
புவியில் மானுடம் நிகழ்த்திய மகத்தான கண்டுபிடிப்புதான் மொழி.
எங்கெல்லாம் மனிதர்கள் பரந்து குடியேறி வாழத் தொடங்கினார்களோ அங்கெல்லாம்
அந்தந்தச் சூழலுக்கேற்ப தங்களது மொழியை உருவாக்கிக் கொண்டார்கள். மொழி
ஒரு உணர்வு வெளிப்பாடாக மட்டுமல்லாமல், சமுதாய வளர்ச்சிக்கான தகவல்
தொடர்புக்கருவியாகவும் உருவெடுத்தது. மக்களின் இன, பண்பாட்டு
அடையாளமாகவும் பரிணமித்தது. ஆகவேதான் உலகின் ஒவ்வொரு இனத்திற்கும்
சமூகத்திற்கும் தனது தாய் மொழி அடையாளம் முக்கியமானதாகியது. அது தாக்குதலுக்கும் அடக்குமுறைக்கும் அழிப்புக்கும் உள்ளாகிற போது போராட்டங்கள்
வெடிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி - 21 அன்று உலக தாய்மொழி
தினமாகக் கடைப்பிடிப்பது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக்குழு 2009 மே
16 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாளுக்கு ஒரு வரலாற்றுப்
பின்னணி உண்டு. 1947 - ல் பாகிஸ்தான் நாடு உருவான பிறகு, அதன் ஆட்சி மொழி உருது
என அறிவிக்கப்பட்டது.
இதை இன்றைய வங்கதேசமாக இருக்கக்கூடிய அன்றைய கிழக்கு பாகிஸ்தான் மக்கள்
ஏற்கவில்லை. அவர்கள், “எங்கள் தாய்மொழி வங்காள மொழி தான். அதையே
இப்பகுதியின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தான்
மக்கள் மத வேறுபாடின்றிப் போராடினார்கள். கடந்த, 1952 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 - ஆம் தேதி பாகிஸ்தான் அரசு, மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக விதித்த ஊரடங்கு உத்தரவையும்
மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள்
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ
அமைப்பு, 1999 - ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.
இந்தப் போராட்டம்தான் பின்னர் பேரியக்கமாக வளர்ந்து, உலக வரைபடத்தில்
பங்களாதேஷ் நாடு அடையாளம் பெற்றது. பங்களாதேஷ் நாட்டின் தேசியகீதம் கூட இந்திய கவிஞன் ரவீந்திரநாத்
தாகூர் எழுதிய வங்கமொழி பாடல் தான் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். பிப்ரவரி 21 தாய்மொழி உரிமையைப்
பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நாளாகியது. இந்த ஆண்டு, “தாய்மொழிக் கல்விக்காக புத்தகங்கள்” என்ற மைய
முழக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தொடக்கக்கல்வி முதல்
உயர்கல்வி வரையில் தாய்மொழிகளிலேயே பெற முடியும் என்ற நிலை வர வேண்டும்,
அதற்கான புத்தகங்களும் தாய்மொழிகளிலேயே கிடைக்க வேண்டும் என்பதே இந்த
முழக்கத்தின் உட்பொருள். இந்தியாவிற்கும் - குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கும்
இந்த முழக்கம் இன்றைய காலப் பொருத்தம் தான்.
"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'' என்பது பொன்மொழி.
கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு
வழிகாட்டுவோம்.
1 கருத்து:
தாய்மொழிக்கென்று ஓர் நாள், தகவலுக்கு நன்றி, தமிழ்மொழி வளர நன்றியுடன் இயன்றதெல்லாம் கடமையெனச் செய்வோம்.
கருத்துரையிடுக