செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஓய்வறியா உன்னதத் தலைவர் மறைந்தார் - மக்கள் சேவையில் பூத்த செம்மலர் விடைபெற்றது.ஓய்வறியா செஞ்சூரியனே விடைபெற்று  சென்றாயோ......!
                நேற்று தான் கட்சியின் மாநாடு முடிந்தது. இன்னும் தோழர்களுக்கு மாநாட்டு உற்சாகமும், கொண்டாட்டமும் குறையவே இல்லை. அதற்குள் நம் மரியாதைக்குரிய தோழர் என். வரதராஜன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாய் இதயத்தைத் தாக்கியது. தள்ளாத வயதிலும் தளராமல் தலைமை தாங்கி அவர் நடத்தியப் போராட்டங்கள்  தான் எத்தனை... எத்தனை... அத்தனையும் நம்மைத் தளரச் செய்யாமல் இயங்கச் செய்த போராட்டங்கள் ஆயிற்றே. அவர் எழுச்சிமிக்க போராளி தான். என்றாலும் அவரது பேச்சிலே அமைதியும்,  இனிமையும், சாந்தமும் இருக்கும். 
                 அதே சமயத்தில் உழைப்பாளி மக்களின் பிரச்சனையாக இருந்தாலும், தலித் மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் அவர் குரலில் எரிமலையாய் நெருப்புத் தெறிக்கும். தீண்டாமைக்கு எதிராய் தீயாய் எழுந்தவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த போது தான்,  தீண்டாமைக்கெதிரான போராட்டங்கள் புது வடிவம் பெற்றது. தலித் மக்களின் விடுதலைக்காகவும், தீண்டாமைக்கெதிராகவும் போராடுவதற்கும், அவர்களின் உரிமைகளை பெற்றுத் தருவதற்கும், அவர்களை பாதுகாப்பதற்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். இந்த முன்னனி என்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், அவர்களெல்லாம் பின்பற்றக்கூடியதாகவும் விளங்கி வருகிறது. அந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கம் என்பது தோழரின் கருத்தில் உருவானதே என்று சொன்னால் அது மிகையாகாது.
                உத்தபுரம் தீண்டாமை சுவர் இடிப்புப் போராட்டம் என்பது தோழர் என். வி அவர்களின் நீண்ட நெடிய போராட்ட வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட  மக்கள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு என்கிற உரிமையின்  சிறு துளிக்கூட கடைசி மனிதன் வரை சென்றடையாதது கண்டு நொந்துப்போனார். குறிப்பாக தலித் மக்களிடையே கடைக்கோடியில் இருக்கும்  அருந்ததி இனமக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற வாழ்வாதாரங்கள் கிடைக்கப்பெறாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவர்களை தோள் கொடுத்துத் தூக்கிவிடும் தோழனாய்-  தலைவனாய்  இருந்து போராடினார். அவரது அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான், கருணாநிதி தலைமையிலான முந்தைய தமிழக அரசு அருந்ததி இன மக்களுக்கு இரண்டு சதவீதமான உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. 
                 அருந்ததி இன மக்களுக்கான இரண்டு சதவீதமான உள் ஒதுக்கீடு பெற்றுத்தந்ததில் தோழர் என். வரதராஜன் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இது மாதிரியான வீரம் செறிந்தப் போராட்டங்களும், நிகழ்வுகளும் தோழரின் வரலாற்றில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பாட்டாளிவர்க்க வரலாற்றில் இடம் பெறக்கூடியது என்றால் அது  மிகையாகாது.
               இப்படிப்பட்ட ஒப்பற்றத் தலைவர் - ஒரு உன்னதமான தலைவர் தனது இறுதி மூச்சு வரை கட்சி - இயக்கம் - மக்கள் என்று தான் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருன்தவர். நேற்று வரை கோழிக்கூட்டில் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு, இன்று காலை தான் சென்னையில் வீடு திரும்பினார். நேற்று தான் இவரை கட்சியின் மத்தியக்குழுவிலிருந்து மாநாடு விடுவித்தது. அதற்காகவே காத்திருந்தார் போல் கட்சிப்பணி முடித்த களைப்பில் - ஓய்வரியாமல் உழைத்த களிப்பில் அவரது இதயம் ஓய்வு பெற்றது. ஆம்... தோழர். என். வி நம்மை விட்டு பிரிந்தார்.
                யார் ஆறுதல் கூறினாலும், அவரது பிரிவால் வாடும் நம்மை தேற்றுதல் கடினம். ஆனால் அவர் விட்டுச் சென்ற போராட்டங்களை மேலும் செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்வோம். இது மறைந்த தோழருக்கு நாம் செய்யும் அஞ்சலி... மரியாதை....வீரவணக்கம்...

கருத்துகள் இல்லை: