ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

அரசால் செய்யப்படும் உயிர் கொலையே தூக்கு தண்டனை..!

                   
                    இந்திய பாராளுமன்றத் தாக்குதலுக்கு  காரணமாகக் கருதப்பட்ட  அப்சல் குருவை சென்ற வாரம் சர்ச்சைக்குரிய முறையில் தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அவசர அவசரமாக தூக்கிலிட்டுக் கொன்றது என்பது இன்றைக்கு ஒரு அவசியமான விவாதத்தை நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறது. அறிவியலும் நாகரீகமும் வளர்ந்த இந்த காலக்கட்டத்தில்,  மனிதாபிமானத்தையும், மனிதநேயத்தையும் விரும்பி வளர்க்கிற இந்த காலக்கட்டத்தில், காந்தியின் தேசம் என்று பெருமையாக பேசப்படும் நம் நாட்டில் இனியும், காலகாலமாக  நடைமுறையில் இருக்கின்ற உயிரைக்கொல்லும் தண்டனையான ''மரண தண்டனை'' என்கிற ''தூக்கு தண்டனை'' தேவைதானா...? என்கிற கேள்வி இன்று மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.  
           தூக்கு தண்டனை என்பது தேவைதானா...? என்ற விவாதம் தேவைப்படுகிறது என்று அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட அறிவித்துள்ளது. ஒரு உயிரை இரக்கமின்றிக் கொன்றவனை தூக்கிலிட்டுக் கொல்வது தான் நியாயம் என்றும், நீதியென்றும் சாதாரணமாக மக்களின் மனதில் ஊறிப்போன ஒரு வழக்கு. ஆனால் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பது நியாயமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தவேண்டும். அதை ஆட்சியாளர்களும் உணரவேண்டும்.  
              கடந்த பல ஆண்டு காலமாகவே மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், '' மரணதண்டனை என்பது அரசின் கோழைத்தனத்தை குறிப்பதாகும். அது  எந்த பலனையும்  கொடுக்காது. மரணதண்டனை விதிப்பது என்பது முட்டாள்தனமானது. நீதித்துறையில் உள்ள தூக்குதண்டனை என்கிற இந்தக் கறையை நீக்கவேண்டும்'' என்று மரணதண்டனையைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.  
          தண்டனை என்பது குற்றவாளிகளை திருத்துவதற்கு தானே அன்றி சாகடிப்பதற்கு அல்ல. கொன்றுவிடுவதால் அவன் திருந்துவதற்கு வாய்ப்பில்லையே. இதுவரை கொலைக் குற்றவாளிகளுக்கு நீதி மன்றத்தினால் தூக்கு தண்டனை கொடுத்ததில் நாட்டில் கொலைக்குற்றங்கள்   குறைந்துவிட்டதா...?  அப்படியொன்றும் இல்லையே..! மாறாக, ஆண்டாண்டு அதிகரித்துக்கொண்டு  தானே இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி  தீர்வாகும்...?  என்பதையும் யோசிக்கவேண்டும்.
.          கொலை  செய்வதவனை  தூக்கிலிடுவது  என்பதும் ஒரு  கொலைக்கு சமமானது தானே..? ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பது எப்படி நியாயமாகும்...?தூக்கு  தண்டனையை அரசே நிறைவேற்றுவதால் அதை நியாயம் என்று ஒப்புக்கொள்ளமுடியுமா..? தூக்கு தண்டனை என்பது அரசே செய்கிற கொலை என்பதை யாராலும் மறுக்க முடியுமா...? ஆம்.. இது அரசே  செய்கிற  கொலை ஆகும்.  இது மனிதத்தன்மையற்றது. காட்டுமிராண்டித்தனமானது. உயிர் வாழும் உரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும்.  அரசும், சமூகமும் இதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.  மதிப்பு மிக்க மனித உயிர்களை மதித்திடல் வேண்டும்.
              நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், ''பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்பாவி இளைஞர்களை தூக்கிலிடுவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். அன்றும் இன்றும் தூக்குதண்டனை என்பது ஆட்சியாளர்களின் கொடிய முகமாகவே இருக்கிறது நாம் உணரவேண்டும் 
                முன்பு ஒருமுறை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கமிஷன் மரணதண்டனையை தடை செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்திய போது, அந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது வெட்கக்கேடானது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குதண்டனையை - மரணதண்டனையை ரத்து செய்திருக்கின்றன. ஆனால்  இந்தியா உட்பட வெறும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை என்பது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை: