வெள்ளி, 12 ஜூலை, 2013

மோடியின் பொய்களும், பொய் ஊதும் குழல்களும்...!


கட்டுரையாளர் : மிரிணாள் பாண்டே,           
                                 மூத்த பத்திரிக்கையாளர், தி ஹிந்து            
தமிழாக்கம் : தீக்கதிர்          
      ஜோசப் ஹெல்லெர் எழுதிய ''கேச் 22'' என்ற ஆங்கில நாவலில் வரும் பாதிரியார் ஒருவர் ஒரு தந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். துர்க்குணங்களை நற்குணங்களாக, திருட்டை கௌரவமாக, மிருகக்குணத்தை தேசபக்தியாக, அதே போன்று பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பதை நீதியாக மாற்றுவது குறித்ததே அந்தத் தந்திரம். இதைச் செயல்படுத்துவதற்கு ஒருவருக்கு மூளை தேவையில்லை, மனச்சாட்சியும், நேர்மையும் இல்லாமல் இருந்தாலே போதும் என்றும் அவர் கூறினார். 
          அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு! அண்மையில், உத்தரகாண்டில் வெள்ளமும் மலைச்சரிவும் ஏற்பட்ட போது, இப்படி பி.ஜே.பி.யின் மனச் சாட்சியும், நேர்மையும் இல்லாத உள்ளூர் கட்சிச் செயலாளர் ஒருவர் மிகப் பெரிய பொய்யை ஒரு ஆங்கில நாளேட்டு நிருபரிடம் அவிழ்த்து விட்டார். குஜராத் முதல்வர் மோடி தனது தனி விமானத்தையும், ஸ்போர்ட்ஸ் வாகனங்களையும் அனுப்பி, வெள்ளத்தில் சிக்கிய 15,000 குஜராத்தி பக்தர்களை இரண்டே நாட்களில் மீட்டு வந்து விட்டார் என்பதே அவர் கூறிய செய்தி.
          இந்தப் பரபரப்பான செய்தி காட்டுத்தீயாக பரவிய போது, சங்கடமான கேள்விகள் பல எழுந்தன. 8000 ராணுவ வீரர்கள் மலைச்சரிவில் மீட்புப் பணியில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மோடியின் ஆட்களால் மட்டும் அவ்வளவு எளிதில் அந்த இடத்தினை எப்படி அடைய முடிந்தது? விமானம் மூலம் எப்படி அவர்களை மீட்க முடிந்தது? அதுவும் குஜராத்திகளை மட்டும் அடையாளம் கண்டு, 48 மணி நேரத்தில் அது எப்படி சாத்தியமாயிற்று? இந்தப் பொய்யை பி.ஜே.பியின் கூட்டாளியான சிவசேனா கூட ரசிக்கவில்லை என்பது தான் உண்மை. காப்பாற்றுவது என்று வரும் போது, எல்லாப் பக்தர்களையும் தானே காப்பாற்றியிருக்க வேண்டும், அது என்ன குஜராத்தி பக்தர்கள் மட்டும் என்பது போன்ற தார்மீகக் கேள்விகளும் கூடவே எழுந்தன. பின்னர் போகிற போக்கில் இந்தச் செய்தியினை மோடி, அத்வானி போன்றவர்கள் மறுத்து விட்டார்கள். பொய்ச்செய்திகளைப் பரப்புவதும், கேள்வி எழுந்தால் சமாளிப்பதும் இந்தத் தந்திரத்தில் ஒரு பகுதியே. ஊடகங்கள் இப்படித்தான் தன்னைப் பற்றி தவறாகப் பேசுகின்றன என்று சமாளிப்பதற்குக் கூட அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கேள்விகளே எழாவிட்டால், பொய்கள் செய்தியாக மாறிவிடுகின்ற லாபம் இருக்கிறதல்லவா? எனவே தான் அதைத் தொடர்கிறார்கள். 
           ராஜ மரியாதை! மற்ற அரசியல் தலைவர்களைப் போல மோடி சாதாரணமாக தோற்றமளிக்க மாட்டார். எப்போதுமே, காரில் ஏறுவதற்கு முன்பு ஏதாவது ஒரு வரிச்செய்தியினை மைக்கில் சொல்லி விட்டுத்தான் காரில் ஏறுவார். ராஜா வரும் போது கொம்பு தாரை, தப்பட்டை என்று இருக்குமே அது போன்றதொரு ராஜ வரவேற்பு ஏற்பாடுகளை மோடியின் ஆதரவாளர்கள் எப்போதும் செய்து வைத்திருப்பார்கள். அவர் மேடைக்கு வந்தவுடன் புன்னகையின்றி, லேசாகத் தலையை அசைப்பார். அவரைப் பேச அழைக்கும் முன்பாக ஒருவர் அவரை வெகுவாகப் புகழ்ந்து பேசுவதற்கான ஏற்பாடு எப்போதும் இருக்கும். அதைக் கேட்டுக் கொண்டே, மோடி தனது தாடியை மெதுவாகக் கோதி விட்டுக் கொண்டே, எதிரில் தனது ஆதரவாளர்கள், எதிரிகள் என யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார். பெரிய பாடகர்கள் மனதிற்குள் ராகங்களைப் பாடிக்கொண்டே பாடுவதற்கு வருவார்களே அது போன்று, அவர் பேசுவதற்கு முன்பாக, விஷயங்களை மென்றுகொண்டே வருவார். பேசத் தொடங்கியவுடன் தான், அவரது சரடு திரிக்கும் திறமை உங்களுக்குப் புரியும்.
             இவரைப் பொறுத்த மட்டில், முடிந்த வரை பத்திரிகையாளர்களின் கேள்விகளைத் தவிர்த்து விடுவார். குஜராத்தின் பெருமை, குஜராத்திற்கு வரும் அந்நிய முதலீடுகள், மதக்கலவரத்தைத் தூண்டும் எதிர்க்கட்சிகள், பயங்கரவாதம், அதனை வேரறுக்க வேண்டிய தேவை, சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் போக்குகள், சி.பி.ஐ அதிகாரத் துஷ்பிரயோகம் என பல விஷயங்கள் குறித்து அவர் பேசுவார். அவர் பேசுகின்ற அனைத்தும் 24 மணி நேரமும் உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விடுகின்றன. இந்தப் பேச்சுக்களை முதலில் கேட்கும் போது அதை ஏற்க முடியாது. ஆனால், அதை மீண்டும் கேட்கக்கேட்க, ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ எனத் தோன்றும்.
          கடைசியில் நமது நிர்ணயிப்புக்கள் குறித்து நமக்கே சந்தேகம் வரும் அளவிற்கு செய்திகளின் தாக்கம் அமைந்துவிடும். எதிர்க்கேள்வியே பதிலாக…பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மோடி பதிலளிக்கும் பாணியும் வித்தியாசமானது. “முஸ்லிம்கள் உங்களை ஏன் வெறுக்கிறார்கள்?” எனக் கேட்டால், தான் இமாம்களுடன் கை குலுக்கும் புகைப்படங்களைத் தூக்கிக் காண்பிப்பார். “அமெரிக்கா உங்களுக்கு ஏன் விசா மறுக்கிறது?” எனக் கேட்டால், “அமெரிக்க செனட்டர்கள் பலர் குஜராத் மாநிலம் குறித்து எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் தெரியுமா” எனப் பத்திரிகையாளர்களைத் திருப்பிக் கேட்பார். அதன் பின்னர், உலக வங்கி, சில பொருளாதார அறிஞர்கள் குஜராத்தைப் பற்றிப் பாராட்டிக் கூறியிருப்பதைப் பற்றிப் பேசுவார். சிலதவறான செய்திகளால் தவறான முடிவுகளுக்கு வந்து விடக்கூடாது என, பத்திரிகையாளர்களுக்கு சில சமயம் அவர் அறிவுரை கூறுவதும் உண்டு. 370 வது அரசியல் சாசனப் பிரிவு, ராமர் கோவில் என்று பல பிரச்சனைகளில் அவரது வகுப்புவாதக் கருத்துக்கள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும், தன்னை ஒரு தேசபக்தர் போல காட்டிக்கொள்ளும் பகீரத முயற்சிகளில் இறங்கி வருகிறார். அவரது அத்தகைய முயற்சியில் சிலர் பலியாவதும் உண்டு. ஆனால், கூர்மையாக விஷயங்களைக் கவனிப்பவர்களை அவரால் ஏமாற்ற முடியாது.

1 கருத்து:

அ. சாதிக் அலி சொன்னது…

உங்கள் கட்டுரை அனைத்தும் உண்மையை உரித்துக் காட்டுகின்றன... தொடரட்டும் உங்கள் சேவை ராம்ஜி...