திங்கள், 11 பிப்ரவரி, 2013

விஜய் டி வி - யின் '‘நீயா நானா’' நிகழ்ச்சி தந்த அதிர்ச்சி..!

கட்டுரையாளர் : ஆளூர் ஷாநவாஸ்                  
                                சமூக வலைதள எழுத்தாளர் 
       விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் களப்பணியாளர்களும், மறுபக்கம் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தொடர்பற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். எழுத்தாளர் என்ற முறையில் நானும் பங்கேற்றேன்.
                இன்றைய நிலையில் தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் எவை? என்ற கேள்வியை, இளைஞர்களை நோக்கி முன்வைத்தார் கோபிநாத். ஏராளமான இளைஞர்களின் கருத்துக்கள் மேலோட்டமாகவே இருந்தன. லஞ்சம், ஊழல், மின்சாரம் என்பதைத் தாண்டி அவர்களுக்கு இந்த சமூகத்தில் நடக்கும் எந்த அவலங்களைப் பற்றியும் தெரியவில்லை. பல இளம்பெண்கள் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைப் பற்றி அதிகம் பேசினர். அவர்களுக்கும் கிராமப்புறங்களில் நாள்தோறும் நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றியோ, வாச்சாத்தி பற்றியோ, கயர்லாஞ்சி பற்றியோ எதுவும் தெரியவில்லை.
             இஸ்லாமியர்கள் குறித்த உங்கள் பார்வை என்ன? என்று அடுத்த கேள்வியை கேட்டார் கோபி. அதற்கு பதில் சொன்ன ஒரு மாணவர் ‘எனக்கு நிறைய முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க; ஆனால், எங்க அம்மா முஸ்லிம் பசங்க கூட பாத்து பழகுப்பா! என எச்சரிக்கிறார்’ என்றார். இன்னொரு இளைஞர் ‘முஸ்லிம்கள் என்றாலே டெரரிஸ்ட் தான்’ என்ற தோற்றமே எங்களுக்கு விதைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
                     குஜராத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து இளைஞர்களுமே ‘நல்ல நிர்வாகம்; சிறந்த முதல்வர்’ என்று பாராட்டுக்களையே தெரிவித்தனர். ஒருவருக்குகூட குஜராத்தின் மறுபக்கம் தெரியவில்லை.
                கூடங்குளம் குறித்த கேள்விக்கு ‘மின்சாரம் அவசியம்; அதனால் அணு உலை நிச்சயம் வேண்டும்’ என்றே இளைஞர்கள் கூறினர். உதயகுமார் அம்மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று சொன்னார் ஒரு மாணவி. இடஒதுக்கீடு பற்றி கேட்கப்பட்ட போது மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. பெரும்பாலான இளைஞர்கள் ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்’ என்று ஒரே குரலில் முழங்கினர். ஒரு தலித் இளைஞரே ‘இடஒதுக்கீடு எனக்கு தேவையில்லை; அதனால் பிற சமூகங்களைச் சார்ந்த என் நண்பர்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று ஒரே போடாகப் போட்டார்.
       எதிர்பக்கம் இருந்த சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப்போய் விட்டோம். என்ன நடக்குது இங்கே? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களில் ஓங்கி நின்றன. முடிந்தவரை அனைத்துக்கும் விளக்கம் கொடுத்து அவர்களுக்கு புரிய வைத்தோம்.
          
நான் பேசும்போது ஒன்றைச் சொன்னேன். ‘இங்கே எதிர்புறம் இருக்கும் இளைஞர்களின் வயதொத்த நான், கடந்த 15 ஆண்டுகளாக சமூக வெளியில் எழுதி, பேசி, இயங்கிக் கொண்டிருக்கிறேன். சமூக செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவருமே அவ்வாறு இயங்கி வருகின்றனர். ஆனால், எங்கள் கருத்துக்கள் இந்த இளைய சமூகத்திடம் சென்று சேர்வதில்லை. இவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கக் கூடாது என்பதில் ஊடகங்கள் முன்முடிவோடு செயல்படுகின்றன. ஊடகங்கள் சொல்வதையே இவர்களும் உலகம் என்று நம்புகின்றனர். அதுதான் பிரச்சனை’ என்றேன்.
            பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், சிறுபான்மை அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு என்று என்னென்னவோ நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை எதிலுமே தொடர்பற்ற ஒரு தலைமுறை நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை கவனிக்காமலேயே இருக்கிறோம்.
             ‘நாம் சுமக்க வேண்டிய சுமைகளும், கடக்க வேண்டிய தூரங்களும் மிக மிக அதிகம்’ என்ற சிந்தனையே, ‘நீயா நானா’ அரங்கை விட்டு வெளியேறும்போது எனக்கு ஏற்பட்டது.

1 கருத்து:

raja சொன்னது…

I really feel the same on watching this program. We think now young generation are more intelligent and having more knowledge. But, they don't have simple and basic ideas about the current burning issues. They are knowing the things which are projected by the Media.