சனி, 2 ஜூன், 2012

இந்த பொருளாதார ''மேதைகளின்'' கையில் சிக்கித் தவிக்கிறது இந்திய பொருளாதாரம்....!
           சமீப காலமாகவே மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் புலம்பல் ரொம்ப ஓவரா தான் இருக்கு. ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துகொண்டே போகிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டே போகிறது. இதுக்கெல்லாம் காரணம் இந்த ஜெனங்களுக்கு மானியமா கொட்டிக் கொடுப்பது தான் என்றும், இப்படியாக மக்களுக்கு கோடிக்கணக்கில்  மானியமாக  தருவது தான் இந்த பொருளாதார சீர்கேட்டுக்கு காரணம் என்றும் இந்திய தேசத்தின் ''மரியாதைக்குரிய'' பொருளாதார ''மேதைகள்'' மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, முதன்மை பொருளாதார ஆலோசகர்கள் சி. ரங்கராஜன் மற்றும் கவுசிக் பாசு போன்றவர்கள் ஓவென்று ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்று இவங்க எல்லோரும் அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தார்கள். எதோ நாட்டு மக்களுக்கு தான் நல்லது செய்யப்போறாங்கன்னு நினைச்சா.... ஏத்து பெட்ரோல் விலையன்னு சொல்லி 7.50 ரூபாய்க்கு பெட்ரோல் விலைய ஒரேயடியா ஏத்தி  புட்டானுங்க. ஏற்கனவே உணவுப்பொருட்களின் விலை உயர்வினால் தாக்குபிடிக்க முடியாமல் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட  ஜெனங்க அந்த கஷ்டத்த அனுபவிக்கும் போதே  அடுத்து டீசல், சமையல் கேஸ் விலையையும் உயர்த்தனும்னு இந்த பொருளாதார ''மேதைங்க'' எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்க.
                  122 கோடி மக்கள் மக்கள் தொகை கொண்ட இந்திய நாடு ''ஒளிரும் இந்தியா'' (SHINING INDIA) என்றும், ''கஷ்டப்படும் இந்தியா'' (SUFFERING INDIA) என்றும் இரண்டாக இருக்கிறது. ஒளிரும் இந்தியாவில் வெறும் 66 பெருமுதலாளிகளும், பணக்காரர்களும் இருக்கிறார்கள். கஷ்டப்படும் இந்தியாவில் 122 கோடி நடுத்தர  மக்களும், சாதாரண மக்களும், அன்றாடம் காய்ச்சிகளும் தான் இருக்கின்றார்கள்.
        மத்திய - மாநில  அரசுகள் ஆண்டு தோறும் தாக்கல் செய்யும் பட்ஜெட்டிலும், அவ்வப்போதும் ''கஷ்டப்படும் இந்தியாவில்'' வாழும் அந்த 122 கோடி மக்களின் தலையில் தான் பல வகை வரிகளாக ஏற்றி வைப்பார்கள். கொடுக்கப்பட்ட  மானியங்களை வெட்டுவார்கள். இது போதாதென்று, இந்த மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் விலைகளையும் முன் பேர  வர்த்தகம் -  ஆன் - லைன் வர்த்தகம் என்ற பெயர்களில் கடுமையாக உயர்த்தி ஒரே தாக்கு தாக்குகிறார்கள். 
                      இந்த ''கஷ்டப்படும் இந்தியாவில்'' தான், வேலையின்மை, வேலை இழப்பு, உயராத ஊதியம், ஊதியத்தில் வெட்டு, போராடி பெற்ற உரிமைகள் மற்றும் சலுகைகள் ரத்து, மக்களின் சேமிப்பில் வரி குறைப்பு, மக்கள் வாங்கிய கடன்களுக்கு கூடுதல் வட்டி இப்படியாக ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையினால்,  மக்களின் ''வாங்கும் சக்தியை'' குறைத்துவிட்டு, அவர்கள்   போட்டிருக்கும் துணிகளையும் உருவி ஒட்டுத் துணியில்லாமல்  அம்மணமாய்  மக்களை  நடமாடவிடுவார்கள்.  
            அனால் ''ஒளிரும் இந்தியாவில்'' ஒரு சதத்திற்கும் குறைவானவரே வசிக்கும் பெரும் முதலாளிகள் மற்றும் பணக்காரர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள். அவர்களுக்கு மட்டும் ஆட்சியாளர்கள் ஆண்டு தோறும் மத்திய- மாநில  பட்ஜெட்களில் வரிச்சலுகைகளையும்,  மானியங்களையும்  கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் கஷ்டப்படக்கூடாதாம். இந்த ''கடைந்தெடுத்த'' அறிவு ஜீவிகளான பொருளாதார ''மேதைகள்'' நமக்கு கதை சொல்லுகிறார்கள்.   
                           இன்னொரு பக்கம் இவர்களுக்கு ஒரு இலட்சம் கோடிக்கு மேல் வங்கிகள் மூலமாக கொடுக்கப்பட்டு அதற்கு ''வராக்கடன்'' என்று ஆட்சியாளர்களே அதற்கு பெயரையும் வைத்து, அவர்களிடமிருந்து கடனையும், வட்டியையும்  வசூல் செய்யாமல் ''காந்தி கணக்கில்'' சேர்க்கப்பட்டிருக்கிறது.
           ''ஒளிரும் இந்தியாவில்'' வசிப்பவர்கள் கணக்கில் காட்டாமல் வரிகளை ஏய்த்து கொள்ளையடித்த  ''கோடிகளை'' ஆட்சியாளர்களின் கருணையோடும், ஆதரவோடும் சுவிஸ் வங்கியில் சேர்த்து  வைத்திருக்கிறார்கள். அந்த ''கேடிகளின் கோடிகளுக்கு'' ஆட்சியார்களே பாதுகாப்பு.  மறுப்பக்கம், இந்த ''ஒளிரும் இந்தியர்கள்''  பங்குச்சந்தையில் சூதாடிப் பெருக்கும்
கோடிகளுக்கும் வருமான வரி கிடையாது. ஆனால், ''கஷ்டப்படும் இந்தியர்கள்'' தாங்கள்
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த வங்கி சேமிப்பு மற்றும் இன்சூரன்ஸ் சேமிப்பில் ''முதிர்வு பலன்'' சில இலட்சங்களையே பெறும் போது அதற்கு வருமானவரி பிடித்தம் செய்துவிடுவார்கள். 
                    இப்படியாக சமநிலையில்லாத - ஏற்றத்தாழ்வுகள் கொண்ட பொருளாதாரத்தை நியாயப்படி - முறைப்படி சரி செய்யாமல், விலைவாசி உயர்வாலும், பெட்ரோல் விலை உயர்வாலும் கொதிப்படைந்திருக்கிற மக்களை ஏமாற்றும் விதமாக ''சிக்கன நடவடிக்கை'' என்ற பெயரில் இந்த பொருளாதார மேதைகள் ஒரு ''முட்டாள்தனமான'' நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசு அலுவலகங்களுக்கு வாகனங்கள் வாங்குவது தவிர்க்கப்படுமாம்,  திட்டங்களின் மறுமதிப்பீட்டுக்கு அனுமதி கிடையாதாம், . கருத்தரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்தும் போக்குகளுக்குத் தடையாம் அத்துடன், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டுமாம். இவைகளெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலைகள். எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் மத்திய அரசு ஒரு கண் துடைப்பு வேலையை செய்துகொண்டிருக்கிறது. 
            ஆட்சியாளர்கள் ''ஒளிரும் இந்தியாவை'' கைப்பற்றினால் தான் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் சீரடியும்.
             1 ) பெருமுதலாளிகளுக்கு கோடிக் கோடியாய்  கொடுக்கப்படும் மானியங்களையும்,
                  வரிச்சலுகைகளையும் நிறுத்த வேண்டும்.
             2 ) வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை
                  மீட்கவேண்டும்.
             3 ) பெருமுதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்
                  கொடுக்கப்பட்ட ''வராக்கடனை'' வசூல் செய்யவேண்டும்.
              4 ) கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் பெருமுதலாளிகளுக்கு வருமானவரி
                  தற்போதுள்ள முப்பது சதவீதத்திலிருந்து குறைந்தது ஐம்பது சதவீதமாவது
                  உயர்த்த வேண்டும்.
    5 ) பெருமுதலாளிகள் பங்குச்சந்தையில் ஈட்டும் நிதிகளுக்கு வருமானவரி விதிக்கவேண்டும்.
       6 ) அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய ''ஊழலை'' முற்றிலும் ஒழிக்கவேண்டும்.
              7 ) வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். உழைக்கும் மக்களுக்கு வருமானத்தை அதிகப் படுத்தவேண்டும்.                    விலைவாசியை குறைக்கவேண்டும். மக்களுக்கு கொடுக்கவேண்டிய வட்டியை அதிகப்படுத்தவேண்டும்.                   மக்கள் கட்டவேண்டிய வட்டியை குறைக்கக் வேண்டும். இவைகள் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவேண்டும்.
 
               இதையெல்லாம் செய்யாமல் மத்திய அரசு எடுத்திருக்கும் சிக்கன நடவடிக்கைகள் ஓர் ஏமாற்று வேலையே ஆகும்.  

கருத்துகள் இல்லை: