செவ்வாய், 3 ஏப்ரல், 2012

சோசலிசமே அடுத்தத் தலைமுறைக்கான எதிர்காலம் - செங்கொடியை உயர்த்திப் பிடிப்போம்...!



                   இந்திய ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும், பெருமுதலாளிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இன்றைக்கு தங்கள் பார்வையை  கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை         நோக்கி   திருப்பியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது அகில இந்திய மாநாடு  கோழிக்கோட்டில் நாளை  துவங்கவுள்ளது தான் அதற்கு காரணம். சித்தாந்தப்போரில் சளைக்காமல் மார்க்சிய நிலைப்பாடுகளோடும், சிந்தனைகளோடும் போராடிவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இந்த நாடே அறியும். 
             1991 - ஆம் ஆண்டில் உலகநாடுகளின் கலங்கரைவிளக்கமாக விளங்கிய சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு  கம்யூனிசத்திற்கு இனி எதிர்காலமே கிடையாது என்று ஏகாதிபத்தியமும், முதலாளிகளும் கொக்கரித்தனர். இதன் காரணமாகவே உலகத்தில் பல நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் தங்கள் கட்சியின் பெயரையே மாற்றிக்கொண்ட நிகழ்வுகளும் நடந்ததுண்டு. இந்திய நாட்டில் கூட மற்ற கட்சிகளிடம் சிறு சலனம் இருந்தது.    ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ''இது தற்காலிக பின்னடைவேயாகும். மீண்டும்  மார்க்சியம் வெல்லும். சோசலிசமே எதிர்காலம்'' என்று தன் இலட்சிய குறிக்கோளிலிருந்து - சோசலிசத்தை நோக்கிய தனது பயணத்திலிருந்து சற்றும் பிறழாமல்,  கட்சியின் செம்பதாகையை உயர்த்திப் பிடித்து போராட்டக்களத்தில்  முன்னேறி  வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
           உலக அமைதியில்.... தேச பாதுகாப்பில்.... மக்கள் சேவையில்.... தொழிலாளர்களின் நலனில்.... அனைவருக்கும் கல்வி கிடைப்பதில்.... படித்த இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு கிடைப்பதில்.... இடஒதுக்கீட்டை காப்பதில்....பெண் விடுதலையில்.... தீண்டாமை ஒழிப்பில்... பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பில்.... இலஞ்ச ஊழல் எதிர்ப்பில்... சமூக மாற்றத்தில்.... என நாளும் தன்னை அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் என்பதை இந்த நாடறியும்.
             இப்படிப்பட்ட இப்பேரியக்கத்தின் மாநாட்டு வேலைகளெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இம்மாநாட்டில் ''அரசியல் நகல் தீர்மானம், அரசியல் ஸ்தாபன  தீர்மானம் மற்றும் தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பான தீர்மானங்களும்'' விவாதிக்கப்பட உள்ளன. இந்த தீர்மானங்களை மூன்று மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு, கட்சியின் தலைமைக்குழு - மத்தியக்குழு முதல் கடைசி கிராமத்திலிருக்கும் கடைசிக் கிளை    வரை  விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமல்ல கடைசி கட்சி உறுப்பினர் வரை திருத்தங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவைகளை மத்தியக்குழுவும் விவாதித்து தேவையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும். இப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களை கொடுத்த உறுப்பினர்களின் பெயரைக்கூட மாநாட்டு தீர்மானத்தில் குறிப்பிடுவார்கள். இப்படிப்பட்ட    '' உள்கட்சி  ஜனநாயகம் '' என்பதை வேறு எந்தக் கட்சியிலும் பார்க்கமுடியாது என்பது தான் உண்மை.                                                                          இந்த மாநாட்டில் என்ன முடிவுகள் வரப்போகிறது என்பதை நாடே எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை காப்பதில் எத்தனையோ தோழர்கள் தங்கள் இன்னுயிரை தந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அந்த தியாகிகளை நினைவு கூர்ந்து நாமும் மாநாட்டினை வாழ்த்துவோம்.
               சித்தாந்த தாக்குதல்களை முறியடித்து, இந்திய அரசியலை இடது ஜனநாயகப் பாதைக்கு கொண்டு செல்லவும், உலக உழைப்பாளி மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து இன்றைய உலகினை சோசலிச பூமியாக மாற்றிடவும்  உறுதியுடனும் உயரிய     நோக்கத்துடனும் வியூகங்களை இந்த மாநாடு வகுத்திடும் சந்தேகமில்லை. 
                இந்த தேசத்தின் இளையத்தலைமுறையினரின் எதிர்காலம் சோசலிசத்தின் கையில் தான் உள்ளது. சோசலிசமே அடுத்தத் தலைமுறைக்கான எதிர்காலம்... செங்கொடியை உயர்த்திப்பிடிப்போம்... வாழ்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.... வெல்லட்டும்.. வெல்லட்டும்... 20 - ஆவது அகில இந்திய மாநாடு வெல்லட்டும்...                                                   

கருத்துகள் இல்லை: