செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

நீதிபதி மார்கண்டேய கட்ஜு பதவி விலக பா.ஜ.க. - வினர் ஏன் துடிக்கிறார்கள்....?



              இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து தான் பிரஸ் கவுன்சில் என்றால் என்ன என்றே புரிந்தது. இவருக்கு முன்பு இப்பொறுப்பில் இருந்தவர்கள் இந்த பதவியை ஒரு அலங்கார பதவியாக அனுபவித்திருந்திருக்கிறார்கள். பத்திரிக்கை சுதந்திரம் - கருத்து சுதந்திரம் என்றெல்லாம் நம் நாட்டில் இருந்தாலும், பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் நெறிப்படுத்தும் வகையில் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகத்தான் இந்த பிரஸ் கவுன்சில் என்பது 1966 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. அன்றையிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றவர்கள் அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தியது கிடையாது அல்லது பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
          ஆனால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒரு பொறுப்பான தலைவராக செயல்படுகிறார் என்பது நமக்கு கிடைத்த ஆறுதல். ''நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே'' என்று நேர்மையுடனும் உண்மையுடனும் செயல்படுகிறார் என்றால் அது மிகையாகாது. பத்திரிகை சுதந்திரத்தின்  - கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை பிடிக்கும் ஆட்சியாளராக இருந்தாலும் அல்லது அரசியல்வாதியாக இருந்தாலும், அல்லது பத்திரிகை சுதந்திரத்தை - கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பத்திரிக்கையாக இருந்தாலும் அல்லது பத்திரக்கையாளராக இருந்தாலும் தயக்கமின்றி இடித்துரைத்து நேர்ப்படப் பேசுபவர் தான் நீதிபதி மார்கண்டேய கட்ஜு என்பதை நாடே அறியும்.
           குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை  வருகிற 2014 - ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சினர் மத்தியில் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று முன் தினம், நீதிபதி கட்ஜு அவர்கள் அவரது வலைப்பூவில் குஜராத் சம்பவங்கள் பற்றியும், மோடியைப் பற்றியும் எழுதிய கட்டுரையொன்றில், ''1933 - இல் ஜெர்மானியர்கள் செய்த தவறை 2014 - இல் நீங்கள் செய்துவிடாதீர்கள்'' என்று இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 1933 என்பது ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்ற ஆண்டு என்று சொன்னதன் மூலம், மோடி ஹிட்லருக்கு இணையானவர் என்று நீதிபதி கட்ஜு  சித்தரித்திருந்தார். ஒரு வாசகம் என்றாலும், திருவாசகம் மலர்ந்தார் இந்த மாணிக்கவாசகம் நீதிபதி கட்ஜு என்று நாடே பாராட்டுகிறது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் மட்டும் ஒரே கொந்தளிப்பு.
        மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு எழுதியதற்காக நீதிபதி கட்ஜு பதவிவிலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பா ஜ க - வின் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்கவையின் எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி கொக்கரித்தார். ஆனால் பாஜக - வின் இந்த கோரிக்கையை நாட்டு மக்கள் சட்டை செய்யவில்லை.

கருத்துகள் இல்லை: