வெள்ளி, 7 அக்டோபர், 2011

பாலஸ்தீ னத்தை ஒரு இறையாண்மை மிக்க நாடாக உலக நாடுகள் அங்கீகரிக்கவேண்டும்...

       அண்மையில் ஐக்கிய நாடுகளின்  பொதுச்சபை கூடிய போது, ஐ. நா. - வில் தனக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை  பாலஸ்தீனம் இந்தமுறையும்  மீண்டும்  விடுத்தது. இந்த கோரிக்கைக்கு வழக்கம் போல் இந்தியா, சீனா, ரஷ்யா உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதே வழக்கம் போல் உலக ரௌடி  அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
                 பாலஸ்தீனம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இதற்கு ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. பல கல்வெட்டுகளையும்,  நினைவுச் சின்னங்களையும்  காட்டி  வரலாற்று ஆசிரியர்களும், நிபுணர்களும்  ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான அமைப்பான யுனெஸ்கோ பாலஸ்தீனத்திற்கு சொந்தமான பெத்லஹேம், நெபுல்லா ஆகிய வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் 17 நினைவுச் சின்னங்களை இதற்கு ஆதரவாக காண்பிக்கிறது. இந்த சின்னங்களை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும்  அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள்  தோற்கடித்தன. எண்ணெய் வளமிக்க மேற்காசியாவில் தனது மேலாதிக்கம் இருக்கவேண்டும் என்பதற்காக, இஸ்ரேலை உருவாக்கிய அமெரிக்கா, பாலஸ்தீனத்திற்கு எப்போதும் எதிராகவே உள்ளது என்பது தான் வெளிப்படையான வரலாறு.
              1950க்கு முன்பு  இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லை என்பது தான் உண்மையான வரலாறு. பாலஸ்தீனத்திற்கு சொந்தமான காசா, மேற்குகரை உள்ளிட்ட பல பகுதிகளையும் சிரியா, லெபனான் போன்ற பாலஸ்தீன அண்டை நாடுகளின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்து செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். ஆனால் பலஆயிரம் ஆண்டு செழுமையான கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பெயர்போன பாலஸ்தீனமே, இன்று ஒரு இறையாண்மை பெற்ற நாடாக மாற ஐ.நா. சபையில் போராடிக்கொண்டிருக்கிறது.
       இந்த நிலையிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடக்குமுறையையும் ராணுவ வல்லமையையும் எதிர்த்து பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக தீரத்துடன் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள இடதுசாரி சக்திகள் உள்ளன என்பது சற்று ஆறுதலான விஷயம்.. பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து, ஐ.நா. சபையில் முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை உலகில் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.
                இதற்கு முன்னோட்டமாக, யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள அதன் நிர்வாகக் குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 40 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, லாட்வியா உள்ளிட்ட 4நாடுகள் தான் எதிர்ப்பு தெரிவித்தன. 14 நாடுகள் நடுநிலைமை வகித்து விட்டன. இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபையில் இந்த முடிவு இறுதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. விரைவில் முழு உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கப்போகும் பாலஸ்தீனத்திற்கு இது முதல் வெற்றியாகும்.
              பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ், 1967 ஆம் ஆண்டுக்கு முந்தைய பாலஸ்தீன எல்லையை உலக நாடுகள் அங்கீகரிக்கவேண்டும்; இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீண்டும் பாலஸ்தீனத்திடமே ஒப்படைக்கவேண்டும்; இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்; இதுவே எங்களது முதலாவது இரண்டாவது மூன்றாவது விருப்பம் என்று அவர் கூறியுள்ளார். எனவே பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை மிக்க நாடாக உலக நாடுகள் அங்கீகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

கருத்துகள் இல்லை: