ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மோடிக்கு பயந்து கழிவறையில் ஒளிந்துகொண்ட குழந்தைகள்...!

                  இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ''குரு உத்சவ்'' என்ற பெயரில் பிரதமர் நரேந்திரமோடி எதிர்கால வாக்காளர்களான இன்றைய பள்ளி மாணவ - மாணவியர்களை தன்  பக்கம் கவர்ந்திழுப்பதற்காக நாடு முழுதும் உள்ள பள்ளி குழந்தைகளுடன் ''வீடியோ கான்பரன்சிங்'' மூலம் மாலை இரண்டு மணிநேரம் பேசி உரையாடினார். பொதுவாக அந்த நேரம் என்பது குழந்தைகள் வகுப்புகளை முடித்து களைப்படைந்து ஓய்ந்து போய் வீடு சென்று சேரும் நேரம். குழந்தைகளின் அந்த ஓய்வு நேரத்தை பிரதமர் மோடி பிடுங்கிக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும். நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கட்டாயமாக பெரிய திரையில் குழந்தைகளுக்கு காண்பிக்கவேண்டும் என்றும், பள்ளிக் குழந்தைகள் அனைவரும் முழுமையாக அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு உறுதிசெய்யவேண்டும் என்றும் மத்திய - மாநில அரசுகள் பள்ளிகளை கெடுபிடி செய்தன. பதிலுக்கு பள்ளிகளும் குழந்தைகளிடம் ''உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ... கட்டாயமாக அன்றைய தினம் விடுமுறை எடுக்கவோ அல்லது நிகழ்ச்சிக்கு முன்பே வீட்டிற்கு விரைந்து சென்றுவிடுவதோ கூடாது'' என்று பள்ளிகள்  இன்னொரு பக்கம் குழந்தைகளை கெடுபிடி செய்தன.
               அரசு எதிர்ப்பார்த்தது போல் நாட்டிலுள்ள எல்லா பள்ளிகளும் மோடியின் பேச்சை ஒளிப்பரப்புவதற்காக பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டிலுள்ள பெரும்பாலான குழந்தைகள் மோடியின் பேச்சில் ஈர்ப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து உட்கார்ந்து மோடியின் பேச்சை கேட்பதற்கு இருப்பும் கொள்ளவில்லை.  மாறாக குழந்தைகள்  இதிலிருந்து தப்பிக்கிறது எப்படி என்று தான் யோசித்தார்கள். மோடி பேசிக்கொண்டிருந்த போதே பெரும்பாலான குழந்தைகள் உச்சா வருவதாக சொல்லி வகுப்பறையை விட்டு கழிவறைக்கு சென்று பதுங்கியிருக்கிறார்கள். விளையாட்டு மைதானத்தில் பதுங்கியிருக்கிறார்கள். பல பள்ளிகளில் குழந்தைகள் உச்சா போவதற்கு கூட அனுமதி மறுக்கபட்டிருக்கிறது. அந்த நேரம் என்பது குழந்தைகள் தங்கள் வீட்டில் சிற்றுண்டி உண்ணும் நேரம் என்பதால், பெரும்பாலான குழந்தைகள் பசியோடு இருந்திருக்கிறார்கள். குழந்தைகள் சாப்பிடுவதற்கு பள்ளி நிர்வாகமும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அந்த அளவிற்கு குழந்தைகளை ''கட்டிப்போட்டு'' பிரதமரின் பேச்சை கேட்க செய்திருக்கிறார்கள். என்ன கொடுமையடா சாமி...? மோடியின் ''குரு உத்சவ்'' என்பது குழந்தைகள் மீதான வன்முறையாகவே கொண்டாடப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
               பாவம் மோடி....! அவர் எதிர்ப்பார்த்தபடி அவரையோ அல்லது அவரது பேச்சையோ குழந்தைகள் ரசிக்கவில்லை. மாறாக அவருக்கு பயந்து ஓடி ஒளிந்துகொண்டார்கள்  என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை: