ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

நீதிக்கே ஜெயம்... மற்றவர்களுக்கு பாடம்....!

                              கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நேற்று மிகுந்த பரபரப்புகளுக்கிடையில் முடிவுக்கு வந்தது. 18 ஆண்டுகால இழுபறிக்குப் பின் நீதி வென்றது. இந்த தேசம் நீதியை பெறுவதற்கு 18 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியுள்ளது. மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு எதிராக வழக்குகளும், விசாரணைக் கமிஷன்களும் போடப்பட்டு நேர்மையாக விசாரணைகளை நடத்தி தீர்ப்புகளை வழங்கி தவறு செய்தவர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு தண்டிக்கப்பட்டதாக நம் நாட்டில் இதுவரை சரித்திரமே இல்லை. அப்படியாக முந்தைய காலங்களில் தவறுகள் செய்தவர்களை - இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனுக்குடன் நேர்மையான முறையில் விசாரித்து தண்டனை அளித்திருந்தால் இன்றைக்கு  நாட்டில் இந்த அளவிற்கு இலஞ்ச-ஊழல் என்பது யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக தலைவிரித்து தாண்டவம் ஆடாது. இன்றைக்கு நாட்டில் இந்த இலஞ்ச-ஊழல் குற்றங்கள் என்பது  மக்களால் அங்கீகரிக்கப்பட்ட - சட்டங்களால் - நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட குற்றங்களாக தான் பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் அரசியல் என்பது இலஞ்ச-ஊழல் செய்து சொத்து சேர்க்கும் தொழிலாக மாறிவிட்டது.
             அப்படியாக தான் கடந்த 1991- 1996 ஆண்டுகளில் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்திற்கு செல்வி. ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பணியாற்றிய போது செய்த பல்வேறு ஊழல்கள் சமாச்சாரங்கள் செய்து பதவியிழந்த பிறகு அத்தனை ஊழல்களும் வெளியே வர நீதிமன்றத்தில் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு, குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நீதிமன்றத்திற்கு வர,  1996 - ஆம் ஆண்டு முதல் நீதிமன்றங்களின் படிகளை ஏறி ஏறி தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு காரணங்களை காட்டி வழக்கை திசைத்திருப்பி நீர்க்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு  வந்தார். 1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்காக   சிங்காரவேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஜெயலலிதா முன்னாள் முதல்வராக, இந்நாள் முதல்வராக ஏறி இறங்கி இருக்கிறார். . சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து கர்நாடக மாநில நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா என்பவர் வரை சுமார் 90 நீதிபதிகள் இதுவரை இவ்வழக்கை விசாரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெங்களூரரு  சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பெங்களூரு  மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அவர்கள் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதும் தான் நீண்ட காலமாக இழுத்துக்கொண்டிருந்த இந்த வழக்கின் திசைவழியை மாற்றினார். வழக்கம் போல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தி வந்தார். நீதிபதி குன்ஹா அவர்களுடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும் தான் தீர்ப்பை நோக்கிய வழக்கின் வேகத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நீதிபதிக்கே ஜெயலலிதா தண்ணி காட்டினார். தீர்ப்பு தேதியை நீதிபதி அறிவித்தப்பின்னரும், நீதிபதி தீர்ப்பு எழுதாமலிருக்க என்னென்ன செய்யவேண்டுமோ எல்லா வழிமுறைகளையும் ஜெயலலிதா கடைசி நிமிடம் வரை முயற்சி செய்து பார்த்தார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கடைசியில் ஜெயலலிதா தோல்வியே அடைந்தார். வெற்றி பெறுவதற்காக தேர்தல் களத்தில் செய்வது போல் நீதிமன்றத்திலும்  ஜெயலலிதா செய்த எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை. இறுதியில் நீதி வென்றது. நீதிபதி குன்ஹா வென்றார். நீதிக்கே ஜெயம்...!
             தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் யார்க்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அப்படியாகத்தான் இந்த தீர்ப்பை - தண்டனையை ஜெயலலிதாவும், அதிமுக கட்சியினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் இது போன்ற தவறுகள்  செய்பவர்களை தப்பிக்கவிடாமல் ஆரம்பத்திலேயே தண்டித்திருந்தால், அன்றைய தமிழக முதலமைச்சராக பணியாற்றிய மு.கருணாநிதி செய்த தவறுகளை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கைகளை தீர்ப்புகளாக நீதிமன்றம் அறிவித்து தண்டனைக்கொடுத்திருந்தால், இன்றைக்கு நாட்டில் ஜெயலலிதா, சவுத்தாலா, லல்லு, மாயாவதி, மம்தா பானர்ஜி, எடியூரப்பா, ஆ.ராசா, கனிமொழி, கலாநிதிமாறன் போன்ற  ஊழல்வாதிகளும், மணல் முதல் கனிமங்கள் வரை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் திருடர்களும் உருவாகியிருக்கமாட்டார்கள் என்பதையும் மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.  ஜெயலலிதாவின் இந்த தண்டனை என்பது இன்றைய இந்திய அரசியவாதிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் மாற்று இருக்கமுடியாது.

கருத்துகள் இல்லை: