ஞாயிறு, 20 மே, 2012

மாணவர்களின் கேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் மம்தா வெறிபிடித்து ஓட்டம்...!

        தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனல் CNN-IBN நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு விவாத நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மம்தா மேற்கு வங்க முதல்வராக  பொறுப்பேற்று, ஓர்  ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். விவாதத்தில் பங்குபெற  ஜாதவ்பூர் மற்றும் பிரெசிடென்சி பல்கலைக்கழகங்களில்   பயிலும்  மாணவ - மாணவியர்களும் வந்திருந்தனர்.
            இந்த நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாணவ - மாணவியர்களும் கேட்ட கேள்விகளுக்கு கடுகடுப்பாக இருந்தாலும் மம்தா  துவக்கத்தில் பொறுமையாகவே  பதிலளித்து வந்தார். நேரம் போகப்போக சூடேறிப் போனார். ஒரு கட்டத்தில்,  மம்தா குறித்து கார்ட்டூன் வரைந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக  பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டது குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும்  மாணவ - மாணவியர்  சரமாரியாக கேள்வி கேட்டதும் பொறுத்துக்கொள்ள முடியாமல்  மம்தா கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். வெறிப்பிடித்தவர் போல் கத்தினார். மாணவர்களைப் பார்த்து ''நீயெல்லாம் மார்க்சிஸ்ட்... மாவோயிஸ்ட்....எஸ்.எப்.ஐ... மார்க்சிஸ்ட் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது'' என்று ஒருமையில் அழைத்து உரத்தக் குரலில் கத்தினார். ''ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் அழைத்ததற்கான காரணம் என்ன..? வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை?'' என்று கூச்சல் போட்டு கொண்டே நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறினார். பாதியிலேயே நிகழ்ச்சி பரப்பரப்பானது. தொலைக்காட்சியின் துணை ஆசிரியர்  சாகரிகா கோஷ்  எவ்வளவோ சமாதானம் படுத்தியும் மம்தா சமாதானம் ஆகவில்லை.  வெறி பிடித்தவர் போல் மம்தா கத்திக்கொண்டே வெளியேறினார்.    
            இந்நிகழ்ச்சியை பார்த்து நாடே பரப்பரப்பானது. 
               சட்டமன்றமும், மக்கள் கூடும் இடங்களும் தங்களின் புகழ் பாடும் பஜனை 
மடங்களாக  இருக்கவேண்டும் என்று தான் மம்தா மற்றும் ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதும், தங்களுக்கு எதிரான  விமர்சனங்களை ஆக்கப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.  இப்படி சகிப்புத் தன்மையே இல்லாதவர்கள் ஓராண்டு என்ன... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை: