திங்கள், 7 மே, 2012

நூற்றாண்டு விழா காணும் உழைப்பாளர் நாளிதழ் ‘பிராவ்தா - உண்மை’ - உலக தொழிலாளர்களை ஒன்றுபட அழைக்கிறது...!

            புரட்சியாளர் மாமேதை  லெனின் 1912 - ஆம் ஆண்டு மே மாதம்  5 - ஆம் தேதியன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் - இல்  தொடங்கி வைத்த ரஷ்ய உழைக்கும் மக்களின் நாளிதழான ‘பிராவ்தா’வின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சத்தமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் மாஸ்கோவில் நடத்தப்பட்டன.
             ரஷ்யப்புரட்சிக்கு முன்பே தொடங்கப்பட்ட  'பிராவ்தா’  1917 - ரஷ்யப்புரட்சிக்கு மிகப்பெரிய பங்குவகித்தது. 'பிராவ்தா’-வின் பொருள் ''உண்மை''. இன்றும் ரஷ்ய உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. ''உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்'' என்று மாமேதை லெனின் ஒலித்துவிட்டுச் சென்றக்குரலை இந்த நூறு வயதிலும் 'பிராவ்தா’ இன்றும் மாறாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
                1912 முதல் 1991 வரை சோவித் யூனியனில் சோவித் கம்யூனிஸ்ட் கட்சி - மத்தியக்குழுவின் அதிகாரபூர்வப் பத்திரிக்கையாக இருந்தது. 1991 - இல் சோவித் யூனியன் சிதறுண்டு போனப்பிறகு ரஷ்யாவின் அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சின் 'பிராவ்தா’ நாளிதழுக்கு தடைவிதித்ததால் மூடப்பட்டது. அதன் பிறகு 1997 -இல் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக உயிர்த்தெழுந்தது.
                  மாஸ்கோவிலுள்ள 'பிராவ்தா’ - வின் பத்திரிகை அலுவகத்தில் அன்று மாமேதை லெனினும், அவரது மனைவி நடேழ்ட  க்ருப்ஸ்கயா  ஆகியோர்  ''பத்திரிகை ஆசிரியர்'' பணி செய்த  அலுவலக அறையை  இன்றும் நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது.     
                 அது மட்டுமல்ல,  'பிராவ்தா’ நாளிதழின் தற்போதைய ஆசிரியர் போரிஸ்  கொமொத்ஸ்கி அவரது மாஸ்கோ அலுவலகத்தில் அவரது இருக்கைக்குப் பின்னால் சோவியத்தின் சிற்பி மாமேதை லெனின் 'பிராவ்தா’நாளிதழை வாசிப்பது போன்ற பெரிய அளவிலான படத்தை வைத்து மரியாதை செலுத்துகிறேன் என்று கூறுவது கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது.
                   
                
            இப்படிப்பட்ட மாபெரும் நாளிதழின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 
மாஸ்கோவில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சி முகமறியா வீரர்களின் கல்லறையில் அஞ்சலியுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் உலகநாடுகளில் உள்ள  சகோதர கம்யூனிஸ்ட் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
            ரஷ்யக் கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜுகானோவ் தலைமையில் இளைஞர்களும் முதியவர்களுமான தொண்டர்கள் செங்கொடி ஏந்திய வண்ணம் வீரமுழக்கங்களுடன் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரஷ்ய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரும்புரட்சியின் ராணுவத் தளபதியாகக் கருதப்பட்ட நாயகன் மார்ஷல் ஜுகானோவின் நினைவுச்சின்னத்தின் முன்னே ஜுகானோவ் புகழஞ்சலி செலுத்தினார். அதையடுத்து சர்வதேச கம்யூனிஸ்ட் இதழ்களின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
              சோவியத் யூனியன் சிதறுண்டபோது உருவான பல்வேறு நாடுகளில் இயங்கும் கம்யூனிஸ்ட் இதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் பதிப்புகளின் பிரதிநிதிகள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு நடத்தும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி, லோக்லஹார் ஆகியவற்றின் சார்பில் லோக்லஹார் இணையாசிரியர் ராஜேந்திரகுமார் சர்மா விழாவில் கலந்து கொண்டார். சிபிஐ இதழ்களின் சார்பில் ஷமீம் பைய்ஸீ பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
                 இந்நிகழ்ச்சிகளை பார்க்கும் போது உண்மையான  மக்கள் புரட்சிக்கு, சமூக விடுதலைக்கு, விழிப்பான அரசியலுக்கு பள்ளிக்கூடாமாய், பாடமாய், ஆயுதமாய் விளங்கிய 'பிராவ்தா’ நாளிதழ்  இன்னும் பல நூறு ஆண்டுகள் அதே சிலிர்ப்புடன் வாழும்... ஏகாதிபத்தியத்தினாலோ அல்லது முதலாளித்துவத்தினாலோஅதற்கு என்றும் மரணமில்லை 
என்பது தான் ''உண்மை''.

கருத்துகள் இல்லை: