வியாழன், 7 ஜூன், 2012

அலுவாலியாவுக்கு கக்கூஸ் கட்ட 35 இலட்சமா...? என்னாங்கடா டேய்...?            புதுடெல்லியில் உள்ள திட்டக்கமிஷன் அலுவலகத்தில்  திட்டக்கமிஷன் துணைத்தலைவர் உள்ளிட்ட பத்து உயர் அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் கழிவறையை புதுப்பித்துக் கட்டுவதற்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா..? வெறும் 35 இலட்சமாங்க...! ஆச்சரியமாக இல்லை..? சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
             நம் நாட்டில் 75 சதவீத மக்கள் கழிப்பறை கட்ட வசதியில்லாமல் திறந்தவெளியை பயன்படுத்துகிறார்கள். நிறைய அரசு பள்ளிகளில் பெண்குழந்தைகள் பயன்படுத்துவதற்கு கழிப்பிடமில்லாமல் பகல் நேரத்திலேயே திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் இந்த நாட்டில் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள் வருமானமாக 28 ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் அதிகம் வாங்கினால் கூட அவன் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துவிட்டதாக சொல்லிய திட்டக்கமிஷன் துணைத்தலைவரும், பொருளாதார ''மாமேதையும்'' - ஆன மாண்டேக் சிங் அலுவாலியா தான் பயன்படுத்தும் கழிவறையை சீர் செய்வதற்கு 35 இலட்சம் ருபாய் அரசுப் பணத்தை செலவு செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, '' இதில் என்ன தவறு இருக்கிறது'' என்று தான் செய்த இந்த செயலை நியாயப்படுத்துகிறார். 
           அதுவும் நாட்டின் பொருளாதாரம் என்பது நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய  சூழ்நிலையில்,    அரசு பணத்தை சிக்கனமாக செலவு செய்து, பொருளாதாரத்தை   சீர்ப்படுத்த வேண்டிய இடத்திலேயே இப்படி ஊதாரித்தனமாக செலவு செய்வது என்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டின் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தவே பெட்ரோல் விலை உயரத்தப்படுகிறது. அரசின் இந்த கடுமையான நடவடிக்கைகளை மக்கள் கசப்பு மருந்தாக ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டுமென்றும், அதேப்போல் சிக்கன நடவடிக்கை என்ற பேரில்,  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்   வெளிநாடு செல்வதை குறைத்துக் கொள்வது, நட்சத்திர ஓட்டல் விருந்துகளை தவிர்த்துக்கொள்வது போன்ற தங்களைத் தாங்களே கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்திக் கொள்வது போன்ற நாடாகத்தை தான் மத்திய ஆட்சியாளர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்  அதற்கு மாறாக, நாட்டு மக்களின் பார்வையில் படாத இது போன்ற  பல  இடங்களில்  ஊதாரித்தனமாகவும், தான்தோன்றித்தனமாகவும் தான் மக்கள் பணத்தை வாரி இறைத்து செலவு செய்கிறார்கள் என்பது தான் உண்மை.     

கருத்துகள் இல்லை: