புதன், 12 நவம்பர், 2014

மோடி ஆட்சியில் வளர்ச்சி யாருக்கு...?

 கட்டுரையாளர் :  தோழர்.ஜி.ராமகிருஷ்ணன்             
                                      மாநிலச்செயலாளர்,            
                                      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி            
    பங்குச்சந்தையின் ஏற்றத்தை ஒட்டுமொத்த இந்தியர்களின் ஏற்றமாகக் கற்பனை செய்துகொள்ள முடியுமா?             
             சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. ‘மத்திய அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. மேலும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள காலி இடத்தை நிரப்பவும் தடைவிதிக்கப்படுகிறது’ என்பதுதான் அந்தச் செய்தி.
          இது ஒருபுறம் என்றால் மறுபுறத்தில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் முதன்முறையாக 28,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. மேற்கண்ட இரண்டு செய்திகளும் வெளிப்படுத்தும் உண்மை என்ன?
               2014, நவம்பர் 5 அன்று டெல்லியில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கவிருப்பதாகவும், தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தப்போவதாகவும், அடுத்தடுத்து மேலும் பல பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர தனது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பேசியிருக்கிறார். பங்குச்சந்தைக் குறியீட்டு எண் ஏன் அதிகரிக்கிறது என்பதற்கும், உள்நாட்டு - பன்னாட்டு நிறுவனங்கள் மோடி அரசை ஏன் பாராட்டுகின்றன என்பதற்கும் வேறு என்ன காரணம் வேண்டும்? பங்குகளின் விலை புதிய எல்லையைத் தொட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருக்கிறது என்று வாதிடுவோரும் உண்டு. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபடுவோர், மக்கள்தொகையில் 2% மட்டுமே. இதை மட்டும் வைத்து ‘தொழில் வளர்கிறது, பொருளாதாரம் வளர்கிறது’ என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை-எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச மாற்றத்தைக்கூட உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை. 

படித்தோர் வேலையின்மை            
 
                15 வயதிலிருந்து 29 வயது வரையிலான படித்த இளைஞர்கள் மத்தியில் 32% பேர் வேலையில்லாமல் இருப்பதாக வேலையின்மை பற்றிய மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது. உயர்கல்வி பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்கள் மத்தியில் வேலையின்மையையும் அதிகரித்திருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல்தான் கிராமப்புற வேலையின்மையும்.
          முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 ஆட்சிக் காலத்தில், இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது கிராமப்புற வறுமையை முற்றாக முடிவுக்கு கொண்டுவராது என்றபோதும், குறைந்தபட்ச நிவாரணம் அளிப்பதாக அமைந்துள்ளது. கிராமங்களிலிருந்து விவசாயத் தொழிலாளர்கள் வெளியேறுவதை ஓரளவு தவிர்க்க இந்தத் திட்டம் உதவியது. ஆனால், வேலை கிடைக்காத, வருவாய் இல்லாத கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு வேலையளிக்கக் கூடிய இந்தத் திட்டத்தை மோடி தலைமையிலான அரசு சீர்குலைத்துவருகிறது.
          மனித உழைப்பைப் பயன்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தில் இயந்திரங்களைப் புகுத்தவும், ஒப்பந்ததாரர்களை அறிமுகப்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. 2010-லிருந்து 2012 வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்தத் திட்டத்துக்காக
         ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தது. 2013-14 க்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு ரூ. 33,000 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. மோடி தலைமையிலான பாஜக அரசு அடுத்த ஆண்டிலிருந்து (2015-16) 200 மாவட்டங்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தை அமலாக்குவது என்று முடிவெடுத்திருக்கிறது. நாட்டிலுள்ள மொத்த கிராமப்புற மாவட்டங்கள் 645-ல் 445 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை அமலாக்க முடியாது என்று மோடி அரசு முடிவெடுத்திருக்கிறது.
       திட்டம்சாரா செலவுகளில் 10% அளவுக்கு மானியங்கள் வெட்டப்பட வேண்டும் என்றும் மோடி அரசு முடிவுசெய்திருக்கிறது. கணவரை இழந்தோர், முதியோர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் ஓய்வூதியத் திட்டங்களுக்கும், பொதுவிநியோகத் திட்டங்களுக்குமான மானியம் குறைக்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில் அரைகுறையாக உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் சீர்குலைக்கும் வகையில் உணவு மானியம் தற்போது குறைக்கப்படுகிறது. உரமானியமும் ஏற்கெனவே குறைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், மேலும் மானியவெட்டு என்பது, ஏழை-எளிய மக்களுக்கு எதிரான, நேரடியான தாக்குதலாகவே முடியும். 

தொழிலாளர் உரிமை பறிப்பு               
 
       கடந்த 60 ஆண்டு காலமாக அமலில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என உள்நாட்டு-பன்னாட்டு நிறுவனங்கள் நிர்ப்பந்தித்துவருகின்றன.
             முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று 14 சட்டங்களைத் திருத்துவதென மோடி அரசு முடிவெடுத்திருக்கிறது. உழைப்பாளிகளை எந்தவிதமான சட்டப் பாதுகாப்பும் இல்லாமல், முதலாளிகளின் பகடைக்காயாக மாற்றும் இந்தத் திட்டத்தை ஆரவாரமாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தின் முழக்கத்துக்கு ‘உழைப்பே வெல்லும்’ என்று பெயர்சூட்டியுள்ளார். உழைப்பைக் கொல்லும் இந்தத் திட்டத்துக்கு, இத்தகைய பெயர்சூட்டியிருப்பதுதான் கேலிக்கூத்து.
           உதாரணமாக, 100 தொழிலாளர்களுக்கு மேல் எண்ணிக்கை உள்ள ஒரு தொழிற்சாலையை அரசின் அனுமதி பெறாமல் மூட முடியாது. இந்த எண்ணிக்கையை 300-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய திருத்தம் கொண்டுவரப்பட்டால், மொத்தமுள்ள தொழிற்சாலைகளில் சுமார் 70% ஆலைகளை அரசின் அனுமதி பெறாமலேயே மூட முடியும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான சட்டத்தைக் கொண்டுவர பாஜக அரசு முயல்கிறது. 

பொதுத்துறை பங்குகள் விற்பனை                 
 
           பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் ரூ. 43,425 கோடி அளவுக்குப்பொதுத் துறைப் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு (2013-14) காங்கிரஸ் தலைமையிலான அரசு ரூ. 40,000 கோடி அளவுக்குப் பொதுத் துறைப் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்திருந்தது. இதுவரையில் ரூ. 1,53,000 கோடி மதிப்புள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இத்தொகை மக்கள்நலத் திட்டங்களுக்கோ பொதுத்துறையைப் பலப்படுத்துவதற்கோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக, பெருநிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சரிகட்டுவதற்கே பொதுத்துறை பங்கு விற்பனையின் நிதி பயன்படுத்தப்பட்டுவருகிறது.
சலுகை யாருக்கு?                 
 
          மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொண்டே வரும் மோடி அரசு, பெருநிறுவனங்களுக்கு அளித்துவரும் சலுகையை மேலும் மேலும் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு, ரூ. 5.73 லட்சம் கோடி அளவுக்குப் பெருநிறுவனங்களுக்குச் சலுகை (நாட்டுக்கு வருவாய் இழப்பு) அளித்தது. மோடி தலைமையிலான அரசும் இதே அளவுக்குப் பெருநிறுவனங்களுக்கு சலுகை அளித்துவருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு பெருநிறுவனங்களுக்கு அளித்திருக்கும் சலுகை ரூ. 36.5 லட்சம் கோடி.
               1990-களில் ஆரம்பித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டில் மக்கள் மத்தியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கிவருகின்றன. நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சரிந்துவருகிறது. தேர்தல் நேரத்தில் வளர்ச்சி, மாற்றம் என்றெல்லாம் முழங்கினார் மோடி. ஆனால், அவரது ஆட்சி செல்லும் திசைவழி பன்னாட்டு- உள்நாட்டு முதலாளிகளுக்கு வளர்ச்சியாகவும், எளிய மக்களின் வாழ்க்கையில் ஏமாற்றமாகவுமே உள்ளது.
நன்றி : தி இந்து (தமிழ்)

கருத்துகள் இல்லை: