திங்கள், 22 ஏப்ரல், 2013

வாஷிங்டனில் இன்சூரன்ஸை ஏலம்விட்ட அமினா சிதம்பரம்...!


                இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்துவது ஐ.மு. கூட்டணி அரசின் முன்னுரிமை செயல்திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். இதனை அவர் எங்கே, எவர் முன்னிலையில் கூறியிருக்கிறார் என்பது கூடுதல் கவனத்திற்கு உரியது. அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில், பீட்டர்ஸன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்டர்நேசனல் எகனாமிக்ஸ் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தில் சனிக்கிழமையன்று உரையாற்றிய சிதம்பரம் இவ்வாறு உறுதியளித்திருக்கிறார். பொருளாதார ஆய்வறிக்கைகளின் பெயரால் உலகமய-தனியார்மய-தாராளமய கொள்கைகளை மற்ற நாடுகள் ஏற்று நடைமுறைப்படுத்த வைப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றான அந்த நிறுவனத்தின் மூலமாக அமெரிக்காவின் பன்னாட்டுத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு சிதம்பரம் ஒரு சமிக்ஞை காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புடன் இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன் வரைவு நிறைவேறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
         காங்கிரஸ் ஆட்சியை எதிர்ப்பது போல் எதிர்த்துக்கொண்டு, அதன் இப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளுக்குக் கூச்சமின்றி ஆதரவளித்து வரும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்படிப்பட்ட நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியிருப்பார் என்பது ஒன்றும் ஊகிக்க முடியாததல்ல. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பிரச்சனையில் இந்த “எதிர்க்கட்சிகள்” மன்மோகன் சிங் அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை மறந்துவிட முடியுமா? இந்த சட்டமுன்வரைவின் எதிர்ப்பாளர்களை காப்பீட்டு நிறுவனங்கள் அணுகியிருப்பதைப் பாராட்டியிருக்கிறார் அவர். காப்பீட்டு நிறுவனங்களின் இந்த முயற்சி எதிர்க்கட்சிகள் பிரச்சனையைப் புரிந்துகொள்ளவும், சட்டமுன்வரைவு நிறைவேறவும் உதவும் என்று உறுத்தலே இல்லாமல் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். 
       சில்லரை வர்த்தகத்துறை விவகாரத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது வர்த்தக மேம்பாட்டுத்திட்டத் தின் ஒரு பகுதியாக இந்தியாவில் ரூ.160 கோடி வரை செலவிட்டுள்ளது என்றும், எதிர்ப்புத் தெரிவித்தவர்களை “அனுசரித்துப் போகச் செய்வதற்கான” முதலீட்டுச் செலவுதான் அது என்றும் செய்திகள் வந்துள்ளன. இந்தியாவுக்குள் அரசியல் ரீதியாக அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் தலையிடுவதற்கும் அதற்காக “செலவு செய்வதற்கும்” அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை ஐ.மு. கூட்டணி அரசு அளிக்கிறது என்பதற்கு சிதம்பரத்தின் இந்தப் பாராட்டைவிடவும் வேறு சாட்சியம் தேவையில்லை.
            இந்திய காப்பீட்டுத் துறையில் இதுவரை முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது உலகளாவிய வருவாயின் ஒரு பகுதியை இந்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் உள்கட்டுமான வளர்ச்சிக்கும் திருப்பிவிடும் என்று ஆரம்பத்தில் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன. இன்று வரையில் சுமார் 6,700 கோடி ரூபாய் அளவுக்கு கூட்டுப்பங்கு முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வாறு தங்களது உலக வருவாயின் ஒரு சிறுபகுதியைக் கூட இந்திய தொழில் - உள்கட்டுமான வளர்ச்சிக்கு ஒதுக்கியதாக ஒரு ஆதாரமும் கிடையாது என்பதை அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆக மக்கள் நலன்களை விடவும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் மனம் குளிரச் செய்வதிலேயே ஐ.மு.கூட்டணி அரசு அக்கறையோடு இருக்கிறது. அதை முறியடிக்க நடக்கிற போராட்டத்திற்கு பேராதரவு அளிப்பது ஒரு தேசப்பற்றுக் கடமை.

 நன்றி :


கருத்துகள் இல்லை: