ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

இரத்தத்தின் இரத்தமே.... இதெல்லாம் ரொம்ப ஓவரு தெரியுமா....?


        முன்னாள் முதலமைச்சர் எம்ஜியார் உயிருடன் இருந்த காலங்களில் பொதுக்கூட்டங்களில் பேசும் போது,  தன்னுடைய கட்சித்தொண்டர்களை ''என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே'' என்று அழைத்து தன் பேச்சை தொடங்குவது வழக்கம். தொண்டர்களை அவ்வாறு அழைப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, அவர் முன்பு ஒருமுறை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களால் சுடப்பட்டு கழுத்துப்பகுதியில் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் மீதிருந்த அன்பின் காரணமாக அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக  அவருக்கே தெரியாமல் அவரது இரசிகர்கள் பலபேர் அவருக்கு இரத்ததானம் செய்திருக்கிறார்கள். அதனால் தான் எனக்கு இரத்தம் கொடுத்து உயிர் கொடுத்த என் தொண்டர்களை
நான் அவ்வாறு அழைக்கின்றேன் என்று பதிலளித்தார். 
           ஆனால் இன்றோ ஒரு திரைப்பட நடிகர் கராத்தே ஹுசைனி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய 6.5 லிட்டர் இரத்தத்தையும், மற்றவர்களிடமிருந்து பெற்ற 4.5 லிட்டர் இரத்தத்தையும் உறையவைத்து தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உருவச்சிலையை செய்திருப்பது என்பது பாராட்டத்தக்க செயல் அல்ல. போற்றுதலுக்குரிய செயல் அல்ல என்பதை அவரைப் போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது போன்ற செயல் என்பது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரை கவருவதற்காக ஏதாவது வித்தியாசமாக செய்வது என்பது ஒரு வழக்கமாகவே போய்விட்டது. உடம்பில்  பச்சைக்குத்திக்கொள்வது, நாக்கை வெட்டிக்கொள்வது, காலில் விழுவது, அடிமைப் போன்று கை கட்டி வாய் பொத்தி குனிந்து நிற்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் எல்லாம் முதலமைச்சரை வேண்டுமானால் சந்தோஷப்படுத்தலாம். ஆனால் இப்படிப்பட்ட செயல் என்பது  அவருக்கோ அவரது ஆட்சிக்கோ எந்தவிதமான பெருமையையும் தராது என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.
            இரத்தம் என்பது உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றுவதற்காக கருணை மனம் கொண்டு தானம் செய்யப்படுவது. இன்றைக்கு அவசரமாக தேவைப்படும் நேரத்தில் இரத்தம் கிடைக்கபெறாமல் நிறையப்பேர் இறந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இரத்தத்தை - அதுவும் 11 லிட்டர் இரத்தத்தை இந்த நடிகர்  சர்வசாதாரணமாக உறையவைத்து சிலை செய்திருப்பது என்பது முட்டாள்தனமானது - காட்டுமிராண்டித்தனமானது என்று தான் சொல்லவேண்டும். இதையெல்லாம் அனுமதித்தால், பிறகு உடம்பில் உள்ள சதையை எடுத்து முதலமைச்சர் வீட்டு நாய்க்கு போடுவார்கள். உடம்பிலிருக்கும் எலும்பையும் நரம்பையும் எடுத்து முதலமைச்சருக்கு நாற்காலி செய்வார்கள். எனவே முதலமைச்சர் ஜெயலலிதாவே இதுபோன்ற செயலை அனுமதிக்காமல் கண்டிக்கவேண்டும்.

2 கருத்துகள்:

Saha, Chennai சொன்னது…

அடப்பாவிகளா, ஒங்க காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா? இரத்தம் உங்களுக்கெல்லாம் அவ்வளவு மலிவா போச்சா?

குலவுசனப்பிரியன் சொன்னது…

//எனவே முதலமைச்சர் ஜெயலலிதாவே இதுபோன்ற செயலை அனுமதிக்காமல் கண்டிக்கவேண்டும்.//

தொண்டர்கள் தங்களை ஜெ எப்படி குரூரமாக நடத்துகிறார் என்பதைத்தான் காட்டி இருக்கிறார்கள். அவரைத்தான் கண்டிக்கவேண்டும்.