புதன், 29 அக்டோபர், 2014

மக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றும் மோடி அரசு...!

                      பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைத்திருக்கும் கருப்புப்பணத்தை பதவியேற்ற நூறே நாட்களில் இந்தியாவிற்கு கொண்டுவந்து அந்த பணத்தை அனைத்து இந்திய மக்களுக்கும் ''பிச்சி பிச்சி'' கொடுப்போம். ஆளுக்கு 11 இலட்சம் ரூபாய் கிடைக்கும் என்றெல்லாம் பாராளுமன்றத்தேர்தல் சமயத்தில் மக்களின் காதுகளில் பூ சுற்றிய பாரதீய ஜனதாக்கட்சி இன்றைக்கு ஆட்சிக்கு வந்து 100 நாட்களை தாண்டியும் தான் சொன்னதுபோல் கருப்புப்பணத்தை கொண்டுவருவதில் துப்பில்லாமல் ஒரு பக்கம் மக்களை ஏமாற்றுகிறது.
                 இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றமும் மத்திய அரசிடம் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லியும் இது நாள் வரையில் அந்த பட்டியலை தருவதற்கு மோடி அரசு தயங்குகிறது.  ஆனால் சும்மா ஒப்புக்கு மூன்று பேர்கள் மட்டும் அடங்கிய பட்டியலை கொடுத்தது. பெரும் பணமுதலைகளை விட்டுவிட்டு சின்னச்சின்ன மீன் குஞ்சுகளை மட்டும் மோடி அரசு வீசி எறிந்தது. இரகசியம் காப்பாற்றப்படவேண்டுமாம். அதனால முழுப்பட்டியலையும் தரமுடியாதாம். நீதிமன்றம் கேட்கும் தகவல்களை கொடுக்காமல் இரகசியம் என்ன வேண்டிக்கிடக்கிறது...? மத்திய அரசால் மறைக்கப்பட்ட பணமுதலைகள் எல்லாம் பாரதீய ஜனதாக்கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் படியளக்கும் எஜமான்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அவர்களை பகைத்துக்கொள்ளமுடியுமா...? அவர்களை காப்பாற்றத்தான் அன்றைக்கு காங்கிரஸ் கட்சியும், இன்றைக்கு பாரதீய ஜனதாக்கட்சியும் மக்களிடம் நாடகமாடி வருகின்றன.
                 மூன்று பேர்களை மட்டும் தூக்கி எரிந்ததை பார்த்த உச்சநீதிமன்றம் 800 பேர் அடங்கிய முழுப்பட்டியலையும் நீதிமன்றத்திற்கு உடனடியாக தரவேண்டுமென்று கடிந்து கூறிய பின் நேற்று வெறும் 627 பேர்களையே கொண்ட அடுத்தப்பட்டியலை மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதிலும் இவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய ''மாபெரும்'' பணமுதலைகளின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை: