சனி, 22 அக்டோபர், 2011

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரைப் பற்களில் சிக்கிய கடாபி...!

                  கடந்த காலங்களில் உலகெங்கிலும், குறிப்பாக அரபு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி என்பது சரியான தலைமை இல்லாததால், அந்த மக்கள் எழுச்சியை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தவறாக வழிகாட்டப்படுகிறது என்பதற்கு நேற்று முன் தினம் லிபியாவில் நடந்த சம்பவம் என்பது இதற்கு ஒரு உதாரணமாகும். 
              எகிப்து நாட்டை தொடர்ந்து ஒன்றுபட்ட மக்கள் எழுச்சி என்பது லிபியா நாட்டிலும் தோன்றியது. நாற்பத்து இரண்டு ஆண்டுகால மும்மர் கடாபி ஆட்சியின் மீது வெறுப்புற்ற மக்கள் வெகுண்டெழுந்து போராடினர். இந்த மக்கள் போராட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தலைமையிலான  நேட்டோ படைகளை மக்களுக்கு ஆதரவாக இறக்கி விட்டது. எகிப்து நாட்டின் அதிபர் முபாரக்கை நாட்டைவிட்டே விரட்டியடித்தது போல் லிபியாவை விட்டு கடாபியையும் விரட்டியடிக்கும் பொருட்டு கடாபியின் வீட்டின் மீது குண்டுகளை பொழிந்தனர். சாவிற்கு பயந்து கடாபி தன் சொந்த ஊரில் ஒரு குழாயில் பதுங்கி இருந்த லிபிய அதிபர் கடாபியை கொடூரமான முறையில் கொன்றனர் என்பதை உலகமே பார்த்தது.
              லிபிய ஜனாதிபதி மும்மர் கடாபியை, தனது தலைமையிலான நேட்டோ படை நடத்திய கொடிய போரின் மூலம் படுகொலை செய்துவிட்டது என்பது தான் உண்மை.
            இராக்கில் சதாம் உசேனைப் பிடித்து, விசாரணை நாடகம் நடத்தி, பின்னர் தூக்கில் போட்டுக் கொலை செய்த அமெரிக்கா, கடாபிக்கு அந்த வாய்ப்பைக்கூட கொடுக்காமல், கிளர்ச்சியாளர்கள் என்ற பெயரிலான தனது ஆதரவாளர்களைக் கொண்டு அவரது கதையை முடித்துவிட்டது.
             ஆப்கானிஸ்தானைப் போலவே, இராக்கைப் போலவே, லிபியாவையும் எந்த நோக்கத்திற்காக அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தாக்கினவோ, அந்த நோக்கத்தில்- அந்நாட்டின் எண்ணெய் வளத்தைக் கேள்வி கேட்பாரின்றிக் கபளீ கரம் செய்கிற நோக்கத்தில்  அமெரிக்க ஏகாதிபத்தியம் வெற்றிபெற்று விட்டது.
      நாற்பதாண்டுகளுக்கு மேலாக கடாபி நடத்திய ஆட்சிக்கு எதிராக மக்களிடையே எழுந்த உணர்வை, உலகிலேயே மிகவும் தூய்மையான - விலை மதிப்புமிக்க லிபியாவின் பெட்ரோலியத்தை கைப்பற்றும் சூழ்ச்சியோடு, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது அமெரிக்க நிர்வாகம் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

கருத்துகள் இல்லை: