வெள்ளி, 12 ஏப்ரல், 2013

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய மேற்குவங்க ஆளுநர்....!


                                                                              

         மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி ரவுடிகள் இந்திய மாணவர் சங்கத் தோழர்களை குறிவைத்து தாக்குவதும், கொலை செய்வதுமான நாசகார வேலைகளில் 
ஈடுபடுவதும், அதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஊக்கமளிப்பதும் அன்றாட நடவடிக்கைகளாக ஆகிவிட்டன. நேற்று முன் தினமும் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான பிரசிடென்சி பல்கலைக்கழகத்தை திரிணாமுல் கட்சி ரவுடிகள் வெறி கொண்டுத் தாக்கி இருக்கிறார்கள். பயங்கர ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த 
திரிணாமுல் கட்சி ரவுடிகள் கண்ணில்  பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பின்னர் வகுப்பறைகள்  மற்றும் ஆய்வுக்கூடங்களின் உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கியிருக்கின்றனர். 1913 - ஆண்டு விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றாண்டுப் பழமைவாய்ந்த ''பாகர் லேபரட்டரி'' மற்றும் அனைத்துத் துறைக்குள்ளும் நுழைந்து அடித்து நொறுக்கியிருக்கின்றார்கள்.  பல்கலைக்கழகமே பதற்றத்திற்குள்ளாகி இருக்கிறது. மாணவ - மாணவியர்களும், பேராசிரியர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள். பல்கலைக்கழகமே போர்க்களமாய் மாறிப்போயிருக்கிறது.
        ஆனால் மேற்குவங்க ஆளுநரும், திரிணாமுல் கட்சி ரவுடிகள் தாக்கப்பட்ட பிரசிடென்சி பல்கலைக்கழக வேந்தருமான எம். கே. நாராயணன் வெறுமனே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கட்சித் தோழர்களையும், மாணவர் சங்கத் தோழர்களை குறிவைத்துத் தாக்குகிறார்கள். இவை எல்லாவற்றையும் ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பொறுப்பான பதவியில் உட்கார்ந்து கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்.
            அதுமட்டுமல்ல பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து திரிணாமுல் ரவுடிகள் மாணவ - மாணவியர்களை தாக்குகிறார்கள். பல்கலைக்கழகத்தையே அடித்து நொறுக்குகிறார்கள். கோபமுற்ற பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பாலாபிகா சர்க்கார் கூட திரிணாமுல் கட்சிக் குண்டர்களை கண்டித்து பேட்டியளித்தார்கள். ஆனால் பல்கலைகழக வேந்தருக்கு மட்டும் கோபமே வரவில்லை. ஆளுநர் இதைக்கண்டிக்காமல் வாய்மூடி மௌனமாய் இருந்தது என்பது கண்டிக்கத்தக்கது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான மாநில அரசை கண்டிக்காமல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருப்பதும் அதை விட கண்டிக்கத்தக்கது.
        மாறாக நேற்று ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான எம். கே. நாராயணன் பிரசிடென்சி பல்கலைக்கழகம் சென்று மாணவ - மாணவியர்களை சந்தித்து உரையாடியிருக்கிறார். நடந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக ''நான் ஆளுநர் மற்றும் வேந்தர் என்ற முறையில் நான் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்கு பல்கலைக்கழக மாணவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்'' திரும்பத்திரும்ப பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல மம்தா அனுப்பிய ரவுடிகளால் இவ்வளவு நடந்திருக்கிறது. ஆனால் கூடவே மாணவ - மாணவியர்களிடையே மம்தாவிற்காக  தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். ''பிரசிடென்சி பல்கலைக்கழகத்தை சிறந்த முன்மாதிரியான பல்கலைக்கழகமாய் மாற்றுவது தான் மம்தாவின் கனவு திட்டாமாகும்'' என்று ஒரு போடு போட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: