புதன், 16 டிசம்பர், 2015

எழுதித் தீராத வாதை - தமிழகத்தின் அவலநிலை...!


 கட்டுரை ஆக்கம் : தோழர். த. ஜீவலட்சுமி                                                                  


                   வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூரையற்ற வீட்டில் உடல் முழுவதும் கொப்புளங்களோடு அசைவற்றுக் கிடந்த இரண்டு மாதக் குழந்தையின்  முகம் மனதில் ஏற்படுத்தும் வாதை எழுதித் தீராது தான். தமிழக அரசின் அலட்சிய வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் இப்பேரழிவையும் அவலத்தையும் பார்த்தும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவிற்கும், ஒரு பாட்டில் தண்ணீருக்கும் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட சகமனிதர்களை, சிறுநீர் கழிக்க மறைவிடமின்றித் தவிக்கும் சகப்  பெண்களை சந்தித்தும் வருவதில் ஏற்பட்டிருக்கும் உள்ளக் குமுறலைக்   கொட்டித்தீர்க்க முடியாதது. பேரழிவைச் சந்தித்திருக்கும் சென்னை நகரின் நடுவே, கண்டுபிடிக்க இயலா நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நடுவே, மழை நின்று ஆறு நாட்களுக்குப்பின்னும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த குடிசைகள் நினைவில் ஆடுகின்றன. இப்பருவத்தின் முதல் மழையை எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாகத்தான் சென்னைவாசிகளும் வரவேற்றோம் என்றாலும் நவம்பர் முதல்வாரத்திலேயே இது வழக்கமாகப் பெய்யும் பருவமழையில்லையென உணர முடிந்தது.சென்னையிலும் கடலூரிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அம்மழை. அப்போதே அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு இருந்திருக்க வேண்டும் .
              ஆனால் அரசின் செயல்பாடு மிகுந்த மெத்தனத்தோடு இருந்தது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய இரு நாட்கள் பெய்த மழை மனதில் ஏற்படுத்திய அச்சம் விவரிக்க இயலாதது. அம்மழையின் வேகமும் அடர்த்தியும் அழிவின் சமிக்ஞை போல் இருந்தது . அவ்வுணர்வு மழையால் விளைந்ததல்ல. கடந்த மழையில் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளம், உயிரிழப்பு, அதை அரசு எதிர்கொண்ட அலட்சியமான விதம் இவற்றால் விளைந்தது.வெள்ளம் பற்றி மக்களுக்கு முறையாக அறிவிப்பு கொடுக்காத நிலையில் ஏற்பட்டிருக்கும் இழப்பிற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமே முழுமுதற் காரணம். மழை கண்டு மகிழ்ந்து மாமழை போற்றிய தமிழக மக்களை மழை கண்டு அச்சங்கொள்ளச் செய்தது தான் இத்தனை ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி செய்த சாதனை. தூர்வாரப்படாத நீர்நிலைகள், மணற்கொள்ளை, நீர் மேலாண்மையில் நிர்வாகத் துறையின் பின்தங்கிய நிலை, முறையான திட்டமிடல் இன்றி விஸ்தரிக்கப்பட்ட நகரம் என வெள்ளத்திற்கான காரணங்கள் ஆயிரம் என்றாலும், எல்லாம் தம் ஆணைக்கிணங்க நடக்க வேண்டுமென்ற தமிழக முதல்வரின் ஆணவப்போக்கே இந்த அழிவிற்கு பிரதான காரணம். அதனால் தான் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை படிப்படியாக மழை குறைந்த நவம்பர் இரண்டாம் வாரத்தில் திறந்து விட பொதுப்பணித்துறை கொடுத்த ஆலோசனை கிடப்பில் கிடத்தப்பட்டு பேரழிவிற்கு இட்டுச்சென்றுள்ளது.
            மக்கள் அச்சங்கொண்டது போலவே நவம்பர் 30 ல் மழைபெய்த சில மணிநேரத்திலேயே வெள்ளமும் இருளும் நகரைச் சூழ்ந்தது . சில மணிநேரத்தில் வீட்டிலும் சாலைகளிலும் பெருக்கெடுத்த வெள்ளத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிதுடித்து இருளிலும் நீரிலும் இரண்டு நாட்கள் போராடி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் நின்றனர்.அசோக் நகர் பகுதியில் வெள்ளத்தில் மிதந்து வந்த உடலைத் தேடி உறவினர்கள் வரக்கூடும் என மரத்தில் கட்டி வைத்து விட்டு வந்ததாக ஒரு நண்பர் சொன்னார். சென்னை மேற்கு நமசிவாயபுரம் பகுதியில் வெள்ளம் அடித்துப் போன ஒருவரின் உடல் நாகப்பட்டினத்தில் கிடைத்ததாக நிவாரணப் பணியின் போது இறந்தவரின் உறவினர்கள் கூறினார்கள் . இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அரசு சொல்லும் உயிரிழப்பு எண்ணிக்கை முழுமையானதல்ல என்பதையும் உணர முடிகிறது.புகைப்படத்தோடு வீதியில் உறவினர்களைத் தேடி அலையும் மக்கள், பசியிலும் குளிரிலும் வாடிய குழந்தைகள், அடையாளம் காணப்படாமல் மருத்துவமனைகளில் கிடக்கும் பிணங்கள் என சென்னை கடந்த இரு வாரங்களாக துயரத்தின் உருவமாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே முகாம்கள், உணவுப் பொட்டலங்கள்.
         விரையும் வாகனங்கள், சூழும் மக்கள். இந்த சூழலில் பணியாற்றவும் மக்களின் தேவைகளை உணரவும் மக்களுக்கான தத்துவப் பின்னணி கொண்டவர்களாலேயே இயலும். ஆம், இங்கு கொடுப்பது பெருமைக்குரியதாகவோ பெற்றுக் கொள்வது மகிழ்ச்சிகரமானதாகவோ இருக்கவில்லை .மழையில் உயிரைப் பணயம் வைத்து பிறரைக் காப்பாற்றியவர்கள், இரவு பகலாக முகம் பாரா மனிதர்களுக்கு உணவு சமைத்தவர்கள், அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தவர்கள், பெரிய அளவில் இல்லையென்றாலும் பத்து பிஸ்கட் பாக்கெட்டுகளை வழியில் அமர்ந்து இருக்கும் மனிதர்களுக்கு கொடுத்துப் போனவர்கள் என சென்னை மக்கள் தாமே அரசாங்கமாக செயல்படத்தொடங்கினார்கள்.ஆளுங்கட்சி டிசம்பர் ஐந்து வரை நிவாரணக் களத்தில் இல்லை. ஆறாம் தேதி சாப்பாட்டுப் பொட்டலத்தில் ஸ்டிக்கர் ஒட்டி நிவாரணப் பணிகளைத் துவக்கினர்.திமுகவினரோ தாங்கள் குறி வைத்திருக்கிற, அரசியல் ரீதியாகப் பலனளிக்கும் என நம்பிக்கையுடைய மிகச் சில இடங்களிலேயே நிவாரணப் பணி செய்தனர்.
           இடதுசாரிக்கட்சிகளின் வெகுஜன அமைப்புகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை இன்று வரை முனைப்போடு செய்து வருகின்றனர். முகாம்களில் இருந்து வீடு நோக்கிப் போகும் எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டாலும் கூரையில்லாத, சுவரில்லாத சேறும் சாக்கடையும் நிரம்பிய வீட்டைப் பகல் முழுவதும் சுத்தம் செய்ய முயன்று சோர்ந்து, இரவு முகாமுக்குத் திரும்பும் நிலை தான் நீடிக்கிறது. ‘சென்னை இயல்புக்கு திரும்பியது’ என்று கூறுவதெல்லாம், ‘வெள்ளத்தை’ ராட்சத மோட்டார் கொண்டு இறைத்து வேலையாட்களை அமர்த்தி வீட்டை சரி செய்யும் திராணி கொண்ட மேல்தட்டு வர்க்கத்தின் கூற்றே.“நம்ம வீடுகளில் கூட அதெல்லாம் இருக்காது; அவங்க டிவி, பிரிட்ஜ் எல்லாம் அந்தக் குடிசைக்குள்ள வச்சிருக்காங்க” என மக்களை வேடிக்கை பார்த்தபடி ஒருவர் சொன்னார். நிவாரணப் பணியின் போது ஒரு பெண் சொன்னார், “ஒரு வருசம் சீட்டு கட்டி வாங்குன பிரிட்ஜ்ம்மா, எட்டு வருசமா ஆசப்பட்டு இப்பதான் வீட்டு வேலைக்குப் போன காச சேத்தி வாங்கினேன்“ என்றார்.நடுத்தர வர்க்கக் குடும்பங்களே தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே பொருள் வாங்கும் நிலை கொண்ட நம் சமூகத்தில் இம்மக்களின் இழப்பை எப்படி ஈடு செய்வது?எல்லாம் போன நிலையில் எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வியை அவர்கள் எப்படி எதிர் கொள்வது? இக்கேள்வி தரும் அழுத்தம் அம்மக்களின் மனங்களை அழுத்திக் கொண்டிருப்பதை எப்படி சரி செய்வது? குடிசைப் பகுதிகளில் பார்க்குமிடங்களிலெல்லாம் பெண்கள், வீட்டில் புகுந்திட்ட சாக்கடைச் சேற்றையும் அழுக்கையும் கழுவியே ஓய்கிறார்கள். அன்றாடம் சுரண்டலை சந்தித்த பெண்களின் உழைப்பை இவ்வெள்ள பாதிப்பும் சுரண்டுகிறது.வேறென்ன செய்வதென்பதறியா நிலையில் அவர்கள் துணி துவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதில் அவர்கள் தம் மனஅழுத்தத்தை துவைப்பது போல் இருக்கிறது.சாதி, மதம் கடந்து சோறு போட களத்தில் நின்றவர்கள் கூட அவர்களோடு வீடுகளை, வீதிகளை சுத்தம் செய்யவில்லை. மீண்டும் அதே ஒடுக்கப்பட்ட வர்க்கமே பாதுகாப்பற்ற இவ்வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.இவையெல்லாம் இயல்பென வழக்கம் போல் கடந்து போய்க் கொண்டிருக்கிறது சமூகம்.போதாக்குறைக்கு ‘இதுதான் சரியான சமயமென்று ஆற்றோர குடிசைகளை அரசு அகற்றி விட வேண்டும்‘ என்ற விசமத்தனமான கோரிக்கையை ஒரு கூட்டம் முன் வைக்கிறது . அப்படி சென்னை நகரிலிருந்து தூக்கியெறியப்பட்ட செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் அடைந்த பாதிப்புகள் அளவிட முடியாதது. ஆற்றோரத்தில் இருக்கும் மக்களை வீடு கொடுக்கிறோம் என பள்ளத்தாக்கில் தள்ளும் வேலையைத் தான் அரசுகள் செய்திருக்கின்றன என்பதை இவர்கள் உணராதவர்கள் அல்ல. சென்னை குடிசைகளுக்கானதல்ல என்ற அவர்களின் முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்பு அது.சூர்யா நகர் பகுதியை சேர்ந்த வீட்டு வேலை செய்யும் தோழி, வீட்டுப் பொருட்கள் முழுவதும் இழந்த நிலையில், தனக்கு உதவ முன் வந்த வேலை கொடுக்கும் வீட்டாரை தன் பகுதிக்கு அழைத்து வந்து தன்னை விட பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவுமாறு வேண்டினார். அவர்கள் அப்பெண்ணின் கோரிக்கையை ஏற்று உதவ முன் வந்திருக்கின்றனர். இதுதான் உழைக்கும் வர்க்கத்தின் மனநிலை. இப்படி மக்கள் நமக்கு நாமே என உதவி செய்து வருகின்றனர். நிவாரணப் பணி சற்றே ஓய்ந்து பல பகுதிகளில் மாணவர்கள்,இளைஞர்களால் தூய்மைப்பணி தொடங்கிவிட்டது.பள்ளிகளில் இருக்கும் மக்கள் தம் இருப்பிடங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் . இனி அவர்கள் முதலில் இருந்து தொடங்க வேண்டும். அதற்கான மூலதனம் ஏதும் அவர்களிடம் இல்லை. கணக்கெடுப்பு முடிந்து வங்கிக் கணக்கிற்கு பணம் வரும் வரை நாங்கள் வாழ்வதெப்படி என்ற அம்மக்களின் கேள்விக்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?நிவாரணப் பணிகளில் செயலற்றுக் கிடந்தது போல், ஆயிரம் ஆயிரம் கோடிகளை வைத்துக்கொண்டு செயலற்று கிடக்க இந்த அரசாங்கத்தை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.மக்கள் நலன் காக்கும் சக்திகள் ஒருங்கிணைந்து நிவாரணப் பணி செய்த அதே வீச்சில் அரசை இயங்கச் செய்ய வேண்டும். சொந்த நாட்டில் அகதிகளாக அல்லாடுமளவு மக்களை வஞ்சித்தவர்கள் மக்களிடம் பாடம் கற்பார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் பணி செய்வோம்! 

நன்றி : 
தீக்கதிர் 

கருத்துகள் இல்லை: