திங்கள், 18 ஜூன், 2012

உலகம் சுற்றும் ''வாலிபன்'' - ரெக்கை கட்டிப் பறக்கும் எஸ். எம். கிருஷ்ணா....!

            நம்ம நாட்டுல ஜனாதிபதியாகவோ.... பிரதமராகவோ.... மந்திரிகளாகவோ.... ஆகிட்டா போதும்... நாட்டுக்கு நல்லது செய்யணும்... மக்களுக்கு சேவை செய்யணும்னு எல்லாம் யோசிக்கிறாங்களோ இல்லைய... முதல் வேலையா அவங்க யோசிப்பது    வெளிநாட்டு   சுற்றுப்பயணம்  தான். மக்கள் வரிப் பணத்தை  - அரசு பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து குடும்பத்தோடு வெளிநாடுகளுக்கு சென்று சுற்றிப் பார்க்கவேண்டும் என்பது தான் அவர்களின் இலட்சியமாக இருக்கிறது என்பதை நாம்  கண்கூடாக பார்க்கும் உண்மையாகும். அதுவும் வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகித்தால், அவ்வளவு தான். வெளிநாட்டு நாட்டு மந்திரியாகவே ஆகிவிடுவார். அவரை  இந்தியாவில் பார்க்கவே முடியாது. ஆகாயத்திலேயே  பறந்துகிட்டு தான் இருப்பாரு. எப்போதாவது இந்தியாவிற்கு வந்துட்டுப் போவாரு.
            இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா வரை அப்படித்தான் அரசின் பணத்தை செலவு செய்து உலகம் சுற்றியவர்கள்.
            அதுவும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தான் மத்திய அமைச்சர்களிலேயே மிக அதிகமாக வெளிநாட்டிற்கு  சுற்றித் திரிபவர் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். 2009 - ஆம் ஆண்டு மே 23 அன்று அமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை சுமார் 201 நாட்கள் வெளிநாட்டிலேயே தன் காலத்தை கழித்திருக்கிறார் என்பது ஓர் அதிர்ச்சியான தகவல் தான். அந்த 201 நாட்களும் அவர் சுற்றித் திரிந்த  நாடுகள் மொத்தம் 43. இவர் இத்தனை நாடுகளுக்கும் சுற்றி வந்தது யாரு வீட்டுப் பணத்தில்...? அது மக்கள் பணம்... நம் வீட்டுப் பணம் என்பதையும் மக்கள் மறந்துவிடக்கூடாது.
               இப்படியாக தான் இந்த கிருஷ்ணா மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு சென்று விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்த்து மாட்டிக்கொண்டார். இவர் அதிகமான முறைகள் பயணம் செய்ததும்,  மிக அதிகமான நாட்கள் தங்கியிருந்ததும் அமெரிக்கா தான். அதேப்போல் எஸ். எம் கிருஷ்ணா அதிகமான முறைகள்  சந்தித்த மனிதர் யார் தெரியுமா...? அமெரிக்காவின்  வெளியுறவு செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் மட்டும்தான்.....

கருத்துகள் இல்லை: