வியாழன், 4 செப்டம்பர், 2014

மோடியின் ''குரு உத்சவ்'' - பள்ளிகளில் கெடுபிடி...!

                 நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்த காலத்திலிருந்தே ஒரே ''திணிப்பு'' தான். நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னரே மோடி தான் பிரதமராக வருவார் என்ற ''கருத்துத் திணிப்பு'' ஆட்சிக்கு வந்த பின்பு ''ஹிந்தி திணிப்பு'' பின்னர் ''சம்ஸ்கிருத திணிப்பு'' ரம்சான் நோன்பிருந்த இஸ்லாமிய இளைஞன் வாயில் ''சப்பாத்தி திணிப்பு'' இப்போது ஆசிரியர் தினத்திற்கு பதிலாக ''குரு உத்சவ்'' என்ற ''பெயர் திணிப்பு'' அந்த விழாவையொட்டி பள்ளிக்குழந்தைகளின் மீது மோடியின் ''காட்சி திணிப்பு'' ஒரே திணிப்பு தான் போங்க. ''திணிப்பு புகழ்'' மோடி என்று எதிர்கால வரலாறு பேசும். மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, மோடி மூளையில் உதித்ததை கூச்சப்படாமல் மக்களிடம் திணித்து விடுவார்.
             அப்படித்தான் இத்தனை ஆண்டுகளாக நாடு முழுதும் மறைந்த இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை கல்வியாளர் - அறிஞர் என்ற முறையில் ''ஆசிரியர் தினமாக'' சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. மோடி ஆட்சிக்கு வந்தாரு ஆசிரியர் தினத்தை ''குரு உத்சவ்-ன்னு'' மாத்திட்டார். அந்த புதிய பெயரை பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைங்க மூளையில கட்டாயமாக திணிச்சார். குரு  உத்சவ் என்ற பெயரில் நாட்டிலுள்ள எல்லா பள்ளிகளிலும் செப்டம்பர் - 5 அன்று மாலை ''மோடி உத்சவ்'' நடக்கும் என்றும், நேரலையில் பள்ளிக்குழந்தைகள் மத்தியில் ஒன்றரை மணி நேரம் காட்சிக் கொடுப்பார் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்து பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ''கட்டாயம்'' பார்க்கச் செய்யவேண்டுமென்றும் நரேந்திரமோடி மற்றுமொரு ''திணிப்பை'' செய்திருக்கிறார். 
              இப்போது நாட்டுல ஜெனங்க - குழந்தைங்க எல்லோரும் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனையும் மறந்துட்டாங்க... ஆசிரியர் தினத்தையும் மறந்துட்டாங்க. அதுமட்டுமா காலையில் பள்ளிக்கு வந்துட்டு பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு, பாடம் படித்துவிட்டு ஆசிரியர்களும், மாணவ - மாணவியர்களும் களைச்சிப் போயி வீடு சென்று சேரும் நேரத்தில், உத்சவத்தை பாரு... மோடிய பாருன்னு மாலை 5.30 மணி வரையில் ஸ்கிரீன்ல அந்த மூஞ்சியே பார்த்துகிட்டு இருக்கணும்னு கட்டாயமா திணிச்சதுல ஆசிரியர்களும், பொதுமக்களும், பள்ளிக் குழந்தைகளும் கொதிச்சிப்போயி இருக்கிறாங்க. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கெடுபிடி செய்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் தனியார் பள்ளிகளில் கேட்கவே வேண்டாம். சுற்றறிக்கை எட்டடி பாஞ்சா... நிர்வாகமோ  பதினாறு அடி பாய்வார்கள். மோடி நிகழ்ச்சி பிடிக்கிறதோ அல்லது பிடிக்கலையோ அவசியம் நாளைய தினம் கட்டாயம் பள்ளிக்கு வந்துவிடவேண்டும். பள்ளிக்கு வராம லீவு போட்டாலோ அல்லது வந்துட்டு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே கிளம்பிவிட்டாலோ டி. சி கொடுக்கப்படுமென்று நிர்வாகம் கெடுபிடி செய்கிறது. இந்த கட்டாய திணிப்பைப் பற்றி நிர்வாகத்திடம் கேட்டால், அரசு இப்படித்தான் எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். 
              ''குரு உத்சவ்''-ல மோடி என்னன்ன ''சேஷ்டைகளை'' செய்யப்போகிறாரோ என்று ஆசிரியர்களும், குழந்தைகளும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: