திங்கள், 3 அக்டோபர், 2011

இந்தியாவில் கழிப்பறையை விட கைப்பேசிகள் அதிகம் - கவலைப்படாத மத்திய அரசு

சுகாதார வசதி பற்றாக்குறை : யுனிசெப் மதிப்பீடு


                இந்தியாவில் திறந்தவெளியில் 63.8 கோடி பேர் மலம் கழிக்கிறார்கள். அதனால்  சுகாதார வசதி என்பது இந்தியாவில் பற்றாக்குறையாக இருக்கிறது என்று அண்மையில் யுனிசெப் (UNICEF) நிறுவனம் உலகளவில் மதிப்பீடு செய்ததில் இந்தியாவைப் பற்றி இவ்வளவு அழகாக குறிப்பிடுகிறது.
                 இந்தியாவில் போதிய சுகாதார வசதி இல்லாததால் 63.8 கோடி மக்கள் திறந்தவெளிப் பகுதிகளில் மலம் கழிக்கிறார்கள் என யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அப்படியென்றால், இந்தியாவில் அத்தனை கோடிப்  பேருக்கும் கழிப்பிடவசதி கிடையாது என்பது தான் அதற்கு பொருள் ஆகும்.
                உலக அளவில் உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில்,  58 சதவீதம் பேர் இந்திய மக்கள் என்பதை கேட்கும் போது நாமெல்லாம் வேதனைப்படவேண்டும். சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்த பின்னும் 
மக்களுக்கு கழிப்பறை வசதி செய்துத்தராத ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.  கடந்த 64 ஆண்டுகளாக எத்தனை முறை மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை இந்த நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். இதுவரை பதினோரு ஐந்தாண்டு திட்டங்களை பார்த்துவிட்டு, இதோ பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்கத்தை பார்க்கப் போகிறார்கள். மத்திய திட்டக்குழுவில் இதுவரையில் எத்தனை தலைவர்களையும், துணைத் தலைவர்களையும் இந்த நாடு பார்த்திருக்கிறது. 
ஆனால் இதுவரையில் எந்த அரசும் அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
                  யுனிசெப்பின் 2008ம் ஆண்டு மதிப்பீட்டின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் திறந்த வெளிகளில் மலம் கழிக்கிறார்கள். அப்படியென்றால் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் என்பது தானே இதற்கு பொருள்.  என்ன தான் பொருளாதார முன்னேற்றம் பற்றி பிரதமரும் மற்றவர்களும் பீற்றிக்கொண்டாலும், இத்தனை கோடி மக்கள் கழிப்பறையே இல்லாமல் இருக்கும் போது நாடு பொருளாதாரத்தில் முன்னேறி என்ன பயன்..? அல்லது இத்தனை கோடி மக்கள் கழிப்பறைக்கே வசதியில்லாத போது யாருடையப் பொருளாதாரம் தான் முன்னேறுகிறது என்பது தான் நமது கேள்வி..?
                அனால் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும், உரிய சுகாதார வசதி இல்லாத நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவைக் காட்டிலும் இந்த நாடுகளில் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தன் மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை  செய்து கொடுக்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
                    இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு கழிப்பறை இல்லாதது என்பது   மிகவும் வெட்கக் கேடானது என மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெட்கமில்லாமல் கூறியிருக்கிறார். 12வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டு, 2017ம் ஆண்டில் இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையைத் தவிர்ப்போம் என்றும் உறுதியளித்திருக்கிறார் என்பதை இந்திய மக்கள் வரும் ஆறு ஆண்டுகளில் மறந்துவிடக்கூடாது.

கருத்துகள் இல்லை: