வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அடப்பாவமே... சம்மன் கொடுக்கத்தான் மோடிய அமெரிக்காவுக்கு கூப்டாஹளா...?

              
              2002 -ஆம் ஆண்டு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிகழ்த்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு பிறகு கடந்த ஒன்பது ஆண்டுகளாக விசா மறுக்கப்பட்டு வந்த நிலையில் அன்றையிலிருந்து நரேந்திரமோடிக்கு அமெரிக்கப்பயணம் என்பது ஒரு சிம்மசொப்பனமாகவே இருந்து வந்தது. சென்ற ஆண்டு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது கூட அமெரிக்காவில் உள்ள தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மோடி அழைக்கப்பட்ட போதும் அமெரிக்க அரசாங்கம் மோடிக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஆண்டு தோறும் உலகத்திலுள்ள நாடுகளின் தலைவர்களை அழைத்து ஐ.நா சபை நடத்தும் பொதுச்சபைக் கூட்டம் வழக்கம் போல் இந்த ஆண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்திய பிரதமர் என்ற வகையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. கட்டிடத்தில் நடைபெறவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற நரேந்திரமொடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இது அமெரிக்க அரசாங்கம் நேரடியாக மோடிக்கு விடுத்த அழைப்பு இல்லை என்பதும், ஐ.நா விடுத்த அழைப்பு என்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் அமெரிக்க அரசாங்கம் மோடிக்கு எதிரான விசா தடையை விலக்கிக்கொள்ள நேரிட்டது. 
                விசா தடையை விலக்கிக்கொள்ள முடியாது என்ற அமெரிக்கா அன்று அறிவித்தபோது, என்னை ஒரு நாள் அமெரிக்கா தானாக அழைக்கும் காலம் வரும் என்று தன் நண்பர்களிடம் சவால் விட்ட மோடிக்கு அவர் சொன்னது போல் அந்த காலம் கனிந்துவிட்ட நிலையில் தனது ''கனவு தேசமான'' அமெரிக்காவிற்கு கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்னரே அதற்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டார் மோடி என்பது தான் உண்மை. ஐ.நா சபையில் பேசப்போவது என்னமோ அரை மணி நேரத்திற்குள்ளாகத்தான். வழக்கமாக ஐ.நா-விற்கு செல்லும் இந்திய பிரதமர்கள் போனோமா... பேசனோமா... வந்தோமா... என்று தான் இருந்துவந்திருக்கின்றனர். ஆனால் மோடியோ அங்கு நான்கு நாட்கள் தங்குகிறார். பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு தன் சொந்த நிகழ்ச்சிகளில் தான் அதிகமான நேரங்களை செலவழிக்கவிருக்கிறார். 
                   அமெரிக்காவில் தங்கவிருக்கும் அந்த 100 மணி நேரத்தில் மோடி 50 கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றப்போகிறார் என்று மோடியின் நட்பு வட்டாரங்கள் மிகப் பெருமையாக சொல்கிறார்கள். ''அன்பே வா'' எம்.ஜி.ஆர் போன்று ஓய்வின்றி இடைவிடாமல் அமெரிக்க வாழ் நண்பர்களிடம் ''மேக் இன் இந்தியா... மேக் இன் இந்தியா...'' என்று பேசப்போகிறார். இதெல்லாம் விட ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், அமெரிக்கப்பயணத்தின் போது எந்தெந்த நிகழ்ச்சிகளில் எப்படியெல்லாம் ஆடைகளை அணிந்து மக்களை அசத்துவது  என்று  ஒரு ஆராய்ச்சியையே மோடி நடத்தியிருக்கிறார் என்றும்,  இதற்காக பாலிவுட்டின் பிரபல ''காஸ்ட்யூம் டிசைனர்'' டிராய் கோஸ்டா என்பவரை தனக்கு ஆடை வடிவமைப்பாளராக வரவழைத்து அவர் வடிவமைத்து தயாரித்த ஆடைகளையே மோடி அமெரிக்காவில் விதவிதமாக அணிவார் என்றும் அவரது வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமும் பார்க்கத்தானே போகிறோம்.  மோடி முதன்முதலில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றியது முதல், அதன் பிறகு பதவியேற்பு விழாவில் பேசியது, பிரேசில் நாட்டில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பிரிக்ஸ் வங்கியை தொடங்கிவைத்தது, நேபாள நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றியது, டெல்லி செங்கோட்டையில் 65 நிமிடங்கள் சுதந்திரதின உரையாற்றியது, ஜப்பான் நாட்டிற்கு சென்று வந்தது, சீன ஜனாதிபதியுடன் பிறந்தநாள் விழா கொண்டாடியது   என அனைத்து தருணங்களிலும் ஹைலைட்டாக இருந்தது அவரது ஆடைகள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இவர் ஐந்து ஆண்டு கால பிரதமர் வாழ்க்கையை முடிக்கும் போது அனேகமாக நம்ப ஊரு ஜெயலலிதா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட  ஆயிரக்கணக்கான ஆடைகளை விட மோடியின் வீட்டில் இருக்கும் ஆடைகள் அதிகமாக இருக்கும் என்று அவரது நெருங்கிய வட்டாரங்களே பெருமையாக சொல்கிறார்கள்.    
               இப்படிஎல்லாம் பலவகையான தாயாரிப்புகளோடு நம்ப நரேந்திரமோடி தான்  அமெரிக்க மண்ணில் கால் பதிக்கும் போது  தனக்கு  பூங்கொத்துகளும், பரிசுகளும் கொடுத்து தடபுடலாக வரவேற்பளிப்பார்கள் என்ற கனவுகளோடு உற்சாகத்தோடு புறப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது என்பது தான் உண்மை. மோடி இந்தியாவிலிருந்து விமானம் ஏறி பறக்கும்  வரை காத்திருந்து, அவர் விமானம் அமெரிக்காவில் இறங்குவதற்குள் மோடியை நோக்கி அமெரிக்க நீதிமன்றத்திலிருந்து சம்மன் ஒன்று பறந்து வந்து மோடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2002 - ஆம் ஆண்டு மோடி குஜராத் மாநில முதலமைச்சராக பணியாற்றியபோது இஸ்லாமியர்களுக்கெதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை நரேந்திரமோடியே தலைமை தாங்கி முன்னின்று நடத்தியது. இது மனித உரிமைக்கு எதிரானது'' என்று மோடியை குற்றம் சாட்டி, 21 நாட்களுக்குள் இதற்கு மோடி பதிளிக்கவேண்டும் என்றும் அந்த சம்மனில் குறிப்பிட்டு அமெரிக்கா  வந்த மோடிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மோடி எதிர்பாராத கிளைமாக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

THEVESH M சொன்னது…

Where is the news that Summons has been served. Your happiness would end soon. You do not understand the American Security system provided to World leaders. USA is not India.