செவ்வாய், 1 மே, 2012

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கிய நவரத்தினங்களில் முதல் ரத்தினம் தோழர். பி. சுந்தரய்யா நூற்றாண்டு விழா...!

  தோழர் - பி. சுந்தரய்யா நூற்றாண்டு விழா
               
             1964 - ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட ஏழாவது கட்சி மாநாட்டில், கட்சி தொடங்குவதற்கு முன்னோடிகளாக இருந்த - நவரத்தினங்களாக கருதப்பட்ட ஒன்பது தலைவர்களில் முதன்மையானவர் தோழர். பி. சுந்தரய்யா என்று சொன்னால் அது மிகையாகாது. கட்சியின் மாநாட்டில் தலைமைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் மொத்தம் ஒன்பது பேர். அவர்கள் தோழர். பி. சுந்தரய்யா, தோழர். பி. டி. ரணதிவே, தோழர். ப்ரோமோத் தாஸ்குப்தா, தோழர். இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், தோழர். எம். பசவபுன்னையா, தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித், தோழர். பி. ராமமூர்த்தி, தோழர். ஏ. கே. கோபாலன் மற்றும் தோழர். ஜோதி பாசு போன்ற தோழர்கள் தான் கட்சியின் தலைமைக்குழுவில்  நவரத்தினமாக ஜொலித்தவர்கள். இவர்களில் முதன்மையானவராக கருதப்பட்டதால் தான் கட்சியின் ஆரம்ப கால பொதுச்செயலாளராக தொடர்ந்து மூன்று முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தான் இவரின் தனி சிறப்பு. 1964  - ஆம் ஆண்டிலிருந்து 1978 - ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பொதுச்செயலாளராக பணியாற்றி கட்சிக்கு பெருமை சேர்த்தார். 
                   தனது 17 - ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் கொடுத்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ்காரராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாலும், பின்னர் உறுதிமிக்க கம்யூனிஸ்டாகவே இறுதி வரை வாழ்ந்தார். அவருடைய சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது, நாடு முழுதும்  கட்சியைக் கட்டுவதற்கு அவர் அல்லும் பகலும் அயராது வேலை செய்தார் என்பதை கட்சித் தோழர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இவரது கடுமையான உழைப்பென்பது கட்சிக்குள்ளிருந்த இளைஞர்களையும், வெளியிலிருந்த இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்தது.
              உழைப்பாளி மக்கள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரங்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து போராடிய தன்னலமற்றத் தலைவர் - பி.எஸ்.என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அருமைத் தோழர் - பி. சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டு 2012 மே 1 -  இன்று முதல் தொடங்குகிறது. ஒரு நிகரற்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவரான தோழர். பி. சுந்தரய்யாவின் வாழ்வையும் பணியையும் நினைவுகூர்ந்து கொண்டாட  நமக்கு கிடைத்த ஓர் அறிய வாய்ப்பு இதுவாகும். அவரது நூற்றாண்டு விழாவில் அவரின் நினைவை போற்றுவோம்.

2 கருத்துகள்:

kumaresan சொன்னது…

நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருவோடு கடுமையாக வாக்குவாதம் செய்வார் சுந்தரய்யா. காங்கிரஸ்காரர்கள் கொதித்துப் போவார்கள். அப்போது நேரு, ”சுந்தரய்யா சொன்னதுதான் சரி. என்னிடம்தான் தவறு” என்று சபையிலேயே அறிவித்திருக்கிறார். அதே போல், வேறொரு விவாதத்தின்போது சுடுசொற்களைப் பயன்படுத்திய சுந்தரய்யா, பின்னர் அதற்காக மன்னிப்புக் கேட்டார். அப்போதும் நேரு, “உங்கள் மீது தவறில்லை. நான் இதை சரியாகக் கையாண்டிருக்க வேண்டும்,” என்று பதிலளித்தார். இந்த உயர்ந்த அவை நாகரிகம் கண்டு அனைவரும் பெருமிதம் கொண்டனர்.

பேரவைத் தலைவரைப் பார்த்து ஒரு உறுப்பினர் கைநீட்டிப் பேசினார் என்பதை ஒரு பெரும் குற்றச்செயலாக அறிவித்துப் பேச விடாமல் தடுக்கிற இன்றைய தமிழக சட்டமன்றத்திற்கு இந்தச் செய்தி அர்ப்பணம்.

puduvairamji.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி தோழர்..... உங்களின் இந்த அற்புதமான செய்தி இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.