மோகன் சிங் கூட இந்த அளவிற்கு தன்னுடைய ''எஜமான விசுவாசத்தை'' காட்டவில்லை. ஆனால் மோடி அவரையும் மிஞ்சிவிட்டார். அதனால் தானே  மன்மோகன் சிங் ''செயல்படாத பிரதமர்'' என்று அமெரிக்க பத்திரிக்கையால் வசைபாடப்பட்டார்.
            மோடி ஒபாமாவை விழாவுக்கு அழைத்துவிட்டு சும்மா அனுப்புவாரா...? நிச்சயமாக புது மாப்பிள்ளை அளவுக்கு கவனிக்காமல் அனுப்பமாட்டார். நல்லா சாப்பாடு போட்டு நிறைய பரிசுப்பொருட்களை அள்ளிக்கொடுத்து அனுப்புவார் என்பது நமக்கு தெரிந்தது தானே. இந்தியாவில் பொதுத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் இன்சூரன்ஸ், வங்கி, இரயில்வே, இராணுவம் உள்ளிட்ட அரசுத்துறைகள் அனைத்தையும் மூட்டைக்கட்டி ஒபாமா கையில் ஒப்படைக்காமல் விடமாட்டார். அதற்கு தான் ஒபாமாவிற்கு இந்த குடியரசு தின முதல் மரியாதை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 
                அதுமட்டுமல்ல இந்த முதல் மரியாதையில் இன்னொரு உண்மையும் புதைந்து கிடக்கிறது.   2015 -ஆம் ஆண்டு என்பது அமெரிக்காவின் செல்லக்குழந்தைகளான    ''எல்.பி.ஜி'' என்று சொல்லக்கூடிய தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் இந்தியாவிற்குள் நுழைந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. எனவே 2015 என்பது இந்தியாவின் குடியரசு தினவிழா மட்டுமல்ல. இந்த ''மயங்களின் ''வெள்ளி விழா'' என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதனால் தான் இந்த மயங்களிலிருந்து இடதுசாரிகளின் போராட்டங்களினால் தப்பித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இன்சூரன்ஸ், வங்கி, இரயில்வே போன்ற மிச்ச சொச்சத்தையெல்லாம் ஒன்றாக மூட்டைக்கட்டிக் கொடுப்பதற்கு மோடி ஏற்பாடு செய்கிறார் என்பது தான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

கருத்துகள் இல்லை: