சனி, 18 அக்டோபர், 2014

ஜெயலலிதாவின் பொறுப்பற்றத் தன்மை...!

               
             கடந்த 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு சென்ற மாதம் 27-ஆம் தேதியன்று கர்நாடக மாநில பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அவர்களால்  ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அந்நாளைய முதலமைச்சர் ஜெயலலிதா நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து உச்சநீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட  இன்று வரை தமிழகமே அல்லோலப்பட்டது. தவறு செய்த ஒருவரை தண்டிப்பதே தவறு என்று இங்கே தமிழகத்தில் இருந்த ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் நடத்திய வகைவகையான ஆர்ப்பாட்டங்களையும், ஆர்ப்பரிப்புகளையும் உலகமே பார்த்து சிரித்தது. சாலைகளில் கூடி ஒப்பாரி வைப்பதும், மொட்டையடித்துக் கொள்வதும், காவடிஎடுப்பதும், மண்சோறு சாப்பிடுவதும், பாதயாத்திரை நடத்துவதுமான காட்டுமிராண்டித்தனங்களும், இன்னொருபக்கம் தெருத்தெருவாய்  உண்ணாவிரதங்கள் இருப்பதும்,ஆங்காங்கே தீக்குளிப்புகள் நடத்தி தங்களை வருத்திக்கொள்வதும், உயிரை மாய்த்துக்கொள்வதுமான கண்மூடித்தனங்களும் நாள்தோறும் தமிழகம் முழுதும் நடந்தேறிய வண்ணம் இருந்தன.
                   அதுமட்டுமல்லாது, மேலே சொன்ன போராட்டங்களில் பேசுகின்ற அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ஜெயலலிதா சிறைசெல்லும் அளவிற்கு செய்த தவறுகளை மறைத்துவிட்டு, தமிழகம் - கர்நாடகம் சம்பந்தப்பட்ட  இரு மாநில பிரச்சனைகளாக திசைத்திருப்புவதும் தண்டனை அளித்த நீதிபதியை தரக்குறைவாக விமர்சிப்பதுமான வேலைகளில் இறங்கினர்.  மேலும் தமிழகம் முழுதும் ஆங்காங்கே  ''கடவுளை மனிதன் தண்டிக்கலாமா..?'' என்பது போன்ற வரம்பு மீறிய வாசகங்களும் வசனங்களும் அடங்கிய போஸ்டர்களும், டிஜிட்டல் பேனர்களும் காணப்பட்டன.
                  இவ்வளவு நிகழ்ச்சிகளும் சென்ற 27 -ஆம் தேதியிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஜெயலலிதாவும் அறிவார். ஆனால் இதுபோன்ற விரும்பத்தகாத காரியங்களில் இறங்கவேண்டாம் என்று அறிவுறுத்தி தன் தொண்டர்களை தடுக்க ஜெயலலிதா ஏன் முயற்சி செய்யவில்லை என்பது தான் நடுநிலையாளர்களின் கேள்வி. அப்படியென்றால் இப்படியான அமைதிகுலைப்பு வேலைகளை தான் ஜெயலலிதா விரும்புகிறாரா...? அல்லது தனது தொண்டர்களை இதுபோன்ற செயல்களில்  ஈடுபடச்செய்து தனக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்களை நிர்பந்தம் செய்திருக்கிறாரா...? என்பதும்  நடுநிலையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
                 ஆனால் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கொடுக்க  விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்று கொண்டு தன்னுடைய தொண்டர்களை மாநிலத்தில் அமைதியை  காக்கும்படியும், நீதிபதியையும், நீதிமன்றத்தையும் விமர்சிக்கவேண்டாம் என்றும் பணிவாக கேட்டுக்கொண்டது என்பது ஜெயலலிதாவின்  சுயநலத்தையும், பொறுப்பற்றத்தன்மையையும் தான் காட்டுகிறது.     

கருத்துகள் இல்லை: