செவ்வாய், 1 டிசம்பர், 2015

சகிப்புத்தன்மையின் அடையாளம் கம்யூனிஸ்ட்டுகளே...!


        சென்ற 29/11/2015 ஞாயிறன்று மதுரையில் நடைபெற்ற          
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்           
40ஆம் ஆண்டு  விழா மாநாட்டை துவக்கி வைத்து எழுத்தாளர்        
பிரபஞ்சன் ஆற்றிய உரையிலிருந்து சிறுபகுதி...                               

           தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமைக்கும் அடையாளமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  திகழ்கிறது. இந்தப் பிரபஞ்சனையும்   உருவாக்கியது முற்போக்கு அமைப்புகள் தான். யு.ஆர்.அனந்தமூர்த்தி, இப்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரத்துக்கு வந்தால் நான் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். அதனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தினம் தினம் அவருக்கு டார்ச்சர் கொடுத்தனர். அவர் மிகுந்த மனவேதனையுடன் தான் இறந்தார். அதுபோலத்தான் மதங்களை மறுத்து மனிதர்கள் பக்கம் நிற்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பன்சாரே, தபோல்கர், கல்புர்கி போன்ற அறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகள் மதவெறியர்களால் நடத்தப்பட்டிருந்தாலும் காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியின் கீழேயே இது அரங்கேறியுள்ளது.
           சிவாஜியை உயர்த்தியும், திப்புசுல்தானை தாழ்த்தியும் தற்பொழுது விமர்சிக்கிறார்கள். இரண்டுமே தவறானது. சிவாஜியை தங்கள் நோக்கத்துக்காகப் பயன்படுத்தியதை அம்பலப்படுத்தி அவரது உண்மை வரலாற்றை சிறு புத்தகமாக வெளியிட்டதற்காகத் தான் பன்சாரேவை கொலை செய்தார்கள் மதவெறியர்கள். எதிரி நாட்டு ராணி சாவித்திரி தேசாயை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியதைக் கேள்விப்பட்ட சிவாஜி, தனது உயர்வுக்கு காரணமாக இருந்த  தளபதியையே  கண் இரண்டையும் தோண்டி சிறையில் அடைக்க உத்தரவிட்டான். ரஞ்சி பட்டேல் எனும் உயர் சாதிக்காரன் தெருவில் சென்ற பெண்ணை மானபங்கம் செய்துவிட்டதால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்பதை கேள்விப்பட்ட சிவாஜி, ரஞ்சிபட்டேலின் இரு கைகளையும், இரு கால்களையும் துண்டித்து சிறையில் அடைத்தான். இத்தகைய உண்மைகளை எல்லாம் பொறுக்காமல் தான் மதவெறியர்கள் பன்சாரேவை கொலை செய்தார்கள். எல்லா காதலும் கைக்கிளையில்தான் துவங்குகிறது. ஆனால், அதை திணையிலேயே சேர்க்கவில்லை. மக்கள் மொழியில் பாடியதை இழிசனர் வழக்கு என்றனர். அது அக இலக்கியம் அல்ல. அகப்புற இலக்கியம் என்றே வகுத்துள்ளனர்.
            நதியாக இருந்த கூவம் சாக்கடையாக மாறியதைப்போல தான்  நமது சமூகம் மாறியிருக்கிறது. இந்திய ஆட்சியாளர்களைவிட பிரெஞ்சுக்காரர்கள் சிறந்தவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். பாண்டிச்சேரியில் பொன்னுத்தம்பி என்ற வழக்கறிஞரை செருப்பும் கோட்டும் போட்டுக்கொண்டு வாதாடக்கூடாது என்று கட்டளையிட்டவர்கள் புதுச்சேரி பிரெஞ்ச் ஆட்சியாளர்கள். ஏகாதிபத்தியம் எத்தகையதானாலும் அது நல்லதாக இருந்தது இல்லை. 
       பிரான்ஸ் அறிஞர் ஜீன்பால் சர்தார் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால், வருடம்தோறும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று தனது உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்வார். கம்யூனிஸ்ட் கட்சியை இவ்வளவு கடுமையான விமர்சனம் செய்யும் நீங்கள் ஏன் அதில் உறுப்பினராக நீடிக்கிறீர்கள் என்று கேட்ட போது, எனக்கு இப்படி விமர்சனத்தை முன்வைக்கக் கற்றுக்கொடுத்ததே கம்யூனிஸ்ட் கட்சிதான். அவர்கள்தான் எத்தகைய விமர்சனத்தையும் சகித்துக்கொள்பவர்களாகவும் அதற்கு பதில் சொல்பவர்களாகவும் இருக்கின்றனர் என்றார். 
           எந்தக் காலத்திலும், எந்தத் தனிமனிதனும் அமைப்பைவிடப் பெரியவன் இல்லை. அமைப்புதான் நம்மை வழிநடத்துகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.     

நன்றி :

கருத்துகள் இல்லை: