வியாழன், 18 ஜூலை, 2013

எம். ஜி. ஆரை மக்கள் நாயகனாக உயர்த்திக் காட்டிய கவிஞர் வாலி...!


                          எம்.ஜி.ஆரின் ஆரம்பக்கால திரைப்படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஏற்றவாறு நல்ல நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுகிற பாடல்களை எழுதிக்கொடுத்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது. அவரது மரணத்திற்கு பின் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் கவிஞர் வாலி தான் என்று சொன்னால் அது மிகையாகாது. எம்.ஜி.ஆர் தன்னை திரையுலகின் அசைக்கமுடியாத கதாநாயகனாகவும், அரசியல் உலகில் செல்வாக்குமிக்க மக்கள் நாயகனாகவும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு நல்லக் கருத்துக்களை கொண்ட - தன் கொள்கைகளை எடுத்துச் சொல்லுகின்ற பாடல்களை எம்.ஜி.ஆர் நினைப்பது போல் - எதிர்ப்பார்ப்பது போல் பாடல்களை படைக்கும் திறமை வாலியிடம் மட்டுமே இருந்தது. ''நான் ஆணையிட்டால்...'' மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்....'' கண் போன போக்கிலே கால் போகலாமா...'' ''தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று...'' தரைமேல் பிறக்க வைத்தான்...'' போன்ற பாடல்களெல்லாம் தமிழக மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆரை மக்கள் நாயகனாக உயர்த்திக்காட்டின என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.
     அதேப் போல் எம்.ஜி.ஆர் படங்களுக்கு வாலி படைத்த அத்துணைக் காதல் பாடல்களும்  காதல் கனி ரசம் ததும்ப இனிமையாகவும், சுவையாகவும் இருப்பதுடன்  கண்ணியமிக்கதாகவும், வரம்பு மீறாமலும் இருக்கும் என்பதும் அவரது சிறப்பம்சமாகும். 
       அது மட்டுமின்றி எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பாடல்களை எழுதிய வாலிக்கும், சிவாஜி கணேசனுக்கு மட்டுமே எழுதிய கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டியே இருந்தது. எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் புகைப்பிடிப்பது போலவோ, மது அருந்துவது போலவோ நடிக்கமாட்டார் என்பது எல்லோரும் அறிந்ததே.  ஆனால் ''ஒளிவிளக்கு'' என்ற திரைப்படத்தில் மட்டும் குடிப்பதுபோல் நடித்திருப்பார். ஆனால் அந்த காட்சியில் குடித்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்த்து அவரது மனசாட்சியே வெளியே வந்து திட்டுவது போல பாடலை வாலி மிக அருமையாக கொடுத்திருப்பார். ''தைரியமாக சொல் நீ மனிதன் தானா....இல்லை நீ தான் ஒரு மிருகம்...'' என்று குடித்தவனைப் பார்த்து சாட்டையடி கொடுக்கிற பாடலாக வாலி கொடுத்திருப்பார். ஆனால் இந்த பாடலை அன்றையக் காலத்தில் எம்.ஜி.ஆரின் போட்டிக் கதாநாயகனாக பார்க்கப்பட்ட - குடிப்பழக்கம் உள்ள கதாநாயகனாக அறியப்பட்ட சிவாஜி கணேசனோடு பொருத்திப் பார்த்தார்கள். எனவே வாலியின் அந்தப் பாடலுக்கு பதிலளிக்கும் வகையில் கண்ணதாசனும் அடுத்து வந்த சிவாஜி கணேசனின் திரைப்படத்தில் ''யாரடா மனிதன் அங்கே.. கூட்டி வா அவனை இங்கே...'' என்ற எதிர்பாட்டை கொடுத்திருப்பார். இப்படியான ஆரோக்கியமான போட்டி என்பது இந்த இரு பெரும் கவிஞர்களிடையே அந்தக் காலத்தில் இருந்தது.
       அதேப் போல, ஒளிவிளக்கு திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்காக இவர் எதேச்சையாக எழுதிக்கொடுத்த ''இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...'' என்ற பாடல் தான் பிற்காலத்தில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மரணப்படுக்கையில் மருத்துவமனையில் இருந்த போது அவர் உயிர்பிழைக்க பிரார்த்தனைப் பாடலாக மாறியது. எம்.ஜி.ஆர் உடல்நலம் பெற்று எழுந்து வரும் வரையில் இந்தப் பாடலை தமிழகத்திலுள்ள எல்லாத் திரையரங்குகளிலும் தினமும் அனைத்துக் காட்சிகளிலும் இந்தப் பாடலை போட்டு பிரார்த்தனை செய்தார்கள். எம்.ஜி.ஆர் நலம் பெற உங்கள் பாடல் தான் காரணம் என்று ஒரு முறை வாலியிடம் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையார் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
         இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் பாடல்களை கேட்கும் போது அவரை உன்னதமான மக்கள் தலைவனாக உயர்த்திக்காட்டும் பாடல்களாகத் தான் இருக்கும். எம்.ஜி.ஆரை குன்றின் மேல் வைத்த விளக்காக உயர்த்திக் காட்டிய பெருமை கவிஞர் வாலியையே சாரும் என்று சொன்னால் அது மிகையாகாது.

கருத்துகள் இல்லை: