ஞாயிறு, 13 மே, 2012

ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலித்த மக்கள் மாமன்றத்தின் மணிவிழா...!


         1952 - ஆம் ஆண்டு மே மாதம் 13  - ஆம் தேதி அன்று  இந்திய அரசியல் வரலாற்றில்  நடந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை  பொன்னேழுத்துக்களால் எழுதப்படவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.  ஆம்... அன்று தான் இந்திய பாராளுமன்றக் கட்டிடத்தில் முதல் மாநிலங்களவை தொடங்கிவைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, 1950 - இல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தப்பட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட  முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய டாக்டர். ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக பதவி எற்றுக்கொண்டதும் இதே நாளில் தான் என்பதும்,தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது மக்களவை உருவானதும் இதே 
நாளில் தான் என்பதும்   குறிப்பிடத்தக்கது.
             இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் என்பது தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 
பதவியேற்ற முதல் நிகழ்ச்சி அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இன்று தான் அரங்கேறியது. அன்றும் இன்றும் இந்த நாள் நம் தேசத்தின் திருநாள்.

டாக்டர். ராஜேந்திர பிரசாத் 1952 - ஆம் ஆண்டு மே மாதம் 13 - ஆம் இந்திய பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் இந்திய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
பதவியேற்புக்குப் பின்பாராளுமன்றத்திலிருந்து 
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்கிறார்.


               அன்றையிலிருந்து இன்று வரை கடந்த அறுபது ஆண்டுகாலமாய் இரு அவைகளும் 
கொண்ட பாராளுமன்றம் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்று  சொல்லலாம். அது மக்களுக்கு தேவையா அல்லது தேசத்திற்கு உகந்ததா என்றெல்லாம் 
சீர்தூக்கிப் பார்க்கப்பட்டதா என்று கேட்டால் வெறும் கேள்விக்குறித் தான் மிஞ்சும். 
ஆட்சியாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் 
சுயநலத்துடன் தங்கள் இஷ்டப்படி பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதும் அதை   
நடைமுறைப்படுத்துவதுவுமாகத்    தான் இன்றுவரை இருக்கிறார்கள்.  எப்போதெல்லாம் மக்களுக்கெதிராக அல்லது தேசத்திற்கெதிராக மத்திய அரசு செயல்படுகிறதோ அப்போதெல்லாம் மிகசொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் 
இடதுசாரிகள் மட்டும் தான் பாராளுமன்றத்தில்  எரிமலையாய் வெடித்து எழுவார்கள் என்பதை இந்த நாடு பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த அறுபது ஆண்டுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றத்தில் இன்று
வரை இரு அவைகளிலுமே பாராளுமன்றக்கூட்டம் நடைபெறும்  அனைத்து நாட்களிலும்   அனைத்துக்  கூட்டங்களிலும் நூறு சதவீதம்  பங்கேற்பவர்கள் இடதுசாரிகள் தான் என்பதை அந்த பாராளுமன்றத் தூண்களும், கூட்டம் நடைபெறும் மண்டபங்களும் கண்டிப்பாக எடுத்துச்  சொல்லும். இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தை - மக்கள் ஜனநாயகத்தை மதிக்கக்கூடியவர்கள் இடதுசாரிகள் மட்டுமே என்பதை நாம் 
மறந்துவிடக்கூடாது.
             ஆட்சியாளர்களின் சரியான பணிகளை  பாராட்டவேண்டிய சமங்களில் பாராட்டியும்,
 அவர்களின் தவறான போக்குகளை இடித்துரைக்க வேண்டிய சமயங்களில் இடித்துரைத்தும் 
பாராளுமன்றத்தில் பாரபச்சமில்லாமல் நடந்து கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே 
என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு ஆட்சியாளர்களால் பாராளுமன்ற 
ஜனநாயகம் என்பதே மதிக்கப்படாமல்,பாராளுமன்றம் என்பது ஒரு சம்பிரதாய 
சடங்குகள் நடக்குமிடமாக மாறிவருகிற  சூழ்நிலையில்,   பாராளுமன்ற ஜனநாயகத்தை 
மதித்து, அதன் நடவடிக்கைகளில் அக்கறையையும் நம்பிக்கையையும் வைத்து இன்றுவரை  மக்கள் மாமன்றத்தின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் இடதுசாரிகள்  தான் என்பதை உணர்ந்து  இந்த நல்ல நாளில் நாடு இடதுசாரிகளுக்கு செவ்வணக்கம் செலுத்தவேண்டும்.       

கருத்துகள் இல்லை: