வியாழன், 26 ஏப்ரல், 2012

கருணாநிதியின் விபரீதக் கோரிக்கை..!

                    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கடந்த கால அரசியல் வாழ்க்கையை ஆராய்ந்து அலசிப் பார்த்தால், தனது ''சொந்த'' கட்சியிலேயே தன்னுடைய செல்வாக்கு குறைந்தாலோ அல்லது தமிழக அரசியலில் தன்னுடை செல்வாக்கு குறைவது போல் தெரிந்தாலோ அல்லது தான் பங்குவகிக்கும் மத்திய அரசில் தனது செல்வாக்கு குறைவது போல் உணர்ந்தாலோ உடனே கருணாநிதி மக்களை கவருவது போல் அதிரடியாக ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.  இதன் மூலம் அனைத்து மட்டத்திலும் சரிந்து வரும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்வார் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இதைத் தான் கடந்த காலங்களில் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையாக  தமிழகம்  பார்த்து வருகிறது.
               அண்மைக் காலங்களில் கருணாநிதி தன் சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியல்  வாழ்க்கையிலும் சரி ஏகப்பட்ட சோதனைகள் சந்தித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் நடைபெற்ற சங்கரன்கோயில் தொகுதி இடைத்தேர்தலில் இவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி - டெபாசிட்டே கிடைக்காத நிலைமை,  இன்னொரு பக்கம் கட்சிக்குள்ளேயே தன் இரு பிள்ளைகளின் அதிகாரப்போட்டி,  கட்சியின் தலைமையை நோக்கி இவரது மகன் ஸ்டாலின் வளருவதை விரும்பாத கட்சியின் மூத்தத் தலைவர்கள் இவருக்கு எதிராகவே திரும்பியிருக்கும் நிலைமை - இப்படி அடுக்கடுக்கான சோதனைகள் - சோதனை மேல் சோதனைகள் அவரது செல்வாக்கின் சரிவைத் தான் காட்டுகின்றன.
              இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ஒரு புயலைக் கிளப்பினார். இலங்கையில் ''தமிழீழம்'' என்ற தனிநாடு உருவாவதற்கு ஐநா சபை இலங்கையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  என்றும், ஐநா சபையால்  இது போன்று வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தான் தெற்கு சூடான் போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டது என்கிற ''விபரீத'' கோரிக்கையை வைத்தார். இலங்கை தமிழர்கள் மீது எதோ அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்ள இப்படியொரு நாடகத்தை அரங்கேற்ற நினைத்தார்.   இந்த கோரிக்கை என்பது ஏற்கனவே வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன் போன்றவர்கள்,  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையின் போதே எழுப்பப்பட்டு ஓய்ந்து போன கோரிக்கை தான் இது. கூர் மழுங்கிய இந்த கத்தியை இப்போது கருணாநிதி  தன் கையில் எடுத்துக் கொண்டு கூர் சீவி வெறும் காற்றில் சுழற்றி தன் செல்வாக்கினை உயர்த்திக் கொள்ளலாம் திட்டம் போட்டு களத்தில் இறங்கினார்.
               இவரது இந்த கோரிக்கைக்கு இலங்கையில் அதன் ஆட்சியாளர்களிடமிருந்தே எதிர்ப்பு குரல் வந்தது. அவர்கள் பேச்சிலும் விபரீதங்கள் இருந்தன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் வேண்டுமானால் கருணாநிதி,  தமிழ்நாடு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளை இந்தியாவிலிருந்து பிரித்து தனிநாடு கேட்கட்டும் என்று அவர்கள் பதிலுக்கு விஷத்தை கக்கியிருக்கிறார்கள். இது இப்படியான விபரீதங்களில் தான் போய் முடியும்.
             தன் சொந்த நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராகவே கருத்து சொல்லவோ அல்லது செயல்படவோ கூடாது என்கிற போது பக்கத்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருத்து சொல்வது என்பது நியாயமாகாது. அது மட்டுமல்ல, இலங்கையில் அல்லல்படும் தமிழர்களுக்கு இதுவே தீர்வாகாது. ஐநா வாக்கெடுப்பு நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கருணாநிதி முதலில் புரிந்து கொள்ளட்டும். இலங்கை தமிழர்களை நேரில் சந்தித்து அவர்கள் எதிர்ப்பார்க்கும் தீர்வு என்ன என்பதை கேட்டறிந்து அதற்கேற்றார் போல் கருணாநிதி போராடியிருந்தால் வரவேற்றிருக்கலாம்.
                       ஆனால் அவர் அதை செய்யவில்லையே. இலங்கைக்கு சென்று தமிழர்களை சந்தித்து அவர்கள் நிலைப் பற்றியும், அவர்களது எதிர்ப்பார்ப்புகளையும் நேரில் சென்று தெரிந்து வர மத்திய அரசு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்தும் அதை கருணாநிதி நழுவவிட்டது  என்பது தமிழர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் தேவை என்ன என்பதை தெரிந்துகொள்ளாமலேயே, அவர்களுக்கெதிரான - ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கோரிக்கையை வைப்பது என்பது விபரீதமானது மட்டுமல்ல அவரது செல்வாக்கை எந்த விதத்திலும் உதவாது.     

கருத்துகள் இல்லை: