ஞாயிறு, 20 டிசம்பர், 2015

தமிழக மக்களின் கோபத்தை நீர்க்கச் செய்துவிடாதீர்கள்...!


           கடந்த ஐம்பது ஆண்டு காலமாக  திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்து தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டதை உணர்ந்துகொண்ட தமிழக மக்களின் கோபத்தை, தாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த இரு கழகங்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்ட தமிழக மக்களின் அதிருப்தியை வழக்கம்போல் திசைத்திருப்பும் வேலைகளில் ஊடகக்காரர்களோடு சேர்ந்து ஒரு கூட்டம் இறங்கியுள்ளது.  தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று கடந்த சில தினங்களாக முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இன்று மதுரையில் அவரை முன்னிறுத்தி ஒரு பேரணிக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவிற்கு எதிராக திரும்பிவிட்ட ஆனந்தவிகடன் போன்ற ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்குகின்றன. 
             ஆனால் எல்லாவற்றையும் இழந்து தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தை மறுமலர்ச்சி அடையச்செய்ய வேண்டிய இந்த சூழ்நிலையில் இதுபோன்ற திசைத்திருப்பலும், குழப்பமும் தேவை தானா என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும். 
          சகாயம் என்பவர் ஒரு நேர்மையான அரசு அதிகாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ''இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து'' என்ற முழக்கத்துடன், ஊழலாலும், இலஞ்சத்தாலும்  புரையோடிப்போன தமிழக அரசில் பணிபுரியும் ஓர் அரசு உயர்அதிகாரி என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. தமிழகத்தில் இலஞ்சமே இல்லாமல் அரசுப்பணியாற்றும் ஊழியரைப் பார்க்கும்போது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் தான் இருக்கும். அப்படி அதிசயக்கத்தக்கவராக திரு.சகாயம் தெரிவதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால்  அவரைப்போன்றே  நேர்மையாக பணிசெய்யும்  அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் நிறைய இருக்கிறார்கள். இதுபோன்று நேர்மையாக பணிசெய்யும் அரசு அதிகாரிகளை தொடர்ந்து  பணிசெய்ய அனுமதியுங்கள். 
                   நாட்டுக்கு நேர்மையான ஆட்சியாளர்கள் தேவை என்று நீங்கள் எப்படி கவலைப்படுகிறீர்களோ...அதேப்போல் அந்த ஆட்சியாளர்களை வழிநடத்த நேர்மையான அதிகாரிகளும் தேவை என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.  ஆட்சி என்பது இரட்டை மாட்டு வண்டி போலவாகும். வண்டி தடம் மாறாமல் நேர்வழியில் செல்லவேண்டுமென்றால் இரண்டு மாடுகளும் சரியாக செல்லவேண்டும். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அந்த இரண்டு மாடுகள் போன்றவர்கள். 
               தவிர தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அப்படியிருக்க நீங்கள் சொல்வது திரு.சகாயம் எதாவது  ஒரு தொகுதியில் மட்டும் தான் நிற்க முடியும்.  இவரோடு சேர்ந்து வெற்றிபெறும் மற்ற மந்திரிகளோ அல்லது எம்எல்ஏக்களோ இவரைப்போன்று நேர்மையாளர்களாக தான் இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே.
         அதுமட்டுமல்லாது, கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக - அதிமுகவின் தனிமனித துதியால் தான் தமிழ்நாடு சீரழிந்து நாறிப்போனது. மீண்டும் கண்மூடித்தனமான அதே துதியை சகாயம் விஷயத்திலும் பாடாதீர்கள். 
            மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களைப் போல் கூட்டணி ஆட்சியால் தான் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கமுடியும். நேர்மையான, எளிமையான, மக்களுக்கான நிர்வாகத்தை அளிக்கமுடியும். அந்த மாநிலங்களை ஆட்சி செய்த இடதுசாரி கட்சிகள் மீது சொத்து குவிப்பு வழக்கோ, ஊழல் குற்றச்சாட்டுகளோ இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
           இப்படித்தான் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பு, ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதக்கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரும்பிய போது, ஊடகங்களும், கார்ப்போரேட் கம்பெனிகளும் அன்னா ஹசாரே என்ற ''யோக்கியவானை'' காட்டி மக்களை குழப்பி - திசைத்திருப்பி கடைசியில் ஊழல் மற்றும் மதவாதக் கட்சியான பிஜேபிக்கு வாக்களிக்கச்செய்தனர். அதே செயலைத்தான் இப்போதும் ஊடகங்களும், ஒரு சில என்.ஜி.ஓ-க்களும் சேர்ந்து தற்போது தெளிவான  சிந்தனையில் இருக்கக்கூடிய தமிழக மக்களை திரு.சகாயம் அவர்களைக் காட்டி குழப்புகிறார்கள். தெளிந்த குட்டையை குழப்பி மீன்பிடிக்கப் பார்க்கிறார்கள். 
        அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம், திமுக., அதிமுக கட்சிகள் மீதான மக்களின் கோபத்தை - அதிருப்தியை தவறாக திசைத்திருப்பி நீர்க்கச்செய்துவிடாதீர்கள். அப்படி செய்தால் அந்த இரு கட்சிகளுக்கே மீண்டும் சாதகமாக முடிந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்பது தான்.  

கருத்துகள் இல்லை: