ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மின்கட்டண உயர்வு.... பெட்ரோல் விலை உயர்வு... தலை சுத்துதடா சாமீமீமீமீ....

        தமிழ்நாட்டுல எல்லார் விட்டிலேயும் மக்கள் குறிப்பாக படிக்கிற பிள்ளைங்க இருக்கிற வீட்டுல... இப்ப என்ன ஓடிகிட்டு இருக்கு தெரியுமா...? ''குழந்தைகளுக்கு பரீட்சை முடியப்போவுது... லீவு விட்டு ஸ்கூல் திறந்தாங்கன்னா... குழந்தைகள்லாம் அடுத்த கிளாசுக்கு போய்டுவாங்க... புத்தகம் வாங்கணும்... நோட்டு வாங்கணும்... ஸ்கூல் பீஸ் எல்லாம் ஏத்திடுவாங்க... இதை எல்லாம் எப்படி சமாளிக்கிறது... எங்க கடன் வாங்கறது''.  இப்படித்தான் ஒவ்வொரு வீட்டிலேயும் பெற்றோர்கள் மத்தியில ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதே அச்சமும், குழப்பமும் கலந்த பேச்சுக்கள் தான் எல்லார் வீட்டிலேயும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. 
                இந்த சூழ்நிலையில் மக்களின் தோளில் சுமந்துள்ள சுமையை எப்படி இறக்கி வைப்பது என்று தான் உண்மையான ''மக்கள் அரசு'' யோசிக்கும்... யோசிக்கவும் வேண்டும். ஆனால், மாநிலத்திலும், மத்தியிலும் ஆளுகின்ற அரசுகள் வேறாக யோசிக்கின்றன. சுமைகளை தூக்கியே கேள்விக்குறி போல் வளைந்து விட்ட மக்களின் முதுகில் இந்த அரசுகள் மனிதாபிமானமே இல்லாமல், மேலும் பளுவினை இந்த மக்கள் முதுகிலேயே தூக்கிவைக்கின்றன.
              மக்களுடைய பெருவாரியான நம்பிக்கைகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, வாக்களித்த மக்களுக்கு வாயார நன்றியை சொல்லிட்டு, அவர்கள் வயிறார பால் விலையையும், மனசார பேருந்து கட்டணத்தையும் உயர்த்தி   மக்களுக்கு பேரிடியைக் கொடுத்தார்.
              இதற்கிடையில், மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவ்வப்போது பெட்ரோல் -  டீசல் விலையை தான்தோன்றித்தனமாக ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
                ஒரு பக்கம் மக்களுக்கு வருமானம் என்பது உயராமல் அப்படியே இருந்துகொண்டே இருக்கிறது. மக்களின் வருமானத்தை உயர்த்துவதில் மத்திய - மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. மாறாக,  மக்களிடம் சேமிப்பே இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் பணத்தை பிடுங்கி அவர்களை எப்படி ஒட்டாண்டியாக்குவது என்பதைத் தான் யோசனை செய்கிறார்கள். மக்கள் போட்டிருக்கும் துணியையும் உருவிக்கொள்ளும் வேலையைத்தான் இந்த அரசுகள் செய்து வருகின்றன. 
                    இந்த சூழ்நிலையில் தான் தமிழக அரசு மக்கள் மீது தொடர்ந்து மின்சார தாக்குதல்களை நடத்தி வருகின்றது. மின்சாரமே இல்லாமல் தமிழகத்தை ''இருண்ட மாநிலமாக'' முன்மொழிந்த கருணாநிதியின்  ஆட்சியை அடுத்து, மின்வெட்டின் நேரத்தை அதிகமாக்கி அதை வழிமொழிந்து கொண்டிருக்கும்  ஜெயலலிதாவின் ஆட்சி நேற்று மேலும் ஒரு மின்சாரத் தாக்குதலை நடத்தியது. கண்மூடித்தனமாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் மீது பெரும் சுமையை முதலமைச்சர் ஜெயலலிதா போட்டிருப்பது என்பது நியாயமற்றது. கண்டிக்கத்தக்கது. இந்த உயர்வை   மக்கள்   எப்படி சமாளிப்பார்கள் என்ற குறைந்தபட்ச அறிவு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது நம்முடைய துரதஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
             இந்த உயர்வுகளெல்லாம் ஒன்று சேர்ந்து வரும் ஜூன் மாதத்தில் தான் மக்களின் கழுத்தை பிடித்து இருக்கப்போகிறது என்பது தான் உண்மை. ஆட்சியாளர்களுக்கு திசைத் திருப்ப வழிகளா தெரியாது. அப்போது சசிகலா மீண்டுமொரு முறை வெளியேற்றப்படுவார் என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.               

கருத்துகள் இல்லை: