ஞாயிறு, 24 ஜூன், 2012

தேசியக்கொடியை காப்பாற்றிய பாரத அன்னையின் திருக்குமாரர்களை தேசம் பாராட்டுகிறது...!

                 மகாராஷ்டிர மாநில தலைமைச்செயலகமான மந்த்ராலயாவில் கடந்த வியாழக்கிழமை மதியம் 2.45 மணியளவில் அலுவலகம் நடந்து கொண்டிருந்த போதே பாதுகாப்பு  குறைபாடுகள் காரணமாக திடீரென்று  தீவிபத்து ஏற்பட்டது. தலைமைச்செயலக கட்டிடத்தின் 4வது மாடியில் பற்றிய தீ, மளமளவென்று ஆறாவது மாடியை வெகு விரைவாக எட்டி எரியத்தொடங்கியது. அந்த சமயத்தில்  தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அச்சமடைந்து  தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக படியிறங்கி அங்கும் இங்கும்  ஓடினார்கள். அப்படியும்  வெளியே வரமுடியாதவர்களை தீயணைப்புப் படையினர் ஏணிகளை பயன்படுத்தி வெளிப்புற ஜன்னல்கள்  வழியாக காப்பாற்றி இறக்கினார்கள். காற்றின் வேகத்தால் தீப்பிழம்பு   கரும்புகையுடன்மந்த் ராலயா கட்டிடத்தையும் தாண்டி எரிந்துகொண்டிருந்தது. 
       
 


    இந்த சூழ்நிலையில், அந்த தலைமைச்செயலகக்  கட்டிடத்தின் உச்சியில் வழக்கமாக காலையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி பறந்துகொண்டிருந்தது. எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு பறந்து ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வேளையில், தங்கள் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முற்படாமல் கட்டிடத்தின் உச்சியில்   பறந்து கொண்டிருந்த தேசிய கொடி எரிந்து நாசமாகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் பாரியா மற்றும் அவரது உதவியாளர்கள் என மொத்தம் ஆறு பேரும்  கட்டிடத்தின் உச்சியை நோக்கி ஓடினார்கள். அந்த ஆறு பேரும்   தீயையும், ஆபத்தையும், உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ஆறு பேரும் சுமார் 2 மணிநேரம் போராடி மந்த்ராலயா கட்டிடத்தின் உச்சியில் அமைந்துள்ள கம்பத்தில் பறந்துகொண்டிருந்த தேசியக்கொடியை காப்பாற்றி பத்திரமாக இறக்கினார்கள் என்பதை தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது.   
              சுதந்திரப்போராட்டக் காலத்தில், அந்நியர்களின் தடியடிக்கும் அஞ்சாமல், தன் உயிரையும் பொருட்படுத்தாமலும் உயிர் போகும் நேரத்திலும் தான் பிடித்த இந்த தேசத்தின் கொடியை  தாழவிடாமல் காத்த திருப்பூர் குமரனை நாம் பார்த்ததில்லை. தங்கள் உயிரையும்  பொருட்படுத்தாமல், தங்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தீப்பிழம்பிலிருந்து நம் தேசக்கொடியை காப்பாற்றிய பாரத அன்னையின் திருக்குமாரர்களை பார்க்கும் போது நமக்கெல்லாம் பெருமையாய் இருக்கிறது. உண்மையுடனும் உறுதியுடனும்  தங்களது கடைமையாற்றிய இவர்களை நாடு சிலிர்ப்புடன் பாராட்டுகிறது. வணங்குகிறது.

கருத்துகள் இல்லை: