வியாழன், 4 ஜூலை, 2013

தலாய்லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்த இந்திய அரசு எட்வர்ட் ஸ்னோடெனுக்கு மறுப்பது ஏன்...?

       

        

         
     
               அமெரிக்க அரசால் தேடப்பட்டு வரும் ஒரு வீரமிக்க இளைஞர் முதலில் ஹாங்காங்கில் தலைமறைவாய் இருந்து பின்னர் தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்து கொண்டு, தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் கோரைப்பற்களில் சிக்காமல் தப்பிக்க உங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுங்கள் என்ற இந்தியா உட்பட இருபது நாட்டு அரசுகளுக்கு அந்த மாவீரன் ஸ்னோடென் வேண்டுகோள் விடுத்தபோது உடனடியாக இந்திய அரசு  மறுத்து விட்டது
         யார் இந்த எட்வர்ட் ஸ்னோடென்...?  அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட பின்லேடன் போன்ற தீவிரவாதியோ அல்லது பயங்கரவாதியோ அல்ல.  அமெரிக்க நாட்டை துண்டாக்கி பிரித்துக்கொடு என்று கேட்கும் பிரிவினைவாதியும் அல்ல. அல்லது அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக கம்யூனிசம் பேசி போராடும் புரட்சிக்காரரும் அல்ல. என்றாலும் அமெரிக்கா ஸ்னோடெனை கொலைவெறி கொண்டு ஏன் தேடிவருகிறது...? அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கே அடைக்கலம் கொடுத்ததற்காக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை அமெரிக்கா  மிரட்டும் அளவிற்கு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
         அப்படி என்ன ஸ்னோடென் அமெரிக்காவிற்கு துரோகம் இழைத்துவிட்டார்....? அப்படிஎல்லாம்  துரோகம் ஒன்றுமில்லை. அமெரிக்காவைப் பற்றிய கீழ்த்தரமான ஒரு உண்மைச் செய்தியை ஹாங்காங்கிலிருந்து துணிந்து வெளியிட்டு விட்டார் என்பதே அமெரிக்காவிற்கு அவர் மீதான கோபத்திற்கான காரணம் ஆகும். அப்படி என்ன அவர் சொல்லிட்டார்....?  அமெரிக்க உளவுத்துறைகளான CIA மற்றும் NSA போன்ற உளவு நிறுவனங்கள், உலகில் பரவிக்கிடக்கும் சமூக வலைதளங்களான facebook, tweeter மற்றும் e-mail போன்றவற்றை அமெரிக்கா கண்காணிக்கிறது - உளவு பார்க்கிறது என்கிற உண்மையை வெளியிட்டுவிட்டார் என்பது தான் அமெரிக்காவிற்கு அவர் மீது வந்த கோபத்திற்கான காரணம். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தையும் உளவு பார்க்கிறது என்பதும் கூடுதலான தகவலாக ஸ்னோடென் வெளியிட்டுயிருக்கிறார். இப்படி அமெரிக்கா உளவு பார்ப்பது என்பது ஒன்றும் புதிதல்ல. அண்டை நாடுகளை உளவு பார்ப்பதற்கும், தோழர். பிடல் காஸ்ட்ரோ போன்ற தனக்கு வேண்டாத வெளிநாட்டு தலைவர்களின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்கும் அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் பல ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. அடுத்தவர் இரகசியங்களை ஒட்டுக்கேட்பதும், பக்கத்து வீட்டு படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதுமான மானங்கெட்ட வேலைகள் அமெரிக்காவிற்கு கைவந்த கலை.
            ஆனால் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டிருக்கும் அமெரிக்க உளவு வேலை பற்றியத் தகவல் புதுவிதமானது. இன்றைக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், தகவல் பரிமாற்றங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் பங்காற்றி வளர்ந்து வருவது சமூகவலைத்தளங்கள் தான். இதுவரையில் வலைத்தளங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்கள் இரகசியமானது என்று தான் நாம் நினைத்துக்கொண்டு செயல்படுகிறோம். ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகளோடு   பூட்டி பாதுகாக்கப்படுகின்ற வலைத்தளங்களைக் கூட திறந்து பார்க்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இருக்கிறது என்பது ஆபத்தானது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் பூட்டிவைக்கப்பட்ட தகவல்களை திறந்து பார்த்து அமெரிக்கா கண்காணிக்கிறது என்றால் இதைவிட படுகேவலமான மானங்கெட்டச் செயல் வேறு இருக்கமுடியாது. இப்படிப்பட்ட இந்தத் தகவலை அமெரிக்க இளைஞன் ஒருவன் - அதுவும் இப்படிப்பட்ட மானங்கெட்ட செயல்களை செய்யக்கூடிய இடத்திலேயே வேலை பார்த்த ஒரு இளைஞன் அச்சப்படாமலும், தயங்காமலும் வெளியிடுகிறான் என்றால் இந்திய அரசு அவனை பாராட்டி பாதுகாப்பு அளித்திருக்க வேண்டாமா...? ஆனால் அந்த இளைஞன் இந்தியாவில் அடைக்கலம் கேட்டு வேண்டிக்கொண்ட போது, உடனடியாக இந்திய அரசு அந்த இளைஞனுக்கு அடைக்கலம் தர மறுத்திருக்கிறது என்பது யாரை திருப்திப்படுத்த....? அமெரிக்கா சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறது என்ற தகவல் வெளியானதும், இந்திய அரசு அமெரிக்காவின் செயலைக் கண்டிக்காதது ஏன்....?
          அதுமட்டுமல்ல சீனாவில் திபெத்தை பிரித்து தனி நாடு கோரி பிரிவினைவாதத்தை தூண்டும் மதவாதி தலாய்லாமாவிற்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்திய அரசு... இன்னொரு திபெத்து மதவாதியான கர்மபா லாமா என்பவருக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்திய அரசு.... ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் மன்னரின் குடும்பத்தாருக்கும், நேபாள் நாட்டின் பதவியிறக்கப்பட்ட மன்னருக்கும், அவர் குடும்பத்தார்க்கும் இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த இந்திய அரசு.... இலங்கையில் பிரிவினைகளை தூண்டிய பல்வேறு பிரிவுகளின் தலைவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த இந்தியஅரசு... பங்களாதேஷ் நாட்டின் பிரச்சனைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த இந்திய அரசு... எட்வர்ட் ஸ்னோடெனை மட்டும் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றத் தயங்குவது ஏன்...? இது தான் இந்திய அரசு காட்டும் அமெரிக்க ''எஜமான விசுவாசமா...?''.

கருத்துகள் இல்லை: