ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஊழல் சகதியில் ஓடும் அத்வானியின் ''ரதயாத்திரை''..!


            இந்தியா சுதந்திரம் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ''ஊழல்'' என்பது ஆளும் கட்சிக்கு மட்டுமே சொந்தமானதாகவும், ஆட்சியாளர்கள் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலத்தில் தன் திறமைக்கேற்ப சொத்து சேர்ப்பதுமானதாகவும் தான் இருந்து வருகிறது. இந்த ''ஊழல்'' என்பது  காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியுறும் காலங்களில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, திமுக, அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி  போன்ற கட்சிகளும் ஊழல் செய்து சொத்து சேர்ப்பதையே தங்கள் தொழிலாக இருந்துவருகின்றனர். இவர்கள் தேச நலனுக்காகவும், மக்களுக்கு சேவைக்காகவும் மட்டுமே ஆட்சி செய்யவேண்டும் என்கிற மனப்பான்மையில்லாமல், சொத்து சேர்ப்பதற்கே ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுபவர்கள் தான் நாம் மாற்றி மாற்றி வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்கள் என்பதை ஏனோ இந்த மக்கள் உணர்வதில்லை..?
               2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - காமன்வெல்த் விளையாட்டு ஊழல் - லட்சக்கணக்கான கோடிகளை சாப்பிட்டு ஏப்பம் விட்ட மன்மோகன் சிங் தலைமையிலான - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மெகா ஊழல் தான் இந்திய மக்களிடையே ஊழலுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 
               இந்த சூழ்நிலையில் தான், ஊழலுக்கெதிரான மக்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விளம்பரத்தைத் தேடிக்கொள்ளவும், பணம் பண்ணவும், ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சிகளான இடதுசாரி கட்சிகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பாமல் இருக்கவும் 
அன்னா ஹசாரே போன்றோர் அவதாரம் எடுத்தனர்.
              அந்த வரிசையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இந்திய பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதமிருந்து தன்னை முன்னிலை படுத்திக்கொண்டார். தன்னை பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டார். 
                காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிகிட்டு போய் விடுவானொன்னு பயந்து போய், கடந்த அக்டோபர் மாதம் 11 - ஆம் தேதி அன்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஒரு ரதத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ண பரமாத்மா போல கிளம்பிட்டாரு...
                என்னமோ.. ஊழல் என்றால் என்னன்னு அத்வானிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் தெரியாதது போலவும், ஊழலை ஒழிக்க இவர்கள் தான் அவதாரம் எடுத்திருப்பது  போலவும் காட்டிக்கொள்கிறார்கள்.
               ஊழலுக்கு பேர் போன ஆட்சியினை இவர்கள் தான் கர்நாடகாவில் நடத்துகிறார்கள் என்பதை அத்வானி மறந்துவிட்டார் போலும்.. இவர் கிளம்பிய நேரம், ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி இழந்த கர்னாடக மாநிலத்தின் முன்னாள் முதலவர் எட்டியூரப்பா நேற்று கைதானத்தில் அத்வானியின் ''ஊழல் எதிர்ப்பு ரதம்'' சகதியில் சிக்கிக்கொண்டது போலிருக்கிறது.
                 அதுமட்டுமல்ல, நேற்று ரதயாத்திரை மத்திய பிரதேசம் சாத்னா பகுதிக்கு வந்த போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிக்கையாளர்களுக்கு,  ரதயாத்திரையை பற்றி பிரமாதமாய் எழுதுவதற்கு ஆயிரம் ரூபாய் - ஐ கொடுக்கப்பட்டது என்பது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட இவர்கள் தான் ஊழலை ஒழிக்கப்போவதாக யாத்திரை போகிறார்கள். எதோ மக்கள் நித்திரையில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: